மதுரையில் பனிமலை.. நிலாவுக்கு சுற்றுலா.. சுயேட்சையின் அலப்பறை..!

0 5537

தன்னை வெற்றிபெற வைத்தால் தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பேன் என்றும் நிலவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும் கூறி சுயேட்சை வேட்பாளர் ஒருவர் குப்பை தொட்டியில் ஓட்டுபோடச்சொல்லி பிரச்சாரம் செய்து வருகின்றார்.

குடிநீரை பதனீராக்கும் திட்டம் தருவதாகவும், அனைத்து நதிகளையும் இணைப்பதாகவும் கூறி பாட்டிலில் உள்ள நீரை தாமிரபரணியில் ஊற்றி ஊரார் காதில் பூசுற்றும் கஞ்சா கருப்பு ச.ம.உ காமெடி சினிமாவில் பிரபலம்..!

அதே பாணியில் மதுரை தெற்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கியுள்ள துலாம் சரவணன் என்பவரும், தான் தேர்தலில் வெற்றி பெற்று ச.ம.உ ஆனால் என்னவெல்லாம் செய்வேன் என்று கஞ்சா கருப்பை மிஞ்சும் அளவுக்கு நகைச்சுவை உணர்வுடன் தேர்தல் வாக்குறுதிகளை துண்டுபிரசுரமாக அடிச்சி விட்டுள்ளார்.

* தொகுதி மக்கள் அனைவருக்கும் ‘ஐபோன்’ வழங்கப்படும்.

* உலக வெப்பமயம் ஆவதால் தனது தொகுதி சில்லென இருக்க 300 அடி உயரத்தில் செயற்கை பனிமலை உருவாக்கப்படும்.

* விடுமுறை நாளில் மக்கள் பொழுதுபோக்குவதற்காக செயற்கை கடல் உருவாக்கப்படும்.

* தேர்ந்தெடுக்கப்படும் 10 பேர் சுற்றுலா பயணமாக 100 நாட்கள் நிலவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

* மக்கள் அனைவருக்கும் நீச்சல் குளத்துடன் 3 மாடி வீடு கட்டித்தரப்படும்

* ஒவ்வொரு வீட்டுக்கும் சிறிய ரக ஹெலிகாப்டர் வழங்கப்படும்

* இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும்

* பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் நகைகள் வழங்கப்படும்

* தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்.

* இளைஞர்கள் தொழில் தொடங்க ஆளுக்கு ரூ.1 கோடி மானியம்.

* போக்குவரத்து நெரிசலை குறைக்க கால்வாய்கள் வெட்டப்படும். இதில் பயணம் செய்ய வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும்.

இப்படி இந்த சுயேட்சை வேட்பாளர் அடித்து விட்டுள்ள 35 வாக்குறுதிகளும் குபீர் சிரிப்பு ரகம்..!

வாக்குறுதி எல்லாம் நல்லபடியா சொல்லிட்டு, உங்கள் வாக்குகளை குப்பை தொட்டியில் போடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் சரவணன், ஏன் என்று விசாரித்தால் குப்பை தொட்டித்தான் அவரது சின்னமாம்..!

ஏற்கனவே இரு தனியார் தொலைக்காட்சிகளில் ஓடி ஓடி செய்திகளை “கவர்” செய்த துலாம் சரவணனை, அரசியல் ஆசை ஆட்டிப்படைத்ததால் வெள்ளையும் சொள்ளையுமாக தேர்தல் அரசியலில் குதித்து மக்களை கவர கவர்ச்சிகரமான அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

அதே நேரத்தில் நல்லது செய்கிறேன் என ஓட்டு வாங்கிச்செல்லும் அரசியல் வாதிகள் மத்தியில் தனது கனவையே வாக்குறுதியாக அளித்து மக்களையும் கனவுலகில் மிதக்க வைக்க முயன்று வருகிறார் இந்த கவர் சுயேட்சை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments