ரூ.3 லட்சம் கோடி முதலீடு எங்கே? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? மு.க.ஸ்டாலின் கேள்வி

0 2448
3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக தமிழகத்திற்கு வந்த தொழிற்சாலைகள் என்னென்ன? -மு.க.ஸ்டாலின் கேள்வி

3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக தமிழகத்திற்கு வந்த தொழிற்சாலைகள் என்னென்ன என்று கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், புதிய ஆலைகள் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் சின்னதுரை, கெங்கவல்லி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, ரிஷிவந்தியம் திமுக வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதய சூரியன், உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளர் மணிகண்ணன், கள்ளக்குறிச்சி காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்னம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது போல் திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன், விவசாய கடன், நகைக் கடன், கூட்டுறவு வங்கிகடன் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என முக.ஸ்டாலின் உறுதியளித்தார்.

அதிமுகவினர் தினசரி பேட்டா, பிரியாணி உள்ளிட்ட விஷயங்களை கொடுத்து கூட்டத்தை கூட்டுவதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், பத்தாண்டு கால சாதனைகளை கூறி அதிமுகவினரால் வாக்கு சேகரிக்க முடிகிறதா என கேள்வி எழுப்பினார். கலைஞர் கருணாநிதி 5 முறை ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை கூறி திமுக வாக்கு சேகரித்து வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அதிமுக அரசு பொய் கூறுவதாகவும், அதன் மூலம் தமிழகத்துக்கு வந்த தொழிற்சாலைகள் என்னென்ன? எத்தனை பேருக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, தலைவாசல் பகுதிக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினியுடன் தலைவாசல் சந்தைப் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று, வியாபாரிகள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

திரளான பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலினுடன் கைக்குலுக்கி செல்பி எடுத்துக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments