234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்பது கண் கூடாகத் தெரிகிறது - மு.க.ஸ்டாலின்

0 4830
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்பது கண் கூடாகத் தெரிகிறது - மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்கள் கல்விக்காக வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கூறிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களில் மூன்றரை லட்சம் தமிழக இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார். 

சென்னை திருநின்றவூரில் திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி தொகுதி ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி தொகுதி வேட்பாளர் சந்திரன், ஆவடி தொகுதி வேட்பாளர் நாசர் ஆகியோருக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தத் தொகுதி வேட்பாளர்களின் முந்தைய கால பணிகளை பட்டியலிட்டு, அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

 சென்னையை அடுத்த அம்பத்தூர் ராக்கி திரையரங்கம் அருகே அம்பத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், மதுரவாயல் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் ஜூன் 3ஆம் தேதியான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளில், கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். 

 திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்பது கண் கூடாகத் தெரிகிறது என்றார்.

நெசவாளர்கள் நலன் காக்க, அவர்களுக்குத் தனி கூட்டுறவு வங்கி அமைக்கப்படும் என்றும் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறிய ஸ்டாலின், கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

 அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் மட்டுமே பணி அமர்த்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

 காஞ்சிபுரம் மாவட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தில், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தொகுதிகளைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments