வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு ; நாளை வேட்பு மனு பரிசீலனை

0 2550
வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு ; நாளை வேட்பு மனு பரிசீலனை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் ஆறாம் நாள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் அன்றே நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் நாள் தொடங்கியது. முதல் நாளில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும், சுயேச்சை வேட்பாளர்கள் ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதன் பின் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை என்பதால் வேட்பு மனு தாக்கல் கிடையாது. திங்களன்று ஒரேநாளில் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பெரிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், அவர்களுக்கான மாற்று வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கெனவே மனு தாக்கல் செய்துவிட்டனர்.

தமிழகத்தில் நேற்றுவரை 234 தொகுதிகளுக்கு நாலாயிரத்து 28 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆண்கள் 3350 பேரும், பெண்கள் 677 பேரும், திருநங்கை ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள் எத்தனை என்கிற விவரம் இன்று மாலை தெரியவரும்.

நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். அதில் தகுதியான வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுத் தகுதியில்லாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும்.

மனு தாக்கல் செய்த ஒருவர் போட்டியில் இருந்து விலக நினைத்தால் வேட்பு மனுவை மார்ச் 22ஆம் நாள் வரை திரும்பப் பெறலாம்.

அன்று மாலை ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

பதிவான வாக்குகள் மே இரண்டாம் நாள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும், சரண்ராஜ் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த சரண்ராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலையிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணியில் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சி சார்பில் போட்டியிடும், அகமது வேட்பு மனுதாக்கல் செய்தார்.

நூருல்லாபேட்டையிலிருந்து கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் காய்த்ரி சுப்ரமணியத்திடம் வேட்பு மனுவை வழங்கினார்.

பூந்தமல்லி தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் ரேவதி மணிமேகலை, இன்று வேட்புமனுவினைத் தாக்கல் செய்தார்.

கட்சி நிர்வாகிகளுடன் தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த அவருடன், அலுவகத்திற்குள் செல்ல ஒரு சிலரே அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரீத்தி பார்கவியிடம் தனது வேட்புமனுவினை ரேவதி மணிமேகலை தாக்கல் செய்தார். 

நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ராமலிங்கம், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக நாமக்கல் சேலம் சாலையில் தேர்தல் அலுவலகத்தை திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ் குமார் திறந்து வைத்தார்.

அங்கிருந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகளுடன் கோட்டாட்சியர் அலுவலகம் வந்து அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

மதுரையில் சீட் கிடைக்காத நிலையில், அதிமுக நிர்வாகி "கிரம்மர் சுரேஷ்" சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதி அதிமுகவின் கூட்டணி கட்சியான பசும்பொன் தேசிய கழகத்திற்கு ஒதுக்கப்பட்டு ஜோதி முத்துராமலிங்கம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி "கிரம்மர் சுரேஷ்" என்பவர், தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கூட்டணி கட்சிக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த சுரேஷ், சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

10 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்ததாகவும் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்ததாகவும் கிரம்மர் சுரேஷ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உட்கட்சிப் பூசல் காரணமாக இந்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 2 பேர் தாங்கள்தான் வேட்பாளர் என வேட்புமனுத் தாக்கல் செய்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கணேசன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இன்று காலை ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மதியம் 2.30 மணியளவில் தாம்தான் ஐஜேகேவின் வேட்பாளர் எனக் கூறி மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் என்பவர் வந்து மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால் அவர் கொடுத்த கடிதத்தில் கட்சித் தலைவரின் கையொப்பம், வேட்பாளர் பெயர் என எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் அறிமுக விழா கூட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தும் வாய்ப்பு கிடைக்காத நத்தம் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் ரத்தினகுமாரின் ஆதரவாளர்களுக்கும், வேட்பாளர் ஆண்டி அம்பலத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

திருமண மண்டபத்தில் இருந்த நாற்காலிகள் உள்ளிட்டவையும் பறந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments