சூடுப்பிடித்த தேர்தல் களம்.. தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர்..!

0 7509
சூடுப்பிடித்த தேர்தல் களம்.. தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர்..!

சென்னையில் வேட்பாளர்களை ஆதரித்து ஓபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்

சென்னை யானைக்கவுனி காவல் நிலையம் அருகில் துறைமுகம் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் எழும்பூர் தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், 2023ஆம் ஆண்டுக்குள் 12 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தர திட்டமிட்டு அதில் ஆறரை லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டுக்குள் மீதமுள்ள வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மது விலக்கு குறித்து முடிவு - ஆ.ராசா

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பூராண மது விலக்கு குறித்து முடிவு எடுப்போம், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரத்தை ஆதரித்து திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா வாக்கு சேகரித்தார். கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் பவானி சாகர் சட்டமன்றத்திற்குட்பட்ட புஞ்சை புளியம்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கலை நிகழ்ச்சிகளுடன் திறந்த வேனில் சென்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிகுட்பட்ட பகுதிகளில் கலை நிகழ்ச்சிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். அப்போது, செட்டியார்பட்டி பேரூராட்சியும், சேத்தூர் பேரூராட்சியும் இணைத்து நகராட்சியாக மாற்றி அமைப்பேன் என கூறி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

தேனி மாவட்டத்தில் அதிமுகவிற்கு மகத்தான வெற்றி கிடைக்கும் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் ரவீந்திரநாத் பேச்சு

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற வேண்டும் என்று போடியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கு பட்டாசு மற்றும் மலர்களை தூவி பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேவேந்திரகுல வேளாளர் என பெயரை மாற்றித் தந்தது அதிமுக தான் - வைகைச்செல்வன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வைகைச்செல்வன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர், தேவேந்திரகுல வேளாளர் என பெயரை மாற்றித் தந்தது அதிமுகதான் திமுக அல்ல என்றார்.

திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மதுரையில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்த மு.க.ஸ்டாலினை சந்தித்த அவர், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

பெண்களுடன் குத்தாட்டம் போட்டு அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் மேள தாளங்கள் முழங்க பெண்களுடன் குத்தாட்டம் ஆடிய படி வாக்கு சேகரித்தார். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குடபட்ட விரிஞ்சிபுரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நந்தகுமாருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அருள் வாக்கு கேட்ட பின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த ாஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவிலுக்கு சென்று அருள்வாக்கு கேட்ட பின், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, இந்தத் தொகுதியை சேர்ந்த தன்னை உங்க வீட்டு பிள்ளையாய் நினைத்து தேர்ந்தெடுக்க வேண்டுமென உதய சூரியனுக்கு ஆதரவு திரட்டினார்.

திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி தீவிர வாக்குசேகரிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ரகுபதி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பொன்னமராவதி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவலூர், கொப்பனப்பட்டி,  கொன்னையூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு அரண் என்றுமே திமுக-காங்கிரஸ் கூட்டணி தான் எனக் கூறினார்.

விவசாயிகளுக்கு தேவையானது தண்ணீர், மின்சாரமே தவிர இலவசம் அல்ல ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் ஜெயராஜை ஆதரித்து சீமான் தீவிர பிரச்சாரம்
 

தமிழகத்தில் மாற்று அரசியலை ஏற்படுத்த வேண்டிய தருணம் இது என்று சீமான் தெரிவித்துள்ளார். ராஜபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயராஜை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்த அவர், அரசியல்வாதிகள் இலவசங்களை அறிவித்து அடுத்த தேர்தலை பற்றி யோசிப்பார்கள் என்றும், சிறந்த தலைவர்கள் அடுத்த தலைமுறை பற்றி யோசிப்பார்கள் எனவும் கூறினார்.

விவசாயிகளுக்கு தேவையானது அத்தியாவசியமான தண்ணீர் மற்றும் மின்சாரமே தவிர இலவசங்கள் இல்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளரை ஆதரித்து ஜி.கே.வாசன் வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையான தனி மாவட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தது அதிமுக அரசு என்றும் வரும் நாட்களில் மயிலாடுதுறை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்ற மயிலாடுதுறை தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் பழனிச்சாமிக்கு வாக்கு அளிக்க கோரி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிரச்சாரம் செய்தார். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், புறவழிச்சாலை, தொழில்பேட்டை ஆகியவை அமைக்க பழனிச்சாமி முயற்சிப்பார் என்று சின்னக்கடை வீதி பகுதியில் ஜி.கே. வாசன் வாக்கு சேகரித்தார்.

பூந்தமல்லி தனி தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லி தனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்எல்ஏ கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பின், வீதி வீதியாக சென்ற அவர் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். அப்போது, பூந்தமல்லி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என கூறி உதய சூரியனுக்கு ஆதரவு திரட்டினார்.

நல்ல திட்டங்கள் இருந்தால் இலவசங்கள் தேவையில்லை - ம.நீ.ம. வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு

நல்ல திட்டங்கள் இருந்தால் இலவசங்கள் கொடுக்க தேவையில்லை என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். கோவை பீளமேடு ரொட்டிக் கடை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரித்த கமல்ஹாசன் விவசாயத்தை விஞ்ஞ்சானிகள் கையில் கொடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கையில் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். ஊழலில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வரும் 6 ஆம் தேதி சுதந்திர போர் நடக்க உள்ளது என்றும் கமல் குறிப்பிட்டார்.

திருவாரூர் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பு

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பன்னீர்செல்வம் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். திருவாரூர் சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பிரச்சார வாகனத்திற்கு பூஜை செய்தார்.பின்னர் கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

திருமயம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவராமன்தாரை தப்பட்டைகள் முழங்க மயிலாட்டம்,பொய்க்கால் குதிரையாட்டத்துடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுப்பட்டி, அண்ணா சிலை, நாட்டுக்கல் ரோடு, வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வரும் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தை ஸ்டாலின் மீட்டெடுப்பார் - அரியலூர் தொகுதி மதிமுக வேட்பாளரை ஆதரித்து கி.வீரமணி பிரச்சாரம்

வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தை ஸ்டாலின் மீட்டு எடுப்பார் என்று அரியலூர் தொகுதி மதிமுக வேட்பாளர் சின்னப்பாவை ஆதரித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் செய்தார். திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து கி.வீரமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு வேப்பனப்பள்ளி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கியது அதிமுக அரசு என்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகள் அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டு உள்ளது என்று வேப்பனப்பள்ளி அதிமுக வேட்பாளரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி பிரச்சாரம் செய்தார். வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட நல்லூர், சின்னகொத்தூர், கெத்தகிருஷ்ணபள்ளி, குரியனப்பள்ளி,கரியசந்திரம், கங்கோஜிகொத்தூர், தோவர்குந்தாணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த அவருக்கு பெண்கள் வரிசையில் நின்று ஆரத்தி எடுத்தனர். 

விவசாயிகளுக்கு பிரச்சனை ஏற்பட்டால் மனம் வேதனை கொள்கிறது - மயிலாடுதுறை பாமக வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

தான் ஒரு விவசாயி என்பதாலே விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் மனவேதனை ஏற்படுகிறது என்று கூறி மயிலாடுதுறை தொகுதி பாமக வேட்பாளர் பழனிச்சாமிக்கு ஆதரவாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். மயிலாடுதுறை தொகுதிக்குட்பட்ட குத்தாலம் மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விவசாயிகள் மீது கொண்டு உள்ள அக்கறையால் தான் டெல்டா மாவட்டம் பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றம் - காங்கேயம் திமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்டந்தோறும் தனி நீதிமன்றம், தமிழர்களுக்கு புதிய வேலைவாய்ப்புத் திட்டம், உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி காங்கேயம் தொகுதி திமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து மாநிலங்கவை எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார். காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாத்தூர் தொகுதியை வளர்ச்சி பகுதியாக மாற்றக்கூடியவர் அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியை வளர்ச்சி மிகுந்த பகுதியாக மாற்ற அதிமுக வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு வாக்கு அளிக்க கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் செய்தார். சாத்தூர் சட்டமன்ற தேர்தலுக்கான கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரவிச்சந்திரனை ஆதரித்து கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்தார்.

வேதாரண்யம் தொகுதியில் மேள தாள, வாண வேடிக்கையுடன் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், மேள தாளங்கள் மற்றும் நடன கலைஞர்களின் ஆட்டத்துடன் திமுக வேட்பாளர் வேதரத்தினம் வாக்கு சேகரித்தார். மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், கரியாப்பட்டினம், வடமழைமணக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி உறுப்பினர்களுடன் துண்டு பிரசுரங்கள் வழங்கி வேதரத்தினம் ஆதரவு திரட்டினார்.

ராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் காதர்பாட்சா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரண்மனை, வழிவிடு முருகன் கோயில்,வண்டிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்த அவர், துண்டு பிரசுரங்களை வழங்கி உதய சூரியனுக்கு ஆதரவு திரட்டினார்.

ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் பாண்டியராஜன் பிரச்சாரம் 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பாண்டியராஜன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆவடியில் 50 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகக் கூறிய பாண்டியராஜன், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் எனத் தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் அவர் விமர்சித்தார். 

கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பிச்சாண்டியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிச்சாண்டியை ஆதரித்து திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வாக்குசேகரித்தார். திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எ.வ.வேலு, 100 ஆண்டு கால திராவிட கட்சியை அழிக்க எந்த கொம்பனும் பிறக்கவில்லை என்று அவர் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், நத்தம், வேடந்தூர், ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், வி.வி.பி பரமசிவம் ஆகியோரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மின்வெட்டு மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது அதிமுக அரசு தான் எனத் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் - குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணி பிரச்சாரம்

வரும் தேர்தலில் வெற்றிப்பெற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட மோகனூரில் அதிமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், பொதுமக்களிடம் குறைகள் கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனுக்கள் பெற்றது குறித்து விமர்சித்தார்.

அதிமுக சார்பில் போட்டியிடும் சு.ரவியை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் வாக்குசேகரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சு.ரவியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சயனபுரம் கிராமத்தில் பேசிய அவர், தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு விவசாயி முதலமைச்சராக உள்ளதாகக் கூறினார். இந்த தேர்தல் விவசாயிக்கும், வியாபாரிக்குமான தேர்தல் என அவர் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளர் மகேஷ் குமார் மற்றும் உத்திரமேரூர் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்தும் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

நீண்ட நாள் கோரிக்கையான கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் - முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தீவிர பிரச்சாரம்

வைகை - பரளையாறு - குண்டாறு இணைப்பு பாசனத் திட்டம் மற்றும் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் வாக்கு சேகரித்தார். முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கமுதி, கடலாடி, சாயல்குடி, பெருநாழி, சிக்கல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிக்க வந்தபோது செய்யாறு அதிமுக வேட்பாளர் தூசி மோகனுக்கு எதிர்ப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தூசி மோகன் வாக்கு சேகரிக்க வந்தபோது இளைஞர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெம்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட சுமங்கலி கிராமத்திற்கு சென்ற போது தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி இளைஞர்கள் அவரை முற்றுகையிட்டனர்.

மக்களை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளி விட்டு நகைக்கடன் தள்ளுபடியா? மதுரை பேரையூர் பிரச்சாரத்தில் நாம் தமிழர் சீமான் கேள்வி

மக்களை வறுமை நிலைக்கு தள்ளி, அவர்களை நகைகளை அடகு வைக்கும் நிலைமைக்கு தள்ளிவிட்டு, நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக கட்சிகள் அறிவித்துள்ளது ஏமாற்றுவேலை என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டி உள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் சாராளுக்கு ஆதரவாக பேரையூரில் சீமான் பிரச்சாரம் செய்தார். நீட்டை கொண்டு வந்த திமுகவே தற்போது அதை எதிர்ப்பதாக கூறுகிறது என்றார் அவர்.

ராசிபுரம் திமுக வேட்பாளர் மதிவேந்தன் உழவர் சந்தையில் வியாபாரிகள், விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பு 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மதிவேந்தன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட உழவர் சந்தையில் கட்சி நிர்வாகிகள் உடன் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை சந்தித்த அவர், உதய சூரியனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். மேலும், திமுக ஆட்சியில் புதிய உழவர் சந்தை கட்டடம் கட்டித்தரவப்படும் என வியாபாரிகளிடம் உறுதியளித்தார்.

சென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக, பாமக, பாஜக கட்சியினரும் ஜான் பாண்டியனுடன் சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் களமிறங்கியுள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், சூளைமேட்டில் வாக்கு சேகரித்தார். மேளதாளங்கள் முழங்க அதிமுக மகளிரணி நிர்வாகிகள் , பாமக , பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் ஜான் பாண்டியனுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

தொண்டாமுத்தூரில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணியை ஆதரித்து பாமக சார்பில் நடைபெற்ற தெருமுனை பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை ஆதரித்து பாமக சார்பில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் திமுகவினர் கோஷமிட்டதால் இருதரப்பினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. 11 மணிக்கு ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் 11.05 மணிக்கு மணல் திருடலாம் என்ற தலைப்பில் பேனர் வைத்து பாமகவினர் தெருமுனை கூட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பேனரை அகற்றுமாறு கூறியதோடு, 9 மணிக்குள் கூட்டத்தை முடித்துவிட்டு செல்லுமாறு கூறினர். இதனையடுத்து பேனர் அகற்றப்பட்டு கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

கோவில்பட்டியில் பத்திரத்தில் வாக்குறுதிகளை எழுதி வாக்கு சேகரிக்கும் மநீம வேட்பாளர்

கோவில்பட்டி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கதிரவன், மக்களிடம் வாக்குறுதிகளை உறுதிமொழிப் பத்திரத்தில் எழுதிக் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார். ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் வேட்பாளர்கள் மக்களிடம் உறுதிமொழிப் பத்திரம் எழுதி கொடுப்பார்கள் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் வேட்பாளர் கதிரவன் அப்பகுதிகளில் கேட்டறிந்த பிரச்சசனைகளை நிறைவேற்றித் தருவதாக 50 ரூபாய் பத்திரத்தில் எழுதி கையொப்பமிட்டு பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

பழனியில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் ரவி மனோகரனை தடுத்து நிறுத்திய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பெரிய பள்ளிவாசல் தெருவுக்கு கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிக்க சென்ற ரவி மனோகரன், அப்பகுதி இளைஞர்கள் சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அதிமுகவினருக்கும், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பழனி சட்டமன்ற தொகுதி வீடியோ கண்காணிப்பு குழு அலுவலர் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நான்கு பேர் மீது பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவள்ளூரில் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் தீவிர பிரச்சாரம்

திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் வீதிவீதியாக வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். வெங்கத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கணேஷபுரம், கண்டிகை பட்டறை, கன்னையா நகர், குமரன் நகர், எம்ஜியார் நகர், கலைஞர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கட்சித் தொண்டர்கள் புடைசூழ வி.ஜி. ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அவருடன் சேர்ந்து ஆதரவு திரட்டினர். வி.ஜி. ராஜேந்திரன் செல்லும் அனைத்து இடங்களிலும் மக்கள் அவருக்கு மாலை அணிவித்தும், மலர் கிரீடம் வைத்தும், பட்டாசுகளை வெடித்தும் வரவேற்பு அளித்தனர். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

வெள்ளியணை பகுதியில் திமுக எம்.பி. கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளியணை கடைவீதியில் திமுக  வேட்பாளர் சிவகாமசுந்தரியை ஆதரித்து திமுக எம்.பி. கனிமொழி வாக்கு சேகரித்தார். நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர்களுக்கு மத்தியில் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்த கனிமொழி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், வரப்போகின்ற திமுக ஆட்சி தமிழகத்தை மீட்டெடுக்கும் என்றார்.

எழும்பூரில் பிரச்சாரத்தின் போது பிரியாணி தாளித்த மநீம வேட்பாளர் பிரியதர்ஷினி

எழும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பிரியதர்ஷினி அப்பகுதியில் வாக்கு சேகரித்த போது, சமையல்காரரிடம் கரண்டியை வாங்கி பிரியாணி தாளித்தார். எம்.எஸ்.நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்கக் கோரி அக்கட்சியின் சின்னமான டார்ச் லைட்டுடன் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடுவீடாக வாக்கு சேகரித்த பிரியதர்ஷினி, அங்கு பிரியாணி சமைத்துக் கொண்டிருந்தவரிடம் கரண்டியை வாங்கி தாளித்துக் கொண்டே அதனை தயாரிக்கும் முறை குறித்து கேட்டறிந்தார்.

சென்னை தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

சென்னை தியாகராய நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வாக்குச் சேகரித்தார்.  தியாகராயநகர் கோடம்பாக்கம் சாலை, காவேரி நகர், நல்லான் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக தொண்டர்களுடன் வீடுவீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார். அப்போது வேட்பாளர் கருணாநிதிக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் திமுகவினர் வரவேற்றனர்.

நாமக்கல் அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் கிறிஸ்தவர்களிடையே பிரச்சாரம்

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.பி.பாஸ்கர் கிறிஸ்தவர்களிடையே வாக்கு சேகரித்தார். நாமக்கல் சேலம் சாலையில் உள்ள ஏ.ஜி.சபை, நாமக்கல் காவல்நிலையம் அருகே உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், தமிழ் பாப்பிஸ்ட் திருச்சபைகளுக்கு நேரடியாக சென்ற அவர்
சாதி, மதம் கடந்து கிறிஸ்தவ மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

சேலம் வடக்கில் திமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற பொதுமக்கள்

சேலம் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜேந்திரன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கன்னங்குறிச்சி மாரியம்மன் கோவில் பகுதி, பெத்தான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கையின் அம்சங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்த அவருக்கு, ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்க்கொண்டார். கோடம்பாக்கத்தில் உள்ள டிரஸ்ட்புரம் முதல் தெருவில் இருந்து ஐந்தாம் தெரு வரை வீதி வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்த அவரிடம் மக்கள் தொகுதியில் உள்ள குறைகளை கூறினர்.இதற்கு  பதிலளித்த எழிலன் தான் வெற்றி பெற்றவுடன் ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் குரலாக சட்டப்பேரவையில் ஒலிப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

கடலூரில் சால்வை அணிவித்து திமுக வேட்பாளரை வரவேற்ற பொதுமக்கள்

கடலூரில் திமுக சார்பில் போட்டியிடும் ஐயப்பன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள ஆற்றங்கரை வீதி, அருந்ததி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் திறந்த வாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக வேட்பாளர் ஐயப்பனுக்கு பட்டாசு வெடித்தும் சால்வை அணிவித்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம்

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், வீதிவீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்ததுடன், கோட்டைமேடு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அக்கட்சியின் தேர்தல் பணிமனையையும் திறந்துவைத்தார். ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் இதயதுல்லாவின் இல்லத்திற்கு தனது மகள் அக்சரா ஹாசனுடன் சென்ற கமல்ஹாசன், இஸ்லாமிய மக்களின் ஆதரவுகளை திரட்டினார்.

சேலம் தெற்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஒவ்வொரு கடையாக சென்று பிரச்சாரம்

சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாலசுப்பிரமணியன் அப்பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணிக் கட்சியினருடன் அம்மாப் பேட்டை மற்றும் உழவர் சந்தைப் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். உழவர் சந்தையில் ஒவ்வொரு கடைக்கும் சென்று இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆரணியில் தேமுதிக வேட்பாளர் பாஸ்கரன் மக்களின் கால்களில் விழுந்து முரசு சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பாஸ்கரன் மக்களின் கால்களில் விழுந்து வாக்கு சேகரித்தார். அமமுக கூட்டணியில் களமிறங்கும் தேமுதிக வேட்பாளர் பாஸ்கரன் தனது ஆதரவாளர்களுடன் ஆரணி காய்கறி மார்க்கெட் சென்று மக்களின் கால்களில் விழுந்தும், முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு முகக்கவசம் வழங்கியும் முரசு சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பெரியகுளத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முருகன் தீவிர பிரச்சாரம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முருகன், ஜி கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, காமக்காபட்டி, தேவதான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஜி கல்லுப்பட்டியில் பிரச்சாரத்தில் பேசிய அவர்,மாதந்தோறும் பெண்களுக்கு 1500 ரூபாய், 6 கேஸ் சிலிண்டர் இலவசம் உள்ளிட்ட திட்டங்களை 15 ஆண்டுகளால் ஆனாலும் நிறைவேற்ற முடியாது என கூறிய முருகன், பின்னர் சுதாரித்துக்கொண்டு அதிமுக 5 ஆண்டுகளில் நிறைவேற்றும் எனக் கூறி சமாளித்தார்.

திருவாரூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் வீடுவீடாக பிரச்சாரம்

திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி கலைவாணன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவாரூரின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான அவர், இரண்டாவது முறையாக இத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதனையடுத்து புதுத்தெரு, காணியாளர் தெரு, கொத்தத்தெரு, EVS நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பூண்டி கலைவாணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெளிநாட்டு குளிர்பானமா? அது வேண்டாம் - நாம் தமிழர் வேட்பாளர் 

திருப்பூர் வடக்கு தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரன் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.பொங்குபாளையத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கு கட்சி தொண்டர்களுடன் சென்ற அவர் ஐநூறு ரூபாய் நோட்டு வடிவில் அச்சிடப்பட்டப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி, பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மளிகை கடைக்காரர் ஒருவர் வேட்பாளர் ஈஸ்வரனுக்கு அன்பாக கொடுத்த குளிர்பானத்தை , அது வெளிநாடு நிறுவன பானம் என கருதி அவர் அருந்த மறுத்து விட்டார்.

திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரம்

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் ஈட்டி வீரம்பாளையம் பகுதியில்
கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த தேநீர் கடையில் அமர்ந்து நிர்வாகிகளுடன் தேநீர் அருந்திய வேட்பாளர் பின்னர் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் செல்போன்களில் தனக்கு வாக்களிக்கும் படி ஸ்டிக்கர்களை ஒட்டி வாக்கு சேகரித்தார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் வீடுவீடாக சென்று வாக்கு திரட்டினார். அவருக்கு அத்தொகுதி மக்கள், ஆரத்தி எடுத்து நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்ததுடன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தாம்பரம் தொகுதியில் திமுக வேட்பாளரை மலர் தூவி வரவேற்ற பொதுமக்கள்

தாம்பரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர்.ராஜா அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணிக் கட்சியினருடன் அவர் திறந்த வாகனத்தில் வீதிவீதியாக சென்று முதற்கட்ட வாகனப் பிரச்சாரத்தினை மேற்கொண்டார். திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜாவுக்கு பொன்னாடை அணிவித்தும் மலர்களை தூவியும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் சுப்பிரமணியன் வாக்கு சேகரிப்பு

திருப்பூர் வடக்கு தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூ.வேட்பாளர் ரவி என்கிற சுப்பிரமணியன் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன்  பூலுவப்பட்டி ரிங் ரோடு, அமர்ஜோதி கார்டனிலுள்ள டீ செட் மைதானத்தில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் தொழில்துறையினர் மற்றும் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள  வாக்குறுதிகளை நிறைவேற்ற  துணை நிற்பேன் என வாக்குறுதி அளித்தார். 

