தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நிறைவு..! கடைசி நாளில் ஏராளமானோர் மனுத்தாக்கல்
தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி நாளில் ஏராளமானோர் மனுத்தாக்கல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் கீதா என்பவர் எம்ஜிஆர் வேடமிட்ட தனது தந்தையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். எலுவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவருவும் எம்ஜிஆரின் தீவர ரசிகருமான சின்னய்யா அதிமுகவில் சீட் கிடைக்காத விரக்தியில் தனது மகள் கீதாவை சுயேட்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளார்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் இந்து மக்கள் கட்சியின் வேட்பாளர் சப்பானி என்பவர் உறுதி மொழி வாசிக்கத் தெரியாமல் தயங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி செல்வநாயகத்திடம் வாசிக்க தெரியவில்லை எனக் கூறியதையடுத்து, அதிகாரி வாசிக்க அதனை வேட்பாளர் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளர் சமீரா ராசகுமாரன் சுடுகாட்டில் உள்ள சமாதிகளுக்கு மாலை அணிவித்து விட்டு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவற்று மரணமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் அடக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களில் ஆசி பெறவே மாலை அணிவித்து வழிபாடு செய்ததாக கூறினார்.
நாகை சட்டமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் தொண்டர்கள் புடை சூழ தனது வேட்புமனு தாக்கல் செய்தார். கடைசி நாளான நேற்று அவுரித்திடலில் இருந்து மேளதாளம் முழங்க ஏராளமானோருடன் ஊர்வலமாக வந்து தேர்தல் நடத்தும் அலுவலர் மணிவேலனிடம் வேட்புமனுவை அளித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் கதிவரன் பெரும் திரளான கூட்டத்துடன் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக மதுரை பேருந்து நிலையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாகச் சென்றார்.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதி இந்து மக்கள் கட்சி வேட்பாளர் அனுமன் சேனா, வில் அம்புடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஓட்டுக்கு பணம் தரமாட்டோம் விலை மதிப்பற்ற வாக்கை விற்காதீர்கள் என்ற வாசகத்தை அணிந்தவாறு அந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயனிடம் 8ஆயிரம் டெபாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் மலையாண்டி ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாகச் சென்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஸ்ரீ வைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஊர்வலமாகச் சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரேகாவிடம் வேட்புமனுவை கொடுத்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன் குக்கரை தலை மீது வைத்து ஊர்வலாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். ஏராளமான தொண்டர்களுடன் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற அவர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளித்தார்.
Comments