வரி செலுத்தவில்லை... பள்ளி முன்பு குப்பை வண்டிகளை நிறுத்திய ஊராட்சி நிர்வாகம்!

0 4197

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி நிர்வாகம் சொத்துவரி செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டி, குப்பை வண்டியை பள்ளி முன் நிறுத்திய ஊராட்சி நிர்வாகத்தால் மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.

கிருஷ்ணகிரி அருகேயுள்ள அகசிபள்ளி ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர் . ஆண்டுதோறும் பள்ளி நிர்வாகம் சார்பில் சொத்துவரி மற்றும் நூலக வரி என தனித்தனியாக அகசியப்பள்ளி ஊராட்சிக்கு செலுத்தப்பட்டு வந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்டது. தற்போது இரண்டு மாதங்களாக 10, 11 ,மற்றும் 12 வகுப்புகளுக்கு மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் , கிராம ஊராட்சி சார்பில் வரி செலுத்தக் கோரி பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்துள்ளனர். 2019 - 20 ஆண்டில் வரியாக பள்ளி நிர்வாகம் ரூ. 27,500 செலுத்தியதாகவும் தற்போது வரி பலமடங்கு அதிகரித்து ரூ.1, 27. 750 செலுத்த வேண்டும் என்று ஊராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால், கோபமடைந்த ஊராட்சி நிர்வாகம் , திடீரென பள்ளி முன்பு குப்பை வாகனங்களை குப்பை கழிவுகளுடம் வழிமறித்து நிறுத்தியது. மேலும், தூய்மை பணியாளர்களை பள்ளியின் வாசலில் அமர வைத்து போராட்டத்தில் ஈடுபட செய்துள்ளனர். இதனால் , பள்ளிக்கு உள்ளேவும் வெளியேவும் செல்ல முடியாத நிலை மாணாக்கர்களுக்கு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பெற்றோர்களிடம் கட்டணம் வசூல் செய்ய முடியாமல் சிரமப்பட்ட நிலையில், ஊராட்சி நிர்வாகம் எந்த முகாந்திரமும் இல்லாமல் பல மடங்கு வரி உயர்த்தியுள்ளதாக பள்ளி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகள் முறையாக நடைபெறாத நிலையில் வரி கட்ட முடியாத சூழலில் ஊராட்சி நிர்வாகம் இப்படி செய்வது கண்டிக்கத்தக்கது என்று பெற்றோர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments