இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தால் வென்ற இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 டி20 போட்டிகள் தொடரில் இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளை வென்றுள்ளன. இந்த நிலையில் வெற்றியைத் தீர்மானிக்க கூடிய 5வது போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
டாஸை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட்கோலி களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடியாக ஆடி வந்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 பந்துகளில் 94 ரன்கள் குவித்தது. கடந்த 4 போட்டிகளிலும் தடுமாறிய ரோகித் சர்மா அரைசதம் அடித்து 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் களமிறங்கி ருத்ர தாண்டவமாடிய சூர்யகுமார் யாதவ் அதே அதிரடியை தொடர்ந்தவர் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி அரைசதம் அடித்தார். இதன் மூலம் டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்த கேப்டன் என்ற சிறப்பினை பெற்றார். இறுதிவரை களத்தில் இருந்து நாலப்புறமும சிக்ஸர் பவுண்டரிகளாக விரட்டிய விராட் கோலி 80 ரன்னும், ஹர்திக் பாண்டியா 39 குவித்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 224 ரன்கள் குவித்தது.
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. இந்திய வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் டக் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜோஷ் பட்லருm, டேவிட் மாலனும் அதிரடியாக விளையாடி ஜெட் வேகத்தில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
அவர்களின் வேகத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டார் 12 வது ஓவரில் மீண்டும் பந்து வீச வந்த புவனேஷ்வர். அரைசதம் அடித்த பட்லரை தனது ஹிட்லர் பந்துவீச்சால் விக்கெட் எடுத்தார். அதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த மாலனும் ஷர்துல் தாக்கூரின் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். அதன்பிறகு வந்த வீரர்கள் வருவதும் போவதுமாக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 5 போட்டிகள் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது இந்திய அணி!
Comments