மன்னார்குடி அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே தள்ளுமுள்ளு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பராவாக்கோட்டை கிராமத்தில் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர், திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் தனிநபரை பற்றி பிரச்சாரத்தில் பேச வேண்டாம் எனக் கூறினர். அதனையும் மீறி, நாம் தமிழர் கட்சியினர் பேசியதால் இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை அங்கு வந்த போலீசார் கலைத்தனர்.

எழும்பூர் தொகுதியில் வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்த திமுக வேட்பாளர் பரந்தாமன்

எழும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பரந்தாமன் வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புளியந்தோப்பு பகுதிக்கு உட்பட்ட சிவராஜபுரம் குடிசை மாற்று வாரியப் பகுதியில் மேளதாளங்களோடு பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி வாக்கு சேகரித்தார். திமுக வேட்பாளர் பரந்தானுக்கு ரோஜா மலர்களைத் தூவியும் பொன்னாடை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

கோபிசெட்டிபாளையம் அதிமுக வேட்பாளர் அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான செங்கோட்டையன் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். தொகுதிக்குட்பட்ட குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம், நஞ்சைகோபி, பாரியூர் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மழை பெய்யும் வாய்க்கால்களில் தண்ணீர் வரும், ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் பஞ்சம் தான் வரும், தண்ணீர் எங்கு என கேட்டு கண்ணீர் தான் வரும் என்றார்.

தொண்டாமுத்தூரில் களமிறங்கும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர பிரச்சாரம்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி சுண்டக்காமுத்தூர், ராமசெட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். ராம செட்டிபாளையத்தில் உள்ள ஸ்ரீ சதாசிவன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், கோவையில் சாலைகள், பாலங்கள், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். தன் மனைவி குழந்தைகளை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொடுமைப்படுத்திய ரவுடி ஒருவரையே திமுக இந்த தொகுதியில் வேட்பாளராக களமிறக்கிவுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றஞ்சாட்டினார். 

ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் ஜேஜே எபினேசர் தீவிர வாக்குசேகரிப்பு

சென்னை ஆர்கே நகரில் திமுக சார்பில் களமிறங்கும் ஜேஜே எபினேசர் சைக்கிளில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் 30 பேருடன் பேரணியாக சென்ற அவர், இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். முன்னதாக சைக்கிள் பேரணி தொடங்குவதற்கு முன் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து திமுக வேபாளர் ஜேஜே எபினேசருக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு மக்களிடையே தேர்தல் பிரச்சாரம்

திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எ.வ.வேலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தென்மாத்தூர், உடையானந்தல், அழகானந்தல், கன்னப்பந்தல், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் திமுக வேட்பாளருமான எ.வ.வேலு உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

உசிலம்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மா உணவகத்தில் உணவருந்தி வாக்கு சேகரித்தார் 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அய்யப்பன், வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மக்களோடு மக்களாய் உணவருந்திய அவர், உணவக பணியாளர்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கடைகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரிடமும் அய்யப்பன் வாக்கு திரட்டினார்.

திருச்சி மேற்கில் அதிமுக வேட்பாளர் மக்களிடம் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் பத்மநாபன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்திலும், நடந்து சென்றும் மக்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் பத்மநாபன்  துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.  அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் அதிமுக அரசு மீண்டும் ஆட்சி அமைத்தவுடன் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாங்கி தரப்படும் என உறுதியளித்தார்.

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே. என் நேரு தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே. என் நேரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உய்யகொண்டான், திருமலை, கீதா நகர் பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் மக்களை சந்தித்த அவர், திமுக ஆட்சிக்கு வந்து 6 மாதத்திற்குள் சாலையை அகலப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

அதிமுக தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுங்களை வழங்கி ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் வாக்கு சேகரிப்பு

ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.வி.ராமலிங்கம் அதிமுக அரசின் சாதனைகளை கூறி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
எலவுமலை மற்றும் பேரோடு ஊராட்சிக்கு உட்பட்ட கரை எல்லப்பாளையம், ஜெ.ஜெ.நகர், அண்ணா நகர், பச்சைப்பாளி உள்ளிட்ட இடங்களில் அதிமுக தேர்தல் அறிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுங்களை வாக்காளர்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

திருவள்ளூர் தொகுதியில் எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்து முடிந்தவரை பல நலத்திட்டங்களை செய்துள்ளதாகவும்,  மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அனைத்தும் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன் நிறைவேற்றப்படும் என்று திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் பிரச்சாரம் செய்தார். திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட கடம்பத்தூர், கோட்டையூர், வயலூர், சூரகாபுரம், மும்முடிகுப்பம், உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்ற வி.ஜி. ராஜேந்திரனுக்கு திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சி உருவாக்க அமமுகவுக்கு வாக்களியுங்கள்-டிடிவி தினகரன்

தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை உருவாக்கவும், வெளிப்படையான நிர்வாகத்தை மேற்கொள்ளவும் அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் செய்தார். நாகப்பட்டினம் அரிவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். முன்னதாக கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் போன்று வேடமிட்ட கலைஞர்கள் நடனமாடி பொது மக்களை உற்சாகப்படுத்தினர்.

விருகம்பாக்கத்தில் வீடுகளின் கதவுகளை தட்டி மக்களிடம் ஆதரவு திரட்டினார் மயில்சாமி

விருகம்பாக்கம் தொகுதி சுயேட்சை வேட்பாளர் நடிகர் மயில்சாமி  நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். தசரதபுரம் மீன் சந்தை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், அம்மா..அய்யா.. நான் மயில்சாமி வந்திருக்கேன் என தமக்கே உரிய பாணியில் அழைத்து ஆதரவு திரட்டினார். பூட்டியிருந்த வீடுகளின் கதவுகளை தட்டி வாக்கு சேகரித்த அவர்,   தமக்கு என்ன சின்னம் ஒதுக்கப்பட்டாலும், மயில்சாமி என்ற பெயரை வைத்து வாக்கு கேட்பதாக கூறினார்.

பெரம்பலூரில் நரிக்குறவ மக்களோடு நடனமாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் நரிக்குறவ மக்களோடு நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சின்னாறு, எறையூர், நரிக்குறவ காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்த அவர், இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு நரிக்குறவ இன மக்கள் பாசி மணி மாலையை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்குசேகரிப்பு

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரியாங்குப்பம் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தட்சிணாமூர்த்தி, சண்முகா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இதேபோல் ஏம்பலம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்குகளை திரட்டினார். மனவெளி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமனும், மீனவ கிராமங்களுக்கு சென்ற வாக்கு சேகரித்தார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் காலில் அடிப்பட்ட நிலையில் ஊன்றுகோலுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மநீம கூட்டணி வேட்பாளர் ஷெரீப் மேள தாளங்கள் முழங்க வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் போட்டியிடும் ஷெரீப் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்கு உட்பட்ட ராயப்பேட்டை, சுந்தரேசன் கோயில் தெரு, ஐயா தெரு, முத்துமொழி தெரு, டி.டி.கே.சாலை உள்ளிட்ட பகுதிகளில் மேள தாளங்கள் முழங்க கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக நடந்து சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலன் மற்றும் பாஜக சார்பில் குஷ்பூ ஆகியோர் களம் காண்கின்றனர்.

