சூடுப்பிடித்த தேர்தல் களம்.. தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர்..!

0 2817
சூடுப்பிடித்த தேர்தல் களம்.. தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர்..!

தேர்தலுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் கசாலி தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் கசாலி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராயப்பேட்டையிலுள்ள அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், வி.எம்.தெரு, பெசன்ட் சாலை, அவ்வை சண்முகம் சாலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் அஜித் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தில் மக்களுக்காக சேவை செய்து வருவதாக கூறினார். 

திருவெறும்பூரில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பில் மகேஷ் வாக்கு சேகரித்த பொய்யாமொழி

திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்பகுதிகளில் மேளதாளங்களுடன் வாக்கு சேகரித்தார். இத்தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் அவர், காவேரி நகர், மாருதி நகர், மாஜி ராணுவ காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ்-க்கு பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

குழந்தைகளை தூக்கி கொஞ்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார், எம்.சி.சாலை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் சைக்கிள் ரிக் ஷாவில் அமர்ந்து பிரச்சாரம் செய்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு, மேள தாளங்களுடன் பெண்கள் ஆடி, பாடி பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் பேசிய அவர், அதிமுகவின் எழுச்சி பெருமளவில் இருப்பதாகவும், அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக, குழந்தைகளை தூக்கி கொஞ்சியும் பெண்களுடன் உற்சாகமாக பேசியும் அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரித்தார்.

 எழும்பூரில் போட்டியிடும் மநீம வேட்பாளர் பிரியதர்ஷினி: சாலையோரக் கடையில் தேநீர் அருந்தியவாறு வாக்கு சேகரித்தார்

எழும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பிரியதர்ஷினி சாலையோரக் கடையில் தேநீர் அருந்தியவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பட்டாளம் பகுதியில் வீதிவீதியாக சென்ற அவர், வணிக நிறுவனங்கள், ஆட்டோ ஓட்டுநர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கட்சியின் சின்னமான டார்ச் லைட்டுடன் சென்று அங்குள்ள குடியிருப்புகளில் உள்ளோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரியதர்ஷினி வாக்கு சேகரித்தார்.

ஆயிரம் விளக்கில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு வாக்கு சேகரிப்பு

ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எல்டாம்ஸ் ரோடு, நல்லான் தெரு, வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிகழ்வில் அவருக்கு தாமரை மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வாக்கு கேரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன், அப்பகுதியிலுள்ள பச்சையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் திறந்த வெளி வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேல்சீசமங்கலம், முணுக்கப்பட்டு, கொருக்காத்தூர், திருமணி உள்ளிட்ட பகுதிகளில் பாஜக, பாமக, புதிய நீதிகட்சி ஆகிய கூட்டணி கட்சி தொண்டர்களுடன் சென்ற அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். 

பரமக்குடியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் முருகேசன்

பரமக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முருகேசன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக எமனேஸ்வரம் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அப்பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த முருகேசன் அவர்களுக்கான அல்லுக்கூடம் அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். கடப்பேரி மற்றும் பர்மா காலனி, புளிகொராடு ஆகிய குடிசை பகுதியில் ஆதரவு திரட்டிய அவருக்கு, பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது தங்கள் பகுதிக்கு சாலை, கழிவறை, பட்டா வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர அப்பகுதி மக்கள்  கோரிக்கை வைத்ததையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற பின்  கோரிக்கை நிறைவேற்றப்படுமென அவர் உறுதியளித்தார். 

தி.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா வாக்கு சேகரிப்பு

சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா, அசோக் நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள விநாயகர் கோயிலில் வழிபாடு செய்து, பிரச்சாரத்தை துவங்கிய அவர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். 

வீரபாண்டியில் திமுக சார்பில் போட்டியிடும் தருண் வீதிவீதியாக வாக்கு சேகரிப்பு

சேலம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தருண் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சன்னியாசிகுண்டு பகுதியில் திறந்த வாகனத்தில் சென்ற அவர், தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்கு சேகரித்த தருணுக்கு மலர்கள் தூவியும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் வாக்கு சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்றும், சாலையோர கடைகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் ஆதரவு திரட்டினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றவுடன் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றார். 

பரமக்குடியில் மநீம சார்பில் போட்டியிடும் கருப்புராஜா வீடுவீடாக வாக்கு சேகரிப்பு

பரமக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கருப்புராஜா அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எமனேஸ்வரம், ஜீவாநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்சியின் சின்னமான டார்ச் லைட்டுடன் வாக்கு சேகரித்த அவர், லோக் ஆயுக்தா அமைப்பை வலுப்படுத்த மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

தியாகராய நகர் திமுக வேட்பாளர் கருணாநிதிக்கு தமிழச்சி வாக்குச்சேகரிப்பு

தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் கருணாநிதிக்கு ஆதரவாகத் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பரப்புரை செய்து வாக்குச் சேகரித்தார். வடபழனி நூறடிச் சாலை, பஜனைக் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை செய்தார். அவரிடம், திமுகவினர் ஆட்சிக்கு வந்தால் பெரிய ஊழல் செய்வார்கள் என அதிமுகவினர் குற்றஞ்சாட்டுவது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர். 

திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவலங்காடு அருகே மணவூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மாபுரம் குப்பம் கண்டிகை, கலைஞர்புரம் ஆகிய பகுதிகளில் வாகனத்திலும், வீதிவீதியாக சென்றும் வாக்கு சேகரித்தார். அதன்பின்னர், பிரச்சாரத்தில் பேசிய எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன், திமுக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் விதமாக திருவலங்காடு பகுதியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்றார். மேலும், திருவலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

திண்டுக்கல்லில் ஒவ்வொரு கடையாக வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் ராமுத்தேவர்

திண்டுக்கல் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் ராமுத்தேவர் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காந்தி மார்க்கெட் பகுதியில் ஒவ்வொரு கடையாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கக் கோரி ராமுத்தேவர் பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்த அவருக்கு சால்வை அணிவித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.

எழும்பூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

சென்னை எழும்பூர் புதுப்பேட்டையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் வீதிவீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் மனைவி பிரிசில்லா மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களுடன் சென்று புதுப்பேட்டையில் வாக்குச் சேகரித்தார்.  

சேப்பாக்கம் தொகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அமமுக வேட்பாளரிடம் கேள்வி கேட்ட பெண்கள்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற அமமுக வேட்பாளர் ராஜேந்திரனிடம் அந்த பகுதி பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். பிரச்சாரத்தின் போது வழிமறித்த பெண்கள் சிலர், மழை வெள்ளத்தின் போதும், கொரோனா காலத்திலும் தங்களுக்கு எந்த நிவாரண உதவியும் அளிக்காமல் தற்போது மட்டும் வாக்கு கேட்டு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு, தான் வெற்றி பெற்றபிறகு தொகுதிக்காக பணியாற்றவில்லையென்றால், என் சட்டையை பிடித்து கேள்வி கேளுங்கள் என ஆவேசமாக அவர் பதிலளித்தார்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு பிரச்சாரம்

திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, புத்தூர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அந்த பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.


பனை ஏறும் தொழிளாலர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் வாக்குச் சேகரிப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், பள்ளிகல்விதுறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நம்பியூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு, அப்பகுதி தொண்டர்கள் சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர், நம்பியூர் பகுதியில் வாழும் பனை ஏறும் தொழிளாலர்களுக்கு தனியாக நல வாரியம் அமைத்து, உயிரிழந்தால் 5 லட்ச ரூபாயும், காயங்கள் ஏற்பட்டால் மருத்துவ செலவுக்கு தலா 1 லட்சமும், முதியவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாயும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறி ஆதரவு திரட்டினார்.

மதுரை வடக்கு திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட செல்லூர் 50 அடி சாலையில் திறந்தவெளி வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், திமுக தேர்தல் வாக்குறுதிகளை கூறி கோ.தளபதிக்கு ஆதரவு திரட்டினார். 

கரூர் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் கிராமம், கிராமமாக சென்று பெண்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். தாந்தோன்றிமலை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காக்காவாடி, பாகநத்தம், பிச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பாசில் தொண்டர்களுடன் டீக்கடையில் தேநீர் அருந்தி வாக்கு சேகரிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஃபாசில் தொண்டர்களுடன் சேர்ந்து டீக்கடையில் தேநீர் அருந்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஃபாசில், தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகர், மாதா கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்னிறுத்தி வாக்கு சேகரித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன் உயிரை பறிக்கும் மதுக்கடைகள் முழுமையாக மூடப்படும் என வாக்குறுதி அளித்து, நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர். கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், ஆதனூர், பூப்பெட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அக்கட்சி வேட்பாளர், விவசாய சின்னத்திற்கு வாக்க கேட்டுக்கொண்டார்.

 ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகள் முழுமையாக மூடப்படுமென வாக்குறுதி: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன்

ஆட்சிக்கு வந்தவுடன் உயிரை பறிக்கும் மதுக்கடைகள் முழுமையாக மூடப்படும் என வாக்குறுதி அளித்து, நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன், வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினர். கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், ஆதனூர், பூப்பெட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அக்கட்சி வேட்பாளர், விவசாய சின்னத்திற்கு வாக்க கேட்டுக்கொண்டார்.

திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி திமுக வேட்பாளர் வெங்கடாசலத்தை ஆதரித்து அக்கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொக்கராயன்பேட்டையில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டியதோடு, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். 

திருவண்ணாமலையில் வயலில் களை பரித்த பெண்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர், வி.பன்னீர்செல்வம் வயலில் களை பரித்துக் கொண்டிருந்த பெண்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அய்யம்பாளையம், விளாங்குளம் களாக்காடு, எள்ளுப்பாறை உள்ளிட்ட கிராமங்களுக்கு வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரை தொண்டர்கள் பட்டாசு வெடித்து, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, அதிமுக செய்துள்ள நலத்திட்டங்களை கூறி ஆதரவு திரட்டினார்.

மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவனை மலர் கிரீடம் அணிவித்து வரவேற்ற பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிரவன் அப்பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நொச்சியம், இந்திரா நகர், ராதா நகர், ஸ்ரீரங்க ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கதிரவனுக்கு மாலையோடு மலர் கிரீடம் அணிவித்தும் வேலை பரிசாக அளித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

புதுச்சேரியில் காலை முதலே பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

புதுச்சேரியில் காலை முதலே பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் தட்சிணாமூர்த்தி தொகுதிக்குட்பட்ட சண்முகா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராமத்தில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கந்தசாமி தொகுதிக்கு உட்பட்ட கரிக்கலாம்பாக்கம், மாஞ்சோலை ரோடு, கோட்டைமேடு, வ. உ. சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

காமராஜ் நகர் பாஜக வேட்பாளர் ஜான்குமார் தொகுதிக்குட்பட்ட சாரம், பழைய சாரம், அவ்வை திடல், 45 அடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். காலில் அடிபட்டதால் ஊன்று கோலுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராசிபுரத்தில் திமுக வேட்பாளருக்கு மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மதிவேந்தனுக்கு மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பின்னர் தொண்டர்கள் புடைசூழ வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உசிலம்பட்டி அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரன் வீடு - வீடாக சென்று தீவிர ஓட்டு வேட்டை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரன்,
கிராமங்கள் தோறும் வீடு, வீடாக சென்று, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதிக்கு உட்பட்ட சேடப்பட்டி,பெருங்காம நல்லூர், கன்னியம்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தேர்தலில் வெற்றி பெற்றால், தொகுதி மக்களுக்கு உழைக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். அ.ம.மு.க வேட்பாளர் மகேந்திரனுடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பிரசாரத்தில் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் ஐ.ஜே.கே. வேட்பாளர் முகமது இத்ரீஸ் பல்வேறு பகுதிகளில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது இத்ரீஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவல்லிக்கேணி பகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், காயிதே மில்லத் சாலை, பெரிய தெரு, பாரதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களிடம் ஒரு மாற்றத்தை விதைக்க கூடிய வகையில் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது திமுக - முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு 

7 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்த தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் விவசாய மின் இணைப்பு உடனடியாக வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். பனையபுரத்தில் நடைபெற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், இவ்வாறு கூறினார்.

சேலம் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணன் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பு

சேலம் தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஏ.எஸ். சரவணன், கருங்கல்பட்டியில் உள்ள விசைத்தறி மற்றும் கைத்தறி தொழிலாளர்களிடம் திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில், திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடியும், வீடு வீடாக சென்றும் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெற்றி பெற்றால் மதுராந்தகம் ஏரி தூர் வாரப்படும் - திமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மக்களுக்கு உறுதி

தம்மை வெற்றிபெற செய்தால் மதுராந்தகம் ஏரியை  தூர்வாரி மேம்படுத்துவேன் என அத்தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார். மதுராந்தகம் தனி தொகுதி வேட்பாளரான அவர் 24 வார்டுகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஒன்றாம் வார்டில் உள்ள முருகன் ஆலயத்தில் தரிசனம் செய்த பின் வீதி வீதியாக நடந்து அவர் ஆதரவு திரட்டினார். தமக்கு வாக்களித்தால், ஏற்கனவே முதலமைச்சர் ஒதுக்கியுள்ள 125 கோடியை பயன்படுத்தி மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படும் என அவர் அப்போது கூறினார்.

திருச்செங்கோட்டை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உறுதி

திமுக ஆட்சிக்கு வந்தால் திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என  திமுக எம்.பி. கனிமொழி கூறினார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரனுக்கு ஆதரவாக கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்த அவர், திருச்செங்கோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சுற்றுவட்டச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். ஜெயக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஜெயக்குமார், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள ஈங்கூர், செங்குளம்,எழுதிங்கள்பட்டி,வெட்டுகாட்டுவலசு,கூத்தம்பாளையம், துலுக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் திறந்தவெளி வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

திருச்சி மேற்கு தொகுதியில் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் பத்மநாபன்

திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பத்மநாபன், சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தார். தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பத்மநாபனுக்கு ஆதரவாக அமைச்சர் வளர்மதியும் வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திருநங்கைகளிடம் ஆதரவு திரட்டிய தளவாய் சுந்தரம், தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமைந்த பின்னர், திருநங்கைகள் சுயதொழில் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

சேந்தமங்கலத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சந்திரன்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக எருமப்பட்டியிலுள்ள பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின் அவர் பிரச்சாரத்தைத் துவக்கினார். இதனைடுத்து வீதிவீதியாக திறந்த வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பேருந்தில் ஏறி துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி.ஆர்.ஜி. அருண்குமார், பேருந்தில் ஏறி பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மருதமலை அடிவாரத்தில் வழிபாடு நடத்திய பின்னர் பிரச்சாரத்தை துவக்கிய அவர் அங்குள்ள கடைகளில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து நவாவூர், சோமையம்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

காஞ்சிபுரம் தொகுதியில் பாமக வேட்பாளர் கூட்டணி கட்சியினருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ் குமார், ஈஞ்சம்பாக்கம், சிறுவாக்கம், புத்தேரி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். குடியிருப்பு பகுதிகளில் கூட்டணி கட்சியினர் புடைசூழ வீடு வீடாக சென்று பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் குமார் தீவிர ஓட்டு வேட்டை

திருச்சி - திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமார் , தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த ஜீப்பில், காட்டூர், பாரதிதாசன் நகர், பாத்திமா புரம், பாப்பாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்ற வேட்பாளர் குமார் ஆதரவு திரட்டினார்.

வாக்கு சேகரிப்பின் போது அதிமுக வேட்பாளருக்கு சில இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். திருவெறும்பூரில், ஒரு இந்து கோவிலில் வழிபாடு நடத்திய அதிமுக வேட்பாளர் குமார், பின்னர்,
அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி, பிரார்த்தனையில் ஈடுபட்டார்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நா.கார்த்திக் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

கோவையிலுள்ள சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நா.கார்த்திக் அப்பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். சாரமேடு, பூங்காநகர், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேலும் பிரச்சாரம் மேற்கொண்ட நா.கார்த்திக், எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால் தொகுதிக்கு அதிகம் நல்லது செய்ய முடியவில்ல என்று கூறினார்.

குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் தங்கமணி வீதி வீதியாக, வீடு, வீடாக வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பு 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான தங்கமணி, கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாஜ்நகர் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தபின் பிரச்சாரத்தைத் தொடங்கிய அமைச்சர், கீழ்காலனி, கோவிந்தம்பாளையம், கடையநல்லூர் எஸ்பிபி காலனி, ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி தீவிர வாக்கு சேகரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சு.ரவி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளூர், சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனபுரம், கீழ் வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவெளி வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.

பரமக்குடியில், அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் கூட்டணி கட்சியினர் புடைசூழ தேர்தல் பிரச்சாரம்

பரமக்குடியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் சதன் பிரபாகர், பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேலதாளங்கள் முழங்க தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த மீன்கடை உரிமையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது கடையில் அமர்ந்து மீன் விற்பது போல் புகைபடத்துக்கு போஸ் கொடுத்தார்.

நன்னிலம் தொகுதியில் உணவுதுறை அமைச்சர் காமராஜ் அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 3வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடும் உணவுதுறை அமைச்சர் காமராஜ் பில்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருமீயச்சூர், பண்டாரவடை, கொட்டூர் ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்டிய அவர், அதிமுக சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை கூறி, தனது தொண்டர்களுடன் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்தார். முன்னதாக, ஆதரவு திரட்ட சென்ற அமைச்சர் காமராஜூக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

செய்யூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வாகனம் முன் நடனமாடி உற்சாகமூட்டிய மூதாட்டி

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணிதா சம்பத், வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பொளம்பாக்கம், சித்தாமூர், சரவம்பாக்கம், பூங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது வேட்பாளர் கணிதா சம்பத் வந்த வாகனத்தின் முன் மூதாட்டி ஒருவர் நடனமாடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.

வேப்பனஹள்ளி தொகுதியில் திமுக வேட்பாளர் மண்ணின் மைந்தன் முழக்கத்தை முன்வைத்து திமுக ஓட்டு வேட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முருகன், மண்ணின் மைந்தன் முழக்கத்தை முன்வைத்து, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். குந்தாரப்பள்ளி, பச்சிகாணப்பள்ளி, பில்லனகுப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மேள - தாளம் முழங்க, வேட்பாளர் முருகன் ஆதரவு திரட்டினார். 

வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி போட்டியிடுகிறார்.

குமரி மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்ற பாடுபடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன்

அடுத்த மூன்றாண்டுகளில் குமரி மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்ற அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தியுடன் கட்டையன்விளை, வெட்டூர்ணிமடம், வடசேரி, வேப்பமூடு உள்ளிட்ட பகுதிகளில் பொன்.ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். மாவட்டத்தில் கைவிடப்பட்ட திட்டங்கள், பாதியில் நிற்கும் திட்டங்கள் அனைத்தையும் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மயிலம் திமுக வேட்பாளர் மாசிலாமணி தீவிர தேர்தல் பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  மாசிலாமணி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட நடுவனந்தல், அகூர், புலியனூர், தனியல், இனமங்கலம், விழுக்கம், தீவனூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சங்கரன்கோவிலில் திமுக சார்பில் போட்டியிடும் இ.ராஜா வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு 

சங்கரன்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இ.ராஜா வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேற்கு ஒன்றியப் பகுதிகளில் கலிங்கப்பட்டி, மரத்தோணி, காரிசாத்தான் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பகுதிகளில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பெண்களிடம் திமுக தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரங்களை வழங்கி அவர் வாக்கு சேகரித்தார்.

ஆத்தூர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி tதீவிர வாக்கு வேட்டை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி மலை கிராமங்களில் வாக்கு சேகரித்தார். மஞ்சள்பரப்பு, புல்லாவெளி, பெரும்பாறை ஆகிய மலை கிராமங்களிலும் கட்டைக்காடு, குத்துகாடு, புதூர் வெள்ளரிக்கரை உள்ளிட்ட ஆதிவாசி குடியிருப்புகளிலும் அவர் ஆதரவு திரட்டினார். திமுக ஆட்சிக்கு வந்தால், மலைக்கிராம வழித்தட அரசு பேரூந்துகளில், பெண்கள் கட்டணம் இல்லாத பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் விரிவாக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் போட்டி

கள்ளக்குறிச்சி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மணிரத்தினம், கைச்சின்னத்தை வாக்காளர்களுக்கு நினைவுபடுத்தி வாக்கு சேகரித்தார். சடையம்பட்டு கிராமத்தில் ஆதரவு திரட்டிய அவர், அனைவரும் உதயசூரியன் சின்னத்தையை மனதில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள், கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக கூட்டணியின் சின்னமான கை சின்னத்தை மறந்துவிடாதீர்கள் என கேட்டுக் கொண்டார்.

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் நிலையில், சின்னத்தை மக்கள் மறந்துவிட்டனரோ என நினைத்து வேட்பாளர் நினைவூட்டியதாக அங்கு பேச்சு எழுந்தது.

கந்தர்வகோட்டையில் அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி தீவிர வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும், ஜெயபாரதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மங்கனூர், அரவம்பட்டி ,கோமாபுரம், நொடியூர் , விராலிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வேனில் நின்றபடியே சென்றபடி வாக்கு சேகரித்த அவர், பின்னர் பொதுமக்களின் காலில் விழுந்து ஆதரவு திரட்டினார்.

சங்கரன்கோவிலில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜலட்சுமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மலையாளங்குளம், சிதம்பராபுரம், மீன்துள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வீதிவீதியாக திறந்த வாகனத்தில் சென்ற ராஜலட்சுமி அதிமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம்

தஞ்சை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டி.கே.ஜி. நீலமேகம் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அருளானந்த நகர், பரிசுத்த நகர், அருளானந்தம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணி கட்சியினருடன் சென்ற அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். அப்போது தொண்டர்கள் சால்வை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்ததுடன், அப்பகுதி ஆதரவாளர்கள் திமுக வேட்பாளருக்கு குளிர்பானம் கொடுத்தனர். 

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி.சண்முகம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பிரச்சாரம் 

விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சி.வி.சண்முகம் தொகுதிக்கு உட்பட்ட தோகைப்பாடி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்புக்குச் சென்ற அமைச்சருடன் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர். அதிமுக அரசின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நன்னிலம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜோதிராமன் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி தீவிரப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜோதிராமன் கிராமப்புறங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் பின்தொடர, திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கம்பம் தொகுதி ம.நீ.ம. வேட்பாளர் வேதா வெங்கடேஷ் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேதா வெங்கடேஷ், மக்களுக்கு பச்சை துண்டு அணிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கம்பம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை பகுதி ,பத்திர அலுவலக பகுதி, உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், உணவகங்கள், சாலையோர வியாபாரிகளை சந்தித்து, கட்சி சார்பில் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் கொடுத்தும், விவசாயத்தை வலியுறுத்தும் விதமாக பச்சைத் துண்டு அணிவித்தும் வேதா வெங்கடேஷ் வாக்கு சேகரித்தார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செல்வபுரம் பகுதியில் தொடங்கி, சாஸ்தா நகர், முனியப்பன் நகர், சிதம்பரம் காலணி, நாராயணசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். சாதி, சமய வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களுக்குமான திட்டங்களை தாம் செயல்படுத்தியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி திறந்த வெளி வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்தார். துரிஞ்சாபுரம், வட ஆண்டாபட்டு, இனாம்காரியந்தல், மல்லவாடி, ஊசாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அதிமுக அரசு கொடுத்த மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் எவ்வாறு காயலான் கடைக்கு சென்றதோ அதே போல், தற்போது அறிவித்துள்ள வாஷிங்மெஷினும் காயலான் கடைக்கு சென்று விடும் என கூறி ஆதரவு திரட்டினார்.

நாங்குநேரியில் வீதிவீதியாக வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்

நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ரூபி மனோகரன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேட்டுக்காலனி, அணைக்கரை,வாகைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணிக் கட்சியினருடன் வீதிவீதியாக சென்று ரூபி மனோகரன் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய கமல்ஹாசனை பார்க்க, அறுவடை முடிந்த வயல்வெளியில் கிராம மக்கள் ஆர்வத்துடன் திரண்டனர். கீழ்வேளூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் டாக்டர்.சித்துவின் வயலில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் கமல்ஹாசன் பயணித்த ஹெலிகாப்டர் வந்திறங்கியது.

திருப்பூண்டி கடைத்தெருவில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் பேச்சை தொடங்கியபோது மைக் மக்கர் செய்தது. பின்னர் திருப்பூண்டி என்பதற்கு பதிலாக திருத்துறைப்பூண்டி என்று மாற்றி கூறினார். கீழ்வேளூர் தொகுதி என்பதற்கு பதிலாக திருப்பூண்டி தொகுதி என்று கூறிய அவர் சுதாரித்து திருத்திக் கொண்டார்.

சென்னை அம்பத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தொண்டர்களுடன் ஆட்டோவில் ஊர்வலமாக சென்று பிரச்சாரம்

சென்னை அடுத்த அம்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அலெக்சாண்டர், ஆட்டோவில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஆட்டோவில் ஊர்வலமாக சென்று ஆதரவு திரட்டினார். தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக ஆட்டோவில் தனி ஒருவராக பயணித்து அலெக்சாண்டர் ஆதரவு திரட்டினார்.

பொன்னேரியில் அதிமுக வேட்பாளர் அரசின் சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் அத்தொகுதி எம்.எல்.ஏ சிறுணியம் பலராமன் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தத்தைமஞ்சி, காட்டூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.

புதுச்சேரியில் 10 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டிருந்த பாமக பின்வாங்கியது

புதுச்சேரியில் தனித்துப் போட்டியிட 10 தொகுதிகளில் பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யாததால், 10 தொகுதிகளில் தனித்து போட்டியிட பாமக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், பாமக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 10 வேட்பாளர்களும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். ஆட்சி அமைந்தவுடன் உரிய மரியாதை அளிக்கப்படும் என பாஜக தலைமை உறுதி அளித்ததாக பாமக அமைப்பாளர் தன்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

மனசாட்சி இல்லாதவர்கள் தான் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் - நாமக்கல் அதிமுக வேட்பாளர் எம்.எல்.ஏ. பாஸ்கர் பேச்சு

நாமக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏ. பாஸ்கருக்கு ஆதரவாக அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் மோகனூரில் நடைபெற்றது. இதில், பேசிய எம்.எல்.ஏ. பாஸ்கர், மனசாட்சி இல்லாதவர்கள் தான் அதிமுகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள் என விமர்சித்தார். 

விருதாச்சலம் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

விருதாச்சலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ஜங்க்ஷன் சாலையில் தேமுதிகவின் தேர்தல் அலுவலகத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து பண்டாரம்குப்பம், செம்பளாகுறிச்சி, பெரியவடவாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் குப்பன் மேளதாளங்கள் முழங்க, நூற்றுக்கணக்கானோருடன் சென்று பிரச்சாரம்

சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே குப்பன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மணலி திருவள்ளுவர் நகர், மணலி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், நாதஸ்வரம், மேளதாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கானோருடன் சென்ற குப்பன், வாகனத்தில் சென்றும் நடந்து சென்றும் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தீவிர வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வெற்றி பெற்றால் நந்தம் தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட போவதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

அருப்புக்கோட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வையாபுரி தேர்தல் பிரச்சாரம்

அருப்புக்கோட்டையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வனை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வையாபுரி பிரச்சாரம் மேற்கொண்டார். சொக்கலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகர் வையாபுரி குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1500 ரூபாய், இலவச வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தார்.

ஆரணி தேமுதிக வேட்பாளர் ஜி.பாஸ்கரன் விவசாய பெண்களுடன் சேர்ந்து களை எடுத்து வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஜி.பாஸ்கரன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட வேதாஜிபுரம், குருகுலம், மூலதாங்கல் உள்ளிட்ட பல ஊர்களில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். விவசாய நிலத்தில் களை எடுத்துக்கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்த ஜி.பாஸ்கரன், அந்த பெண்களுடன் சேர்ந்து களை எடுத்தார். 

தூத்துக்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் ச.ம.க வேட்பாளர் சுந்தருக்கு ஆதரவாக நடிகை ராதிகா சரத்குமார் பிரச்சாரம்
 

தூத்துக்குடி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் சுந்தரை ஆதரித்து, நடிகை ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் சுந்தர் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நடிகை ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிவன் கோவில் தெருவிலுள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்திய ராதிகா, பின்னர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மௌலானா வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பு 

வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹசன் மௌலானா அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். லட்சுமி நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டணிக் கட்சியினருடன் சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக வாக்கு சேகரித்த ஹசன், அக்கட்சி தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார்.

வேளச்சேரி தொகுதியில் அமமுக வேட்பாளர் சந்திரபோஸ் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை வேளச்சேரி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் சந்திரபோஸ், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேளச்சேரி ஏரி கரை பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் வீடற்றவர்களுக்கு, சொந்த செலவில் வீடு கட்டித்தருவதாக திமுக வேட்பாளர் வாக்குறுதி

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பையா என்கிற கிருஷ்ணன் திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி பிரச்சாரம் மேற்கொண்டார். பன்னீர்மடை பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த அவர், நடக்கமுடியாத மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் மூன்று சக்கர வாகனம் வாங்கித்தருவதாகத் தெரிவித்தார். அருகில் உள்ள சஞ்சீவி நகரில், வீடற்றவர்களுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதும் சொந்த செலவில் வீடு கட்டித்தருவதாக அவர் உறுதியளித்தார்.

திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பு 

சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சங்கர், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மணலி திருவள்ளுவர் நகர், கிருஷ்ணன் கோவில் சாலை, கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு அவர் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது மணலி கருணாநிதி நகரில் குடிநீர் குழாய்களும் கழிவு நீர் கால்வாய்களும் அமைத்து தரப்படும் என்றும் அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் சங்கர் வாக்குறுதி அளித்தார்.

கலசப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கல்பட்டு, இரும்புலி, குப்பம், காளசமுத்திரம், படவேடு உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு அவர் வாக்கு சேகரித்தார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவர் ஆதரவு திரட்டினார்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரை ஆதரித்து ஜி.கே.வாசன் பரப்புரை

சென்னை வில்லிவாக்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரை ஆதரித்துத் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாக்குச்சேகரித்தார். கூட்டணிக் கட்சியான அதிமுகவின் வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகருக்கு ஆதரவாக வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே வாகனத்தில் நின்றபடி ஜி.கே.வாசன் பரப்புரை செய்தார். அப்போது தமிழகத்தில் நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

குளித்தலை அமமுக வேட்பாளர் நிரோஷா வெங்கடேஷுக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம்

கரூர் மாவட்டம் குளித்தலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். திருச்சியிலிருந்து தனிவேனில் குளித்தலை வந்த அவர், பேருந்து நிலையம் அருகில், குளித்தலை அமமுக வேட்பாளர் நிரோஷா வெங்கடேஷ், கிருஷ்ணராயபுரம் தேமுதிக வேட்பாளர் கதிர்வேல் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அமமுக வேட்பாளரின் பெயரை மறந்து விட்ட டிடிவி தினகரன், பின்னர் தொண்டர்களிடம் கேட்டு நிரோஷா வெங்கடேஷ் என சொல்லி வாக்குகளை சேகரித்தார்.

மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி தேர்தல் பிரச்சாரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இளையான்குடி பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்ற அவர், திமுகவின் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

ராணிப்பேட்டை அதிமுக வேட்பாளர் எஸ்.எம். சுகுமாரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்

இந்த தேர்தல் மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் இடையிலான தேர்தலாக தாம் கருதுவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.ராணிப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்.எம்.சுகுமாரை ஆதரித்து, முத்துக்கடை பேருந்து நிலையப்பகுதியில் வாக்கு சேகரித்த அன்புமணி ராமதாஸ், இதனை தெரிவித்தார். மேலும், எழுபது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி தமிழகத்தின் முதல்வராகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிதம்பரத்தில், அதிமுக வேட்பாளர் பாண்டியன் திறந்த வாகனத்தில் சென்று தேர்தல் பிரச்சாரம்

சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ பாண்டியன் பள்ளிப்படை, மீதுகுடி, கோவிலாம்பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். சிதம்பரம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், தாம் மீண்டும் வெற்றி பெற்றால் மீதிகுடி கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைத்து தருவதாக உறுதி அளித்தார்.

தாம் வெற்றி பெற்றால் டெல்லியின் பார்வை நேரடியாக அரவக்குறிச்சி மீது இருக்கும் - பாஜக வேட்பாளர் அண்ணாமலை

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பாக போட்டியிடும் அண்ணாமலை, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மலைப்பட்டி, காந்திநகர், கோட்டையூர், ஆண்டிபட்டிகோட்டை மற்றும் ஆலமரத்துப்பட்டி போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அண்ணாமலை, தாம் வெற்றி பெற்றால் டெல்லியின் பார்வை நேரடியாக அரவக்குறிச்சி மீது இருக்கும் என்றும் தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் எளிதாக கேட்டு பெறமுடியும் என்றும்  கூறினார்.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்து பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வைரமுத்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெருங்குடி. நமணசமுத்திரம் தேக்காட்டூர் ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

காட்டுமன்னார்கோவிலில், விசிக வேட்பாளர் சிந்தனைச் செல்வன் கடைவீதிகளில், பானையுடன் சென்று வாக்கு சேகரிப்பு

காட்டுமன்னார்கோவிலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சிந்தனைச் செல்வன் பானை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியதை தொடர்ந்து அதனை மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக  விசிக தொண்டர்கள் தலையில் பானையைச் சுமந்தபடி வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பு 

சென்னை வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்தார். வேளச்சேரியில் அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், வேளச்சேரி காந்தி ரோட்டில் உள்ள பெருமாள் கோவிலில் வழிபாடு நடத்திய பின் அவர் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது ஆட்டோ ஒன்றில் முதியவர்கள் இரண்டு பேரை அமர வைத்து ஓட்டிய அவர், தமக்கு வாக்களிக்குமாறு அப்பகுதி மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

