தமிழக சட்டமன்ற தேர்தல்: வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம்!

0 4633
தமிழக சட்டமன்ற தேர்தல்: வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம்!

தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொகுதிகள் தோறும் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் வாக்கு சேகரிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 

மசூதி முன்பு திரண்ட, பாஜக, திமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள்

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் அமமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் இஸ்லாமியர்களிடம் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்கு சேகரித்தனர். அதிமுகவுடான கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வினோஜ் பி செல்வம், திமுக வேட்பாளர் சேகர்பாபு மற்றும் அமமுக சார்பில் களமிறங்கும் சந்தான கிருஷ்ணன் ஆகியோர், மஸ்தான் சாவடியிலுள்ள மசூதி வாயிலில் நின்று வாக்கு சேகரித்தனர் வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகையை முடித்துவந்த இஸ்லாமியர்களிடம்,துண்டு பிரசுரங்களை வழங்கி மூன்று கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

கோவை குனியமுத்தூர் பகுதியில் பொதுமக்கள், நடைபாதை வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டிய திமுக தலைவர் ஸ்டாலின்

கோவை குனியமுத்தூர் பகுதியில், திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். கோவை ஈச்சனாரி அருகே பரப்புரை மேற்கொண்ட அவர், தொடர்ந்து குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு ஆதரவாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பொதுமக்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் ஆதரவு திரட்டினார். அப்போது பலர் ஆர்வமிகுதியில் செல்பி எடுத்தனர்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத் தந்தது அதிமுக அரசு - ஓபிஎஸ்

காவிரி நதி நீர் விவகாரத்தில் அதிமுக அரசு உச்சநீதிமன்றம் சென்று வாதாடி போராடி தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத் தந்தது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை அடுத்த பல்லாவரத்தில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பேசிய அவர்,  திமுக ஆட்சியில் மக்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு செய்யாறு தொகுதியில் அதிமுக-திமுக நேரடிப் போட்டி

திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி மோகனும், திமுக வேட்பாளர் ஜோதியும், ஒரே நேரத்தில், போட்டிப்போட்டு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். இருக்கட்சியினரும், ஒரே பகுதிகளில் மாறி, மாறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், பிரச்சினை எதுவும் ஏற்படாது தடுக்க, இருதரப்பையும் இருவேறு வழிகளில் அனுப்பி வைத்து, காவல்துறையினர், பதற்றச் சூழலை சமாளித்தனர்.

ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் அண்ணன் - அதிமுக சார்பில் தம்பி போட்டி

ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மகாராஜன் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திம்மரசநாயக்கனூர், பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். இத்தொகுதியில் தனது தம்பியும் அதிமுக வேட்பாளருமான லோகிராஜனை எதிர்த்துப் போட்டியிடும் மகாராஜன், பணம் முக்கியம் என்றால் அவருக்கும் பாசம் முக்கியம் என்றால் தனக்கும் ஓட்டு போடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நான் பிறந்த மண்ணிற்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை

தாம் பிறந்த மண்ணிற்கும், ஏழை-எளிய மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே, ஐ.பி.எஸ் பணியை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு வந்திருப்பதாக, அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, தடகோவில், மலைக்கோவிலூர், முத்துகவுண்டன்பாளையம், பெத்தான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், பாஜக வேட்பாளர் அண்ணாமலை தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.

கையேந்தி கேட்பது வாக்கு அல்ல - வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை - சீமான்

தாம் கையேந்தி கேட்பது வாக்கு அல்ல.. வருங்கால தலைமுறை பிள்ளைகளின் வாழ்க்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுப்பையா பாண்டியனுக்கு ஆதரவாக ஆழ்வார் திருநகரியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஒரே ஒரு முறை போட்டு பாருங்க ஓட்ட.. அப்புறம் பாருங்க நாட்ட என்றும் அவர் பேசினார்.

கொளத்தூர் தொகுதியில் வீடு, வீடாக சென்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஓட்டு வேட்டை

சென்னை - கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கெமில்ஸ் செல்வா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கண்ணகி நகரில் இருந்து பிரசாரத்தை துவக்கிய வேட்பாளர், வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கோபிசெட்டிப்பாளையம் திமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து கனிமொழி பிரசாரம்

திமுக ஆட்சிக்கு வந்தால் நகர்புற பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் கிடையாது என்று திமுகவின் மாநில மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் போட்டியிடும் வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து திறந்தவெளி வேனில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்ட அவர் இதனை கூறினார். இந்த தேர்தல் தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான தேர்தல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு பின் பென்னாகரம் தொகுதியிலேயே தங்கி பணியாற்ற உள்ளதாக ஜி.கே.மணி தகவல்

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியிலேயே தங்கியிருந்து பணியாற்ற உள்ளதாக பாமக தலைவர் ஜிகே மணி தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அங்குள்ள தனியார் மண்டபத்தில் கூட்டணி கட்சிகளுடனான செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய போது அவர் இதனை கூறினார். இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக சினிமா நடன இயக்குனர் கலா பிரசாரம்

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக திரைப்பட நடன இயக்குனர் கலா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்ட வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக நடன இயக்குனர் கலா வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். பின்னர், மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுடன் இணைந்து மதிய உணவு அருந்திய வானதி ஸ்ரீனிவாசன், உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டி, 5 வயது சிறுமி நேயா பரிசாக வழங்கிய சிட்டுக்குருவிகளுக்கான சிறிய வீட்டை பெற்று கொண்டார்.

மு.க. ஸ்டாலினை எதிர்த்து களத்தில் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் வீதி, வீதியாக சென்று ஓட்டு வேட்டை

சென்னை - கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கொளத்தூர்
தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆதி ராஜாராம், வீதி, வீதியாக ஆட்டோவில் சென்று, வாக்கு சேகரித்தார்.

ஆதி ராஜாராமுடன் ஆண்களும் பெண்களும் கைகளில் கொடி ஏந்தி, தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.

கம்பம் தொகுதியில் உள்ள மசூதிகளில் குவிந்த அதிமுக, திமுக, மநீம வேட்பாளர்கள் 

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில் உள்ள மசூதிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கம்பம் அதிமுக வேட்பாளர் சையது கான் கம்பம் மெட்டு சாலையில் உள்ள புது பள்ளிவாசல் மற்றும் பெரியபள்ளிவாசலில் தொழுமை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார்.

திமுக வேட்பாளர் கம்பம்.ராமகிருஷ்ணன் மெட்டு சாலையில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் ஆதரவு திரட்டினார்.

இதேபோல் மக்கள் நீதி மையம் வேட்பாளர் வேதா வெங்கடேஷ், அமமுக வேட்பாளர் சுரேஷின் ஆதரவாளர்களும் மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பல்லாவரம் அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பிரச்சாரம்

சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வீதியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நூற்றுக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் வாகனங்களில் பின் தொடர, திறந்தவெளி வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் ராஜலட்சுமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. காரி சாத்தான், பாறைப்பட்டி, சுப்புலாபுரம், சம்சிகபுரம், உள்ளிட்ட கிராமங்களில் அவர் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார்‍. அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், மீண்டும் தனக்கு வாய்ப்பளித்தால் குடிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண உறுதியளித்தும் இரட்டை இலைச் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்

கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பழகனை எவ்வாறு வெற்றிபெற செய்வது.. ஆலோசனை கூட்டம்

கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பழகனை எவ்வாறு வெற்றிபெற செய்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கும்பகோணம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் ,மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிலையில், தேர்தலுக்கு இரு வார காலமே உள்ளதால் அன்பழகன் வெற்றிக்கு எவ்வாறு களப்பணியாற்றுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பட்டாசு வெடித்து அதிமுக வேட்பாளரை வரவேற்ற பொதுமக்கள்

உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அய்யப்பன், அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பெருங்காமநல்லூர், கம்மாளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடுவீடாக சென்றும் பிரச்சார வாகனத்தில் சென்றும் அவர் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தில் ஈடுபட்ட அய்யப்பனுக்கு, பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

100% திட்டங்களை முழுஅளவில் நிறைவேற்ற திமுக வேட்பாளர் வாக்குறுதி

கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின், மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். எம்எல்ஏவாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்ததால், 100 சதவிகிதம் திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும், கன்னியாகுமரிக்கான திட்டங்கள் முழு அளவில் நிறைவேற்றப்படும் என ஆஸ்டின் வாக்குறுதி அளித்தார். 

ஆயிரம் விளக்கு அமமுக வேட்பாளர் வைத்தியநாதன் மசூதியில் வாக்குசேகரிப்பு 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் வைத்தியநாதன் மசூதியில் வாக்கு சேகரித்தார்‍. சென்னை ராயப்பேட்டை  புது கல்லூரி வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை முடிந்து வந்தவர்களிடம், துண்டுபிரசுரம் விநியோகித்து குக்கர் சின்னத்திற்கு அவர் ஆதரவு கோரினார்.

தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் வேட்பாளர் கருணாநிதி வாக்கு சேகரிப்பு

சென்னை தியாகராயர் நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருணாநிதி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அசோக் நகரிலுள்ள பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் தொப்பி அணிந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். 

 

திருவாடானையில் அதிமுக வேட்பாளர் கே.சி. ஆணிமுத்து வாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆணிமுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட நம்புதாளை, காரங்காடு, முள்ளிமுனை, முகிழ்த்தகம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதுடன், சமுதாய தலைவர்களை தனியாக சந்தித்து ஆதரவு திரட்டினார்.

துண்டு பிரசுரங்களை வழங்கி உதயநிதிக்காக வாக்குசேகரித்த கூட்டணியினர்

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக, அக்கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். சிந்தாதிரிபேட்டை பகுதியில் மசூதியில் தொழுகை முடிந்து வந்தவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, உதயநிதிக்கு ஆதரவு திரட்டினர். காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்று  உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக வாக்குச்சேகரித்தனர். 

குடியரசுத்தலைவரிடமிருந்து விருது பெற்ற எனக்கு வாய்ப்பு வழங்குங்கள்- கஜேந்திரன்

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்,கூட்டணிக் கட்சியினரிடத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்‍. மறைமலை நகரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக சிறப்பாக செயல்பட்டதால் குடியரசுத்தலைவரிடமிருந்து விருது பெற்ற தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கூறி அவர் ஆதரவு திரட்டினார்‍. இத்தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதாக அவர் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

பரம்பரையாக மக்களுக்கு தொண்டு செய்யவே வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம், தாத்தா, தந்தை வழியில், பரம்பரையாக மக்களுக்கு தொண்டு செய்யவே வந்துள்ளதாக கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாகலூர், தின்னப்பட்டி, டேனிஸ்பேட்டை மற்றும் கணