காவிரி உரிமைகளை மீட்டது திமுக, அவதூறு செய்தால் நாக்கு அழுகிவிடும்: தஞ்சை பிரச்சாரத்தில் ஸ்டாலின் தாக்கு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு போலி விவசாயி என விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.கஸ்டாலின், காவிரி விவகாரத்தில் கலைஞரை பற்றி அவதூறு பேசினால் நாக்கு அழுகிவிடும் என கூறியுள்ளார்.
ஒரத்தநாட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மட்டுமல்ல, தானே வேட்பாளராக, முதலமைச்சர் வேட்பாளராக வந்திருப்பதாக அவர் கூறினார்.
காவிரி உரிமைகளை மீட்க திமுக மற்றும் கலைஞர் மேற்கொண்ட முயற்சிகளை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின், காவிரிக்கரையில் பிறந்து காவிரி மருத்துவமனையில் உயிர் பிரியும் வரை காவிரிக்காக குரல் கொடுத்தவர் கலைஞர் என குறிப்பிட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும், இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும், நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தி தரப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
வேளாண் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை எடுத்துரைத்த மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கை ஜெராக்ஸ் எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது அதிமுக தேர்தல் அறிக்கை என்றும் விமர்சித்தார்.
Comments