மக்களுக்கு, அவர்கள் வாழும் இடங்களில் வேலை தர வேண்டும் : தஞ்சையில் ம.நீ.ம வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம்

மக்களுக்கு அவர்கள் வாழும் இடங்களில் வேலை தர வேண்டும் என்பதே தமது லட்சியம் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய அவர், மதுக்கடைகளை மூடி விடுவேன் என்று தன்னால் சொல்ல முடியும், திராவிட கட்சிகளால் சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். ஏழையை ஏழையாகவே பாதுகாத்து வைத்து இருக்கிறார்கள் என்றும் கமல் சாடினார்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி எம்.எல்.ஏ பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ரகுபதி எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நச்சாந்துபட்டி பனையப்பட்டி குழிபிறை ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி அவர் வாக்கு சேகரித்தார். தேர்தலில் வென்றதும் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

தன்னை எதிர்க்கும் திமுக வேட்பாளரை சுயேச்சையாக கருதுகிறேன் - அமைச்சர் ஜெயக்குமார்

தன்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளரை சுயேட்சை வேட்பாளராக கருதுவதாக அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்தார். சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அவர் பிரச்சாரத்திற்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தன்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் எழுச்சி இல்லை என்றார்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதா ரவி பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட காந்திபுரம் 100 அடி சாலையில் வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரித்த ராதா ரவி, வானதி சீனிவாசனின் வாக்கு வங்கியை பிரிப்பதற்காக திமுகவின் பீ டீமாக செயல்பட்டு வரும் கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக குற்றம்சாட்டினார்.

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் பிரச்சாரம்

திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவாலங்காடு ஒன்றியம், பெரியகணக்காட்டூர், சின்ன கணக்காட்டூர், ஓரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார். திமுக தேர்தல் அறிக்கையில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று கூறிய அவர், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றார். 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் திமுக வேட்பாளர் ஆதரவாளர்களுடன் கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் நந்தகுமார், ஆதரவாளர்களுடன் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்தார். கரடிகுடி, டி.சி.குப்பம், பிரமாணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்ற அவர், தாம் வெற்றி பெற்றால் தொகுதியில் அமல்படுத்த உள்ள நலத்திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட எம்.பி.நகர், தங்கம்மாள் ஓடை பகுதி, சதாசிவம் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக தொண்டர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

ஆயிரம் விளக்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஷெரீப் வாக்கு சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் போட்டியிடும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஷெரீப் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை, தி. நகர், நக்கீரன் தெரு, மற்றும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

சென்னை துறைமுகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தீவிர பிரச்சாரம்

சென்னை துறைமுகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பாரிமுனையில் உள்ள கடைவீதிகளில் திறந்த ஆட்டோவில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் பின்தொடர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தாம் வெற்றி பெற்றால் அப்பகுதியில் வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும், துறைமுகம் தொகுதியை தமிழகத்தின் முதன்மை தொகுதியாக மாற்ற முயற்சி எடுப்பேன் என்றார்.

வாணியம்பாடி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் தேர்தல் பிரச்சாரரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் கூட்டணி கட்சியினர்களுடன் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் வாக்கு சேகரிப்பு 

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக திமுக தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கொளத்தூரில் திமுக தொண்டர்கள் சிறு குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வரும் நிலையில், பெரம்பூர் ஜெய்பீம் நகரில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.

மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட ஊமச்சிக்குளம் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக வேட்பாளர் மூர்த்தியை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

செஞ்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மஸ்தான் தீவிர வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மஸ்தான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேவனூர், சம்பந்த குப்பம், சித்தேரி போன்ற பகுதிகளில், திறந்தவெளி வேனிலும், பின்னர் நடந்து சென்றும் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு நின்றிருந்த சிறார்களிடம் திமுகவின் பிரசார பாடலை பாடுமாறு மஸ்தான் கேட்ட போது, சிறார்கள் பாடாததையடுத்து, அவரும், அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த திமுக நிர்வாகிகளும் பாடினர். இதனையடுத்து சிறார்களுக்கு பயிற்சி அளித்து அந்த பாடலை பாட வைத்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் போட்டியிடும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத்துடன் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவர், வாக்களிக்க செல்வதற்கு 10 நிமிடம் முன்பாக வீட்டில், மக்களே தங்களது மின் வினியோகத்தை நிறுத்திப்பார்த்தல் தானாக இரட்டை இலைக்கு வாக்களிப்பார்கள் என்றார்.

புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி திமுக வேட்பாளர் சிவா வாக்கு சேகரிப்பு 

புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவா வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். முன்னாள் உருளையன்பேட்டை திமுக எம்.எல்.ஏவான சிவா, இந்த முறை வில்லியனூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ, வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொண்டர்கள் சிலர் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் சிவாவின் உருவ படங்களை முகத்தில் அணிந்து வாக்கு சேகரித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments