”எல்லோரையும் மதித்து தி.மு.க. ஆட்சி நடத்தும்” -மு.க.ஸ்டாலின்
தமிழ் மக்கள் அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு என்ற தெளிவைக் கொண்டவர்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காந்திசிலை பகுதியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையில் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருப்பதை அவர் பட்டியலிட்டார். யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக இருப்பது தி.மு.க. அல்ல என்று கூறிய ஸ்டாலின், அனைவர் உணர்வுக்கும் மதிப்பளித்து, எல்லோரையும் மதித்துத்தான் தன்னுடைய ஆட்சி நடக்கும் என்று உறுதி அளித்தார்.
வடமாநிலத்தவரைத் தமிழ்நாட்டில் திணிக்கவும், ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்து பார்த்து உருவாக்கிய தமிழகத்தைச் சிதைக்கவும் பார்ப்பதாகவும் ஸ்டாலின் சாடினார். தலைகொடுத்தாவது தமிழகத்தை நிச்சயமாக தி.மு.க. பாதுகாக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல இது என்று குறிப்பிட்ட ஸ்டாலின், நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்துவிடக்கூடாது என்றார்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் மயிலம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அரசு பணத்தை தேர்தலுக்காக பயன்படுத்தும் ஆட்சி இது என்று அதிமுக அரசை விமர்சித்தார்.
பின்னர் சென்னை பல்லாவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
Comments