திமுக ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டங்களை தமிழகத்தில் நுழையவிடமாட்டோம் : மு.க. ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தால் குடியுரிமை திருத்தச் சட்டங்களை தமிழகத்தில் நுழையவிடமாட்டோம் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்தார்.
ராயபுரத்தில் பேசிய அவர், அப்பகுதியில் CAA, NRC ஆகியவற்றை எதிர்த்து மக்கள் போராடிய போது, நேரில் சென்று கொரோனா காரணமாக போராட்டத்தைக் கைவிடும் படி கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தின் உரிமையை அ.தி.மு.க. அரசு அடகுவைத்துவிட்டதாக ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டு வந்தவர்களை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட ஸ்டாலின், வடசென்னையில் மருத்துவமனை, நூலகம் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.
கொரோனா 2ம் அலை பரவி வருவதாகக் குறிப்பிட்ட ஸ்டாலின், தான் தனியாக இருப்பதால் முகக்கவசம் அணியவில்லை என்றும் கூட்டத்திற்கு வந்தவர்களை முகக்கவசம் அணியும்படியும், தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.
Comments