சிமெண்ட், செங்கல் இல்லை : முற்றிலும் கிரானைட்டுகள்; ரூ.1,800 கோடியில் 1,400 ஏக்கரில் உருவான தெலங்கானா திருப்பதி கோயில்!
இந்தியாவின் பணக்கார கோவில் என்றழைக்கப்படும் திருப்பதி கோவிலை போன்றே தெலுங்கானாவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் கோவிலின் கட்டுமானம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ் ஆந்திராவில் இருந்து தெலங்கானாவை தனிமாநிலமாக பிரிக்க கடும் போராட்டங்களை நடத்தியவர். தனி தெலுங்கான உதயமானால் இந்தியாவின் பணக்கார கோவிலான திருப்பதி கோவிலுக்கு இணையாக யாதகிரிகுட்டாவிலுள்ள பகவான் லட்சுமி நரசிம்ம குகைக்கோயிலை மாற்றுவேன் என்றும் அப்போது சந்திரசேகரா ராவ் உறுதியளித்தார். கடந்த 2014 ம் ஆண்டில் ஆந்திரா இரண்டாக பிரிக்கப்பட்டு தனி தெலுங்கானா உதயமானது. 2016ம் ஆண்டு சந்திர சேகர் ராவ், தான் வாக்குறுதியின்படி, யாதத்ரி கோயில் மேம்பாட்டு ஆணையத்தை (ஒய்.டி.டி.ஏ) உருவாக்கினார். இதற்கு, ரூ.1,800 கோடி பட்ஜெட்டும் ஒதுக்கப்பட்டது.
ஹைதராபாத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ள யாதகிரிகுட்டாவின் அழகிய பசுமை நிறைந்த மலையின் மேல் பகவான் லட்சுமி நரசிம்ம குகைக் கோவில் உள்ளது. குகைக் கோயில் அமைந்துள்ள பிரதான குன்று, அதையொட்டியுள்ள 8 மலைகள், பசுமையான காடுகள் நிறைந்து காணப்படும். சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் 2,500 சதுர அடி மட்டுமே இருந்தது. தற்போது, 1,400 ஏக்கர் பரப்பளில் மறு கட்டுமானம் செய்யப்பட்டு ஆந்திராவின் திருப்பதி கோவிலுக்கு இணையாக, பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
இந்த வைஷ்னவ கோவிலின் பழங்கால அகம சாஸ்திர விதிகளின்படி கட்டப்பட்டு வருகிறது. கோவில் கட்டுமானத்துக்கு செங்கற்கள், சிமெண்ட், கான்கிரீட் போன்றவை பயன்படுத்தாமல் புனரமைக்கப்படுகிறது. மாறாக தெலுங்கானாவின் காகதீய கட்டடக்கலையை பின்பற்றி கிருஷ்னாசிலா எனப்படும் கருப்பு கிரானைட்களை மட்டுமே கோவில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சுமார் 1000 ஆண்டுகளுக்கு எந்தவிதமான இயற்கை சீற்றங்களையும் எதிர்கொண்டு ,கம்பீரமாக இந்த கோயில் காலத்துக்கும் நிலைத்து நிற்கும்.
2016ம் ஆண்டு தொடங்கிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் கனவுத் திட்டமான யாதத்ரிகுட்டா கோயில் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. புஷ்கர்னி எனப்படும்பக்தர்கள் நீராடும் சிறிய குளம் கல்யாண கட்டா எனப்படும் முடிகாணிக்கை வழங்கும் அரங்கம்., பிரசாதங்கள் தயாரிக்கும் கூடம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் மட்டுமே நிறைவடையாமல் உள்ளன. இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகளும் முடிவடைந்து விடும். வரும் மே மாதத்தின் தொடக்க வாராத்தில் கோலகலமாக பிரம்மாண்ட பகவான் லட்சுமி நரசிம்ம கோயிலின் திறப்பு விழா நடத்தப்படும் என்றும் யாதத்ரி கோயில் மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு, திருப்பதி கோவில் ஆந்திராவிற்கு சென்று விட்டது. இதனால், வருத்தத்தில் இரந்த தெலுங்கானா மாநில மக்களுக்கு பகவான் லட்சுமி நரசிம்ம கோவில் ஆறுதலாக அமையும் என்பதில் ஐய்யமில்லை!
Comments