விருச்சககாந்த் பாபு ... 'காதல்' பட கிளைமாக்ஸ் போலவே மாறிய பரிதாபம் !
காதல் படத்தில் விருச்சககாந்த் என்ற பெயரில் நடித்திருந்த காமெடி நடிகர் பாபு கடைசியில் அந்த படத்தின் ஹீரோ போலவே சாலைகளில் சுற்றி திரிந்து மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் விருச்சககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. மேன்சனில் தங்கி டைரக்டர் கனவில் இருக்கும் இயக்குநரிடம், சான்ஸ் கேட்டு போவது போன்று விருச்சகாந்தின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். காதல் படத்தில் நடித்தால் ஹீரோவாகதான் நடிப்வேன் இந்த வேறு எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கமாட்டேன் என்று வசனம் பேசுவார். இந்த வசனம் மிகுந்த பாப்புலரானது. விருச்சககாந்த்தும் கொஞ்சம் பாப்புலர் ஆனார். ஓரளவுக்கு சிறந்த காமெடி நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சினிமாவில் எல்லோருக்கும் வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைந்து விடாதே. காதல் படத்துக்கு பிறகு, பாபபுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சூளை பகுதியில் சிறிய வீட்டில் தாய், தந்தை உடன் பிறந்தவர்களுடன் பாபு வசித்து வந்துள்ளார். பாபுவின் தாயும் தந்தையும் அடுத்தடுத்து இறந்து போயுள்ளனர். இதனால், பாபு மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, சாலைகளில் கண்டபடி சுற்றி அலைந்தார்.
கொரோனா வேறு வந்து பாபுவின் வாழ்க்கையை சிதைத்து போட்டு விட்டது. லாக்டவுன் காலத்தில் உணவு, உடை கிடைக்காமல் மேலும் கஷ்டப்பட தொடங்கினார். அலங்கோல நிலையில் பாபு, சுற்றி திரியும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நடிகர்கள் சாய்தீனா, அபி சரவணன் ஆகியோர் அவருக்கு உதவினர். சென்னையில் கிடைத்த இடத்தில் உறங்குவது கிடைத்ததை உண்பது என்று பாபு வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இரு நாள்களுக்கு முன்பு ஆட்டோ ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த பாபு ஆட்டோவிலேயே இறந்து கிடந்துள்ளார். நடிகர் பாபுவின் மரணம் சமூகவலைத் தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. காதல் படத்தில் ஹீரோ பரத் கிளைமாக்ஸ் காட்சியில் மனநிலை பாதித்து தெரு தெருவாக சுற்றி வருவார். அதே போலவே, விருச்சககாந்த் பாபுவும் தன் வாழ்க்கையின் கடைசிகட்டத்தில் சுற்றி வந்துள்ளார். ஆனால், கண்டுகொள்ளத்தான் யாருமில்லை. சினிமா உலகில் எளிய கலைஞர்கள் வாழ்க்கை எப்போதும் சோகத்தில்தான் முடியும் என்பதற்கு தீப்பெட்டி கணேசனை தொடர்ந்து பாபுவும் உதாரணமாகியுள்ளார். எளிய கலைஞர்களுக்கு கை கொடுக்க திரைப்பட சங்கத்தினர் முன் வர வேண்டுமென்ற கோரிக்கை இப்போதும் எப்போதும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், காது கொடுத்து கேட்கத்தான் யாருமில்லை என்பதுதான் பெரும் சோகம்.
Comments