சாதிய பாகுபாட்டை பேசும் அசுரனுக்கு தேசிய விருது..!
சாதிய ஒடுக்குமுறையை பேசும் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டிச்சென்றுள்ளது.
திரைத்துறையில் சிறந்து விளங்குவோரை கவுரவிப்பதற்காக சிறந்த திரைப்படங்களுக்கும், திரைக்கலைஞர்களுக்கும் ஆண்டுதோறும் தேசிய விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட தேசிய விருதுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷாஷி என்.கருன் தேசிய விருதுகளை அறிவித்தார்.
அதில், சிறந்த தமிழ்படத்திற்கான விருது தனுஷ் படிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு கிடைத்துள்ளது. சாதிய ஒடுக்குமுறையை பேசும் அசுரன் திரைப்படம் எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்டது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் அசுரனில் போட்டிப்போட்டுக்கொண்டு நடிக்க அசுரனாக வலம் வந்த தனுஷோ தனது நடிப்பில் அசுர தனத்தை வெளிப்படுத்தினார் என்றே கூறலாம். நிலப்பிரச்சனையையும், சாதிப்பாகுப்பாடையும் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகளாக அமைத்து கொடுத்த வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியின் முயற்சிக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி வசூலையும் வாரிக்குவித்தது.
அப்போதே அசுரனுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற பேச்சு எழுந்த நிலையில் ஊடங்கங்களின் பல்வேறு விருதுகளை வாரி குவித்த அசுரன் தெலுங்கில் ”நரப்பா” என பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த நிலையில் அசுரன் 2019ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தேர்வாகி தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளது. சிறந்த தமிழ் படம் மட்டுமின்றி, அசுரனாக வலம் வந்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதையும் தட்டி சென்றுள்ளார். அசுரனை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் சிறந்த ஒலி கலவை மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகளை பெற்றுள்ளது.
Comments