தரமற்ற தடுப்பணையால் 3 குழந்தைகள் பலி..! ஆயுள்காலம் 5 மாதம் தான்..!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சறுக்கு சுவராக மாறிய தடுப்பணையின் குட்டையில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். 6 வயது சிறுவனை காப்பாற்ற முயன்று உயிரைவிட்ட சிறுமிகளின் தியாகம்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான சுதாகர், மைக்கெல் ஆகியோரது குழந்தைகளான 7 வயது மகள் சுடர்விழி, 9 வயது மகள் சுருதி, 6 வயது மகன் ரோகித் ஆகியோர் வெளியே விளையாடச் சென்றிருந்தனர்.
குழந்தைகள் 3 பேரும் புதிதாக கட்டப்பட்டு உடைந்து சறுக்கு மரம் போல சாய்ந்து கிடக்கும் தடுப்பணையில் விளையாடிக் கொண்டு இருந்தபோது தடுப்பணை சறுக்கி விட்டது. இதனால் சிறுவன் ரோகித் உள்ளே விழுந்ததால், தம்பியை மீட்க போராடிய இரு சிறுமிகளும் தவறி உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.
விளையாடச்சென்ற குழந்தைகளை காணாத பெற்றோர் குழந்தைகளை தேடி பார்த்த போது ஒரு குழந்தை உடைந்த தடுப்பணை குட்டையில் மிதந்துள்ளது.
இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அந்த குட்டைக்குள் இறங்கி குழந்தைகளை தேடிய போது 10 அடிக்கு மேல் ஆழத்தில் குழந்தைகள் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து குழந்தைகளை மீட்டனர் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தான் 15 லட்சம் ரூபாய் திட்டமதிப்பில் சின்ன ஓடையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட தடுப்பு அணை வெள்ளத்திற்கு தாக்கு பிடிக்க இயலாமல் உடைந்து சரிந்ததால் குழந்தைகளின் உயிரை வாங்கும் சறுக்கு சுவராக மாறிப்போகியுள்ளது என்று வேதனையை தெரிவித்தனர்.
5 மாதத்திற்குள்ளாக உடைந்து போகும் வகையில் தரமற்ற தடுப்பு அணையை கட்டி 3 உயிர்களை பலிவாங்க காரணமான சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments