15 வயது முதல் திமுகவிற்காக உழைத்து தற்போது முதலமைச்சர் வேட்பாளராக மக்களை சந்தித்து வருகிறேன் - மு.க.ஸ்டாலின்
15 வயது முதல் திமுகவிற்காக உழைத்து, எம்எல்ஏ, மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என படிப்படியாக உயர்ந்து, தற்போது முதலமைச்சர் வேட்பாளராக மக்கள் முன் நிற்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்தும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்தும் தக்கலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பத்து ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களுக்கு என்னவெல்லாம் செய்துள்ளது என முதலமைச்சரால் பட்டியலிட முடியுமா? என கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் மக்கள் கொடுமைகளை அனுபவித்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.
அரசியலில் தாம் படிப்படியாக உயர்ந்தவன் என்று குறிப்பிட்ட திமுக தலைவர், முதலமைச்சர் வேட்பாளராக தற்போது தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து வருவதாகத் தெரிவித்தார்.
மீனவர்களை பாதுகாக்க தேசிய மீனவ ஆணையம் அமைக்கப்படும், படகு டீசல் மானியம் 2000 லிட்டராக உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்த மு.க.ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தின் சுயமரியாதை காக்க நடக்கும் தேர்தல் என்பதால், திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
திருநெல்வேலி வாகையடி முக்கு பகுதியில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், அம்பாசமுத்திரம் திமுக வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான இரா.ஆவுடையப்பன், பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோருக்கு ஆதரவாக, மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்தார்.
இராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு, நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்குகோரினார். திமுக ஆட்சிக்கு வந்தால், நீர் நிலைகள் - இயற்கை வளங்களை பாதுகாக்கவும், கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். மேலும், பொது சொத்துக்களை பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.
Comments