பரமக்குடியில் மேளதாளங்களுடன் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் சதன்பிரபாகர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சதன்பிரபாகர் அப்பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நயினார்கோவில் ஒன்றியத்திலுள்ள பகைவென்றி, அக்கிரமேசி உள்ளிட்ட கிராமங்களில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மௌலானா பிரச்சாரம்

சென்னை வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஹசன் மௌலானா, திருவள்ளுவர் நகரில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பிரச்சாரத்திற்கு இடையே அப்பகுதியிலிருந்த விநாயகர் கோயிலிலும் ஹசன் மௌலானா வழிபாடு செய்தார்.

திருப்பரங்குன்றத்தில் வீடுவீடாக வாக்கு சேகரித்த மநீம வேட்பாளர் பரணிராஜன்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பரணிராஜன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெரிய ரத வீதி, மேல ரத வீதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று பரணிராஜன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்சியின் சின்னமான டார்ச் லைட்டுடன் வாக்கு சேகரித்த அவர், குடிநீர் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு தரமான சாலைகள் அமைத்துத் தரப்படுமென பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணி தீவிர தேர்தல் பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான தங்கமணி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோருடன் பேரணியாக வந்த அமைச்சர் தங்கமணி, காமராஜ் நகர்,  தட்டாங்குட்டை, மேல் விளைவு உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது  குமாரபாளையம் தொகுதிக்கு செய்யப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளையும், அதிமுக அரசின் 10 ஆண்டு கால சாதனைகளையும் அவர் எடுத்து கூறினார்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கா.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட சாலப்பாளையம், முத்துசோளிப்பாளையம், விஸ்வநாதபுரி, பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிரமாக வாக்கு சேரித்தார். வெற்றி பெற்றால் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவேன் என்றும், மத்திய அரசின் நிறுவனங்களை அரவக்குறிச்சி தொகுதிக்கு கொண்டு வருவேன் எனவும் வாக்குறுதி அளித்தார். 

நாமக்கலில் திமுக சார்பில் போட்டியிடும் இராமலிங்கம் வீதிவீதியாக திறந்த வாகனத்தில் பிரச்சாரம்

நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இராமலிங்கம் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மோகனூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணிக் கட்சியினருடன் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அவருக்கு ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

கடையநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி மக்களின் காலில் விழுந்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் கிருஷ்ணமுரளி மக்கள் காலில் விழுந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  மறைந்த முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் இளைய மகனும், அதிமுக வேட்பாளருமான கிருஷ்ணமுரளி  செங்கோட்டை காவல்நிலையம் அருகேயுள்ள  அண்ணா சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து,  அம்மன் சன்னதி, குளத்துமுக்கு, வம்பளந்தான் முக்கு, வல்லம்ரோடு, கீழ பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் காலில் விழுந்து இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளத்தில் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் மேள தாளம் முழங்க, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

மதுரை வடக்கு பாஜக வேட்பாளர் சரவணன் ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று தேர்தல் பிரச்சாரம்

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சரவணன் ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று வாக்கு சேகரித்தார். திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சரவணன் அதிமுக கூட்டணியில் தேர்தலில் களம் காண்கிறார். இந்நிலையில், தொகுதிக்கு உட்பட்ட செல்லூர் காய்கறி மார்க்கெட் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் சென்று நேரடியாக மக்களை சந்தித்து அவர், படித்தவனாக உள்ள தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

உசிலம்பட்டியில் அமமுக சார்பில் போட்டியில் மகேந்திரன் பிரச்சாரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் மகேந்திரன், விவசாய பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். பன்னியான், கீழப்பட்டி, சிவநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அமமுக வேட்பாளர் மகேந்திரனுக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனார். 

ஒசூரில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பிரகாஷ்

ஒசூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாஷ் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாசிநாயக்கனப்பள்ளி, எலுவலப்பள்ளி, சொன்னேபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் திறந்த வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டணிக் கட்சியினருடன் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த பிரகாஷ் திமுகவின் தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது - ஓபிஎஸ்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தமது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய, விமானம் மூலமாக மதுரை வந்த அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுகவில் சேர்ந்தது பற்றி கேட்டதற்கு, அதிமுக பெரிய ஆலமரம், அங்கிருந்து யார் சென்றாலும் பாதிப்பு இல்லை என்றார்,

மற்றோர் கேள்விக்குப் பதிலளித்த பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள் சிலர் அமுமகவில் இணைவதால், அதிமுகவின் ஓட்டு வங்கி பாதிக்கப்படாது எனவும் கூறினார்.

சிதம்பரத்தில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் அப்துல் ரஹ்மான்தேவாலயத்தில் வாக்கு சேகரித்த வேட்பாளர் அப்துல் ரஹ்மான்

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் அப்துல் ரஹ்மான் அங்குள்ள தேவாலயங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். கனக சபைப்பகுதி மற்றும் பள்ளிப்படையில் இருந்த தேவாலயங்களுக்கு கூட்டணிக் கட்சியினருடன் சென்ற அவர், துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனையடுத்து வீதிவீதியாக பிரச்சாரம் மேற்கொண்ட அவருக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல்லில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணி கட்சியினர்களுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கரகாட்டம், தப்பாட்டத்துடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கக்கன் நகர் பகுதியில் திறந்தவெளி வேனில் நின்றவாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

சென்னை ஆர்.கே. நகர் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் தேர்தல் பிரச்சாரம்

சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தண்டையார்பேட்டை வ.உ.சி.நகர்  மார்க்கெட்டில் தனது ஆதரவாளர்கள் உடன் சென்ற  அவர், வீதி வீதியாக நடந்து சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அனைவரிடமும் அதிமுகவின் வாக்குறுதிகளை அவர் எடுத்துக்கூறினார்.

சென்னை ஆர்கே  நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கெளரி சங்கர், வீடு வீடாக சென்று வாக்கு திரட்டினார். தண்டையார்பேட்டை நேதாஜி நகருக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற அவர், இளைஞர் நலன் , வேலை வாய்ப்பு, போக்குவரத்து நெரிசல் இல்லா சாலை வசதி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திட நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

திருச்சி மண்ணச்சநல்லூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரஞ்சோதி மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பரஞ்சோதி மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிச்சாண்டார்கோயில் துவங்கி இந்திரா நகர், ராயர்தோப்பு, பட்டத்தரசியம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாழவந்தபுரம், நரிக்குறவர் காலனி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பரஞ்சோதி உறுதியளித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணியினர் இணைந்து செயல்படுகின்றனர் - குஷ்பு பிரச்சாரம்

அதிமுகவினர் கட்சி பாகுபாடு பாராமல் பாஜகவுடன் இணைந்து செயல்படுகின்றனர் என ஆயிரம் விளக்கு பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பூ கூறியுள்ளார். தொகுதியில் கடந்த 2 நாட்களாக வாக்கு சேகரித்து வரும் அவர், கோடம்பாக்கத்தில் பாஜக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பிரச்சாரங்களில் அதிமுக கொடி இடம்பெறாமல் இருப்பது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட கோடம்பாக்கம் சுபேதார் தோட்டம், வரதராஜ பேட்டை, ஆரோக்கிய சாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று, தமக்கு வாக்கு அளிக்கும்படி குஷ்பு கேட்டுக்கொண்டார்.

தொண்டாமுத்தூரில் மன்சூர் அலி கான் வித்தியாசமான பிரச்சாரம்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலி கான், மீன் மார்க்கெட்டில் மீனை வெட்டியும், வியாபாரம் செய்தும் வித்தியாசமான பிரச்சாரத்தை செய்தார். உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ மீன் 100 ரூபாய் என வியாபாரம் செய்த மன்சூர் அலி கான், அங்கு வந்த மக்களிடம் நோட்டீஸ் வழங்கி வாக்கு சேகரித்தார்.பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

பெருந்துறை கொ.ம.தே.க. வேட்பாளர் கே.கே.சி பாலு தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி பாலு தேவாலயங்களில் வழிபாடு நடத்திவிட்டு வந்த கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். சென்னிமலை செல்லும் சாலையில் உள்ள தேவாலயத்தில் இருந்து வெளியே வந்த கிறிஸ்தவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ஈரோடு மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் வீடு வீடாக வாக்குச்சேகரிப்பு

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கங்காபுரம், சூரியம்பாளையம், நரிப்பள்ளம், அம்மன் நகர், கொங்கம்பாளையம், மாமரத்துப்பாளையம், கருப்பக்கவுண்டன்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார். வேட்பாளரை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர். 

பழனி தொகுதி அமமுக வேட்பாளர் வீரக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வீரக்குமார் கொடைக்கானலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக வாக்கு சேகரிக்க காரில் வந்திறங்கிய வீரக்குமாரை வரவேற்க வந்திருந்த தேமுதிக நகர செயலாளர் செந்தில், வீரக்குமாருக்கு சால்வை அணிவிப்பதற்கு பதிலாக, காரின் பின்னால் அமர்ந்திருந்த அமமுக மேற்கு மாவட்ட செயலாளர் கருப்பண்ணனுக்கு சால்வை அணிவித்தார். பின்னர் சுதாரித்து வீரக்குமாருக்கு சால்வை அணிவித்தார்.

அமமுக வேட்பாளர் முனியசாமிக்கு ஆதரவாக குக்கர் காவடியுடன் பிரச்சாரம் 

இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முனியசாமிக்கு ஆதரவாக குக்கர் காவடியுடன் வீதி வீதியாக சென்று அந்த கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்‍. இராமேஸ்வரம் நகர் பகுதியில் உள்ள கடைகளில் துண்டுபிரசுரங்களை விநியோகித்து அவர்கள் ஆதரவு திரட்டினர்‍.

உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சாலையோர வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பரப்புரை

உத்திரமேரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் வாலாஜாபாத்தை சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் மேற்கொண்ட அவர், சாலையோர வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வினியோகித்து தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். 

அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமி வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பு

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍. இத்தொகுதிக்குட்பட்ட திருமலாபுரம், கடையாலுருட்டி,  வேலப்பநாடாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுக அரசின் பெண்களுக்கான நலத்திட்டங்களை பட்டியலிட்டும், கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்களுக்கான திட்டங்களை குறிப்பிட்டும், இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍. 

மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அச்சரப்பாக்கம் வடக்கு  ஒன்றியத்திற்குட்பட்ட விநாயகநல்லூர்,  வேடந்தாங்கல், கரிக்கிலி,  பாப்பநல்லூர், உள்ளிட்ட கிராமங்களில் நடந்து சென்றும், திறந்தவெளி ஜீப்பில் சென்றும் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர்.

விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதி மீண்டும் போட்டி

சென்னை - விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. சாலி கிராமத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அ.ம.மு.க மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி உல்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பணி , பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வேளச்சேரி அதிமுக வேட்பாளர் அசோக் தீவிர வாக்கு சேகரிப்பு 

சென்னை வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அசோக், நரிக்குறவர்கள் மத்தியில் ரிக்சா ஓட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். பெரியார் நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்றும், அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லியும் அவர் வாக்கு சேகரித்தார்‍.நரிக்குறவர்கள் வழங்கிய பாசி மணி மாலைகளை அணிந்து கொண்ட அவர், அவர்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்தும் ரிக்சா வாகனத்தை இயக்கிச் சென்று வாக்கு சேகரித்தார்.

அரக்கோணம் அதிமுக வேட்பாளர்  ரவி வாக்கு சேகரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் ரவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அரக்கோணத்தில் உள்ள  ராஜீவ் காந்தி நகர்,கணேஷ் நகர், ஜோதி நகர் மற்றும் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பாமக, பாஜகவை சேர்ந்த கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்று மக்களை சந்தித்த அவர், அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.  

விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சின்னப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சின்னப்பன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இத்தொகுதியில் மூன்றாவது முறை போட்டியிடும் எம்.எல்.ஏ சின்னப்பன், குரலயம்பட்டி, இலந்தைகுளம், வேடபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளருக்கு மலர்கள் தூவியும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுக வேட்பாளர் கே.சி. கருப்பண்ணன் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அம்மாபேட்டை பகுதியில் உள்ள கரிய காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பிரச்சார வாகனத்தின் படிக்கட்டுகளை தொட்டு கும்பிட்டு அதன்பின் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தில் எடுத்து வரவேற்பு அளித்தனர். 

எடப்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார்

சேலம் எடப்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெள்ளாண்டிவலசு மற்றும் நைனாம்பட்டியில் உள்ள தேவாலயங்களில் நடந்த  பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்ட அவர் தேவாலம் வருபவர்களிடம் திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொண்டார். 

திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளர் கோ. அரி தீவிர வாக்கு சேகரிப்பு

திருத்தணி தொகுதியின் அதிமுக வேட்பாளர் கோ.அரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கரிமேடு நாகேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்ட பின்னர் பிரசாரம் மேற்கொண்ட அவர், பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட  கரிமேடு, சாமந்தாவாடா ,நெடியோம் கொளத்தூர் ஆகிய கிராமங்களில் திறந்தவெளி வேனில் சென்று, துண்டு பிரசுரங்களை வினியோகித்து வாக்கு சேகரித்தார். 

கோவையில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தேர்தல் பிரச்சாரம்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சுண்டாக்காமுத்தூர் சாலை, திருநாள் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேரணியாக சென்று மக்களை சந்தித்த அவர் உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணி போட்டியிடுகிறார்.

சேலம் மேற்கில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜேந்திரன் வாக்குசேகரிப்பு

சேலம் மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜேந்திரன் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரித்தார்.மல்லமூப்பம்பட்டி, தளவாய்பட்டி, அய்யம்பெருமாம்பட்டி, எம்.கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி, கேட்டுக்கொண்டார். 


மீண்டும் வாய்ப்பளித்தால் மேலும் பல திட்டங்களை கொண்டுவருவேன் - வி.ஜி. ராஜேந்திரன்

திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கம் பகுதியில் துணைமின் நிலையமும் 7 மாடிகள் கொண்ட அரசு மகப்பேறு மருத்துவமனையும் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக தாம் கொண்டுவந்ததுதான் என திருவள்ளூர் திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் கூறினார். திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் களமிறங்கும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், பாப்பரம்பாக்கம், உப்பூர் மேட்டுத்தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தன்னால் முடிந்ததை தொகுதிக்கு பெற்றுதந்துள்ளதாகவும் மீண்டும் வாய்ப்பு தந்தால் திருவள்ளூர் தொகுதி ஆளுங்கட்சி தொகுதியாக மாறும் என்றும் அவர் கூறினார். பிரச்சாரத்துக்கு வருகை தந்த வி.ஜி.ராஜேந்திரனுக்கு தொகுதி மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்

சங்ககிரியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

சேலம் மாவட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுந்தர்ராஜன் கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் சுவாமி செய்த பின், பிரச்சாரத்தை தொடங்கினார். கல்வடங்கம், கோனேரிப்பட்டி, பொன்னம்பாளையம், காவேரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு மேளதாளங்களுடன் திறந்தவெளி வாகனத்தில் சென்ற அவர், அதிமுகவின் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக கையில் ஆரத்தியுடன் நின்றுக்கொண்டிருந்த பெண்களிடம், இரட்டை இலைக்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார். 

மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் தீவிர வாக்குச் சேகரிப்பு 

சென்னை மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி, சிலம்பம் சுற்றிக் காண்பித்து,விளையாட்டு வீரர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போரூர் கார்டன் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிலம்பம் சுற்றிக் காண்பித்தும்,துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் அவர், வாக்கு சேகரித்தார்‍. அனைத்து வசதிகளுடன்கூடிய புதிய விளையாட்டு மைதானம் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍.

மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருவேலமரத்தை வெட்டி  வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் காசிராமன், கருவேல மரத்தை வெட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தருமதானபுரம், வல்லாலகரம், மணக்குடி உள்ளிட்ட கிராமங்களில்  திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்த அவர், மக்கள் தாமாக கருவேலமரங்களை வெட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கருவேலமரம் ஒன்றை வெட்டினார்.

மதுரை தெற்கில் தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்த பூமிநாதன்

மதுரை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் போட்டியிடும் பூமிநாதன் அப்பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இன்று கீழவாசலிலுள்ள சென் மேரிஸ் சர்ச்சிற்கு சென்ற அவர், ஞாயிறு சிறப்பு ஆராதனை, திருப்பலி முடிந்து வந்தவர்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார். இதனையடுத்து முனிச்சாலை, காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் சென்று பூமிநாதன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி, பர்கூரில் திமுக சார்பில் போட்டியிடும் மதியழகன் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மதியழகன், ஓரப்பம், நாகம்பட்டி, சின்ன ஓரப்பம், பையனப்பள்ளி,சுண்டம்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். ஆரத்தி எடுக்கும் விதமாக கையில் விளக்குடன் திரண்டிருந்த அப்பகுதி பெண்கள், வேட்பாளர் மதியழகனுக்கு வரவேற்பு அளித்தனர். 

சீர்காழி தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பி.வி. பாரதி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கடவாசல் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், கடவாசல் ,வடகால்.திருகருக்காவூர்,எடமணல்  ஆகிய ஊராட்சிகளில் திறந்தவெளி ஜீப்பில் சென்றும் நடந்து சென்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி அவர் வாக்கு சேகரித்தார். 

தேமுதிக வேட்பாளருக்கான பிரச்சாரக் கூட்டத்தை புறக்கணித்த டிடிவி தினகரன் ? 

தஞ்சை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சார கூட்டத்தை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் புறக்கணித்ததது தேமுதிகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை தொகுதி தேமுதிக வேட்பாளர் டாக்டர். ராமநாதனுக்கு ஆதரவாக திலகர் திடலில் டி.டி.வி.தினகரன் இன்று பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது. அதற்காக மேடை, இருக்கைகள், தடுப்புகள் அமைக்கப்பட்ட நிலையில், திடீரென டிடிவி. தினகரன் பிரச்சாரக் கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவை அனைத்தும் அகற்றப்பட்டன. அதே நேரம் பாபநாசம், திருவையாறு, ஒரத்தநாடு தொகுதி அமமுக வேட்பாளர்களை ஆதரித்து டிடிவி. தினகரன் பிரச்சாரம் செய்யவுள்ளதாக வெளியான தகவல் தேமுதிகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக வேட்பாளர் அய்யப்பனை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அய்யப்பனை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், நூறு கட்சிகள் கூட்டணி அமைத்து வந்தாலும் அதிமுகவை வெல்ல முடியாது என்றார்.

திமுக வேட்பாளர்  தா.மோ.அன்பரசன் தேர்தல் பிரச்சாரம் 

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர்  தா.மோ.அன்பரசன் தொண்டர்கள் புடை சூழ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பக்தவச்சலம் நகர், லக்ஷ்மி நகர், இந்து காலனி, நேரு காலனி,பழவந்தாங்கல், நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் திரண்டு சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவருடைய மைத்துனர் வெங்கடேஷ், தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கொங்கணாபுரம் ஒன்றியம் காவடிகாரனூரில் வசிக்கும் மணி என்பவரது குடிசை வீடு, நேற்று முன்தினம் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்த வெங்கடேஷ், தேர்தல் முடிந்தவுடன் புதிதாக காங்கிரீட் வீடு கட்டி தருவதாக உறுதியளித்து வாக்கு திரட்டினார். அப்போது அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்டோருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பொன்னாடை அணிவித்து அதிமுகவிற்கு ஆதரவு திரட்டுமாறு கோரிக்கை விடுத்தார். 

திருச்செந்தூர் தொகுதியில் நகைச்சுவை நடிகர் வையாபுரி தேர்தல் பிரச்சாரம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், நகைச்சுவை நடிகருமான வையாபுரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட ஆறுமுகநேரி, முதுகிருஷ்ணா புரம், ராஜமண்ணியபுரம், வடக்கு சுப்ரமணியபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டினார். 

கோவையில் சிங்காநல்லூர் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் மகேந்திரனுக்கு கமல்ஹாசன் வாக்கு சேகரிப்பு

அரசியல் மேடையில் தன்னிடம் நடிக்கச் சொல்லிக் கேட்க வேண்டாம் என்றும், தான் நடிக்க வேண்டுமென்றால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார். கோவை பீளமேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்துக் கமல்ஹாசன் பேசினார். அப்போது கீழே இருந்த சிலர் சதிலீலாவதி திரைப்படத்தில் பேசியது போன்று கொங்குத் தமிழில் பேசுமாறு கேட்டனர். தான் இங்கு நடிக்க வரவில்லை எனக் கூறியதுடன், தான் நடிக்க வேண்டுமென்றால் ரசிகர்கள் டிக்கெட் வாங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.  

முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம்  மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராஜகண்ணப்பன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலக்கொடுமலூர், கொட்டகுடி, மணலூர், நல்லூர்,  மேலகன்னிசேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதிவீதியாக  நடந்து சென்று வாக்கு சேகரித்த அவருக்கு, பட்டாசு வெடித்து,  மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பு அளித்தனர். 

தியாகராய நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சத்தியா வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியா அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொய்யா தோப்பு, டாக்டர் சுப்பராயன் நகர், துரைசாமி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். மேளதாளங்களுடன் வாக்கு சேகரித்த சத்தியாவிற்கு சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

சென்னையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரமேஷ் கொண்டல் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை மாதவரத்தில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ரமேஷ் கொண்டல், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்‍. பம்மதுகுளம் பகுதியில் திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்றும், வீடு வீடாகச் சென்றும்,வாகனஓட்டிகள்,வியாபாரிகளிடத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் டார்ச் லைட் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍.

திருவெறும்பூரில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக சாலையோரக் கடையில் பூ வாங்கி விட்டு அங்கிருந்த முனீஸ்வரர் கோவிலில் சாமிதரிசனம் செய்தபின் பிரச்சாரத்தைத் துவங்கினார். இதனையடுத்து காட்டூர், அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று அன்பில் மகேஷ் வாக்கு சேகரித்தார். இவருக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

விருத்தாச்சலம் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரம் 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட சித்தூர், சாத்தியம், வண்ணாத்தூர், நல்லூர், நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். 

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வாக்கு சேகரிப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பொள்ளாச்சி ஜெயராமன், தேவாலயத்திற்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொள்ளாச்சி இந்திரா நகரில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற அவர், அங்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த கிறிஸ்துவ மக்களிடையே வாக்கு சேகரித்தார்.அப்போது அவருக்கு  பாதிரியார்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

திருவொற்றியூரில் திமுக சார்பில் போட்டியிடும் கே.பி.சங்கர் வாக்கு சேகரிப்பு

திருவொற்றியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கே.பி.சங்கர் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியான எண்ணூர், அன்னை சிவகாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அக்கட்சியினர் சார்பில் 200 ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை மற்றும் கிரீடம் கே.பி.சங்கருக்கு அணிவிக்கப்பட்டது. மேளதாளங்களுடன் வாக்கு சேகரித்த அவருக்கு ஆரத்தி எடுத்து அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

கள்ளக்குறிச்சியில் ரதத்தில் வந்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் ரதத்தில் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திமுக கூட்டணியில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் தொகுதிக்கு உட்பட்ட குதிரைசந்தல், சடயம்பட்டு, மட்டியை குறிச்சி,நல்லாத்தூர் பகுதிகளில் ரதத்தில் வந்து மக்களை சந்தித்த அவர் கை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அணைக்கட்டு திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் தேர்தல் பிரச்சாரம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட இறைவன்காடு, கழனிபாக்கம், ஊனை, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினர்களுடன் திறந்தவெளி வேனில் சென்றவாறு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம்: துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர்

பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக துறைமுகம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை சவுக்கார்ப்பேட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க வெற்றி பெற்றப்பின் துறைமுகம் தொகுதி நம்பர் ஒன் தொகுதியாக மாற்றப்படும் என்றும், அதிமுக கூட்டணி வெற்றி பெறுவது நிச்சயம் என்றும் பா.ஜ.க வேட்பாளர் வினோஜ் பி செல்வம் தெரிவித்தார். 

துறையூர் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தி தேர்தல் பிரச்சாரம் 

திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா காந்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட பூனாட்சி, பெருமாள் பாளையம், நரசிங்கபுரம், ஒட்டம்பட்டி ஆகிய கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இந்திரா காந்திக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர். 

மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் மலைவாழ் மக்களுடன் நடனமாடி தேர்தல் பிரச்சாரம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் மலைவாழ் மக்களுடன் நடனமாடி வாக்கு சேகரித்தார். தொகுதிக்குட்பட்ட பில்லூர் பகுதியில் சண்முக சுந்தரம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி மலைவாழ் மக்கள் அவர்களது பாரம்பரிய முறைப்படி இசைக்கருவிகளை இசைத்தும், நடனமாடியும் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களுடன் சென்று திமுக வேட்பாளர் சண்முக சுந்தரமும் நடனமாடினார்.

இராசிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மதிவேந்தன் அறிமுக கூட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர்.மதிவேந்தனின் அறிமுக கூட்டம் மற்றும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் முன்னிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய மதிவேந்தன், ராசிபுரம் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என தொண்டர்களை கேட்டுக்கொண்டார். 

சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. ஜாபர்கான்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேயர் மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டும், அதிமுக அரசின் சாதனைகளைக் கூறியும் அவர் வாக்கு சேகரித்தார்‍. அதிமுக கிராமிய கலைக்குழுவினர், இசை நிகழ்ச்சி மூலம் இரட்டை இலை சின்னத்திற்கு அப்போது ஆதரவு திரட்டினர்.

சென்னையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் வீடுவீடாக சென்று வாக்கு திரட்டினார். அவருக்கு அத்தொகுதி மக்கள், மலர் தூவி, ஆரத்தி எடுத்ததுடன் நடனமாடி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அவருடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேளதாளங்கள் முழங்க ஆதரவாளர்களுடன் நடைபயணமாக வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், அங்கு திரண்டிருந்த குழந்தைகளுக்கு கைக்கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பிரச்சாரத்திற்கிடையே பேசிய அவர், தன்னை வெற்றிபெற செய்தால் கட்டாயம் சட்டமன்றத்தில் குரல் கொடுத்து அனைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருவேன் என வாக்குறுதி அளித்தார்.

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய விசிக வேட்பாளர் பனையூர் பாபு

மதுராந்தகம் அருகே விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபுவின், செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. செய்யூர் தொகுதியில் போட்டியிடும் அவர், முகையூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்‍. அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், திடீரென விபத்தில் சிக்கினார்‍. இதனைக் கண்ட பனையூர் பாபு, விபத்துக்குள்ளான இளைஞரை மீட்டு, முதலுதவி செய்ததுடன், மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

ஓமலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் மணி வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக வேட்பாளர் மணி வாக்கு சேகரிப்பின் போது 100க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். தும்பிபாடியில் வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர் மணியை பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை உள்ளிட்டோருடன் திறந்தவெளி வானத்தில் வேட்பாளர் மணி வாக்கு சேகரித்தார். பிரச்சார நிகழ்வின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 

ஓமலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் பிரச்சாரம் 

சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிக்கனம்பட்டி, தும்பிபாடி, தின்னபட்டி, சர்க்கரைசெட்டிபட்டி உட்பட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொண்டர்கள், நிர்வாகிகள் மேளதாளத்துடன் மோகன் குமாரமங்கலத்துக்கு வரவேற்பு அளித்தனர். 

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 நிச்சயம் - ஓ.பன்னீர் செல்வம் உறுதி

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்ந்தால் ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் நிச்சயம் வழங்குவோம் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார். தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஓ. பன்னீர் செல்வம், வீதி, வீதியாக சென்று தமக்கு ஆதரவு திரட்டினார். கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ஓ. பன்னீர் செல்வம், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என தெரிவித்தார்.பெண்கள் முன்னேற பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக ஓ.பி.எஸ் குறிப்பிட்டார். அரசின் சாதனைகளை பட்டியலிட்ட ஓ.பி.எஸ், அதிமுக ஆட்சி தொடர ஆதரவு தருமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலன் வாக்கு சேகரிப்பு

சென்னை - ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன் , வீதி, வீதியாக, வீடு வீடாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் பிரசாரம் செய்த மருத்துவர் எழிலன், திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இடம்
பெற்ற வாசகங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து ஆதரவு திரட்டினார். திமுக வேட்பாளர் எழிலுடன் அக்கட்சியின் நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடன் சென்றனர். கோடம்பாக்கம் ஜக்கரியா காலனியில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட மருத்துவர் எழிலன், தாம் வெற்றி பெற்றால், ஆயிரம் விளக்கு தொகுதியின் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு எட்டப்படும்என உறுதி அளித்தார்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் எல்‍.முருகன் தீவிர வாக்குச் சேகரிப்பு 

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் எல்‍.முருகன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍. கொண்டரசம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு , தொண்டர் ஒருவர் முருகன் சிலையை வழங்கினார்‍. வீதி வீதியாக திறந்த வாகனத்தில் சென்று, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பரப்புரை மேற்கொண்டார். தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில்வே பாதையை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து தாமரை சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்.

கடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.சி.சம்பத் தீவிர வாக்கு சேகரிப்பு

கடலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.சி. சம்பத், வீதி விதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாதிரிகுப்பம் சண்முகா நகர், இந்திரா நகர், குறிஞ்சி நகர், வள்ளலார் நகர், மூகாம்பிகை நகர், உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர், வாகனங்களில் கொடி ஏந்தி ஊர்வலமாக சென்ற நிலையில், எம்சி சம்பத்துக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அமமுக வேட்பாளர் செந்தமிழன் வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

சென்னை சைதாப்பேட்டையில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்வேட்பாளர் செந்தமிழன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார்‍. சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சிஐடி நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் சென்று குக்கர் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்.

விழுப்புரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தேர்தல் பிரச்சாரம் 

விழுப்புரம் தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் தொகுதி வேட்பாளருமான பொன்முடி வாக்கு சேகரித்தார். விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கி, பழைய பேருந்து நிலையம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட பொன்முடிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர் என மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள் எனக் கூறிய பொன்முடி, திமுக ஆட்சிக்கு வந்தால் விழுப்புரம் மீண்டும் பொலிவு பெறும் என்றார். 

 

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments