தமிழகம் - புதுச்சேரியில் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து சுயேட்சை வேட்பாளர்களுக்கு தனிச்சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் போட்டியிட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீது பொது பார்வையாளர் மேற்பார்வையில் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் நேற்று முன்தினம் பரிசீலனை நடைபெற்றது.
இவற்றில் 2727 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், 4515 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட 23 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாதவர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று மாலை 3 மணிக்குள் வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 234 தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் வழங்கப்படும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு மாலையில் தனி சின்னம் ஒதுக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு 486 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 81 மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. ஏற்கப்பட்ட 405 பேரில் வாபஸ் பெறுவோரின் முடிவுக்குப் பின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.
Comments