தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்துத் தீப்பெட்டி ஆலைகள் 10 நாள் வேலைநிறுத்தம்
தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்துத் தமிழகத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன.
இந்தியாவில் தீப்பெட்டி உற்பத்தியில் 90 விழுக்காடு தமிழகத்தில் தான் நடைபெறுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 400 தீப்பெட்டி ஆலைகளும், மூவாயிரம் பேக்கிங் அலகுகளும் உள்ளன.
இவற்றை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பெட்ரோல் டீசல் விலை, சுங்கக் கட்டணம், லாரி வாடகை ஆகியவற்றின் உயர்வால் தீப்பெட்டிக்கான மூலப்பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதைக் கண்டித்து இன்று முதல் மார்ச் 31 வரை பத்து நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்வதாகத் தீப்பெட்டித் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி கோவில்பட்டியிலும் சுற்றுவட்டாரத்திலும் உள்ள தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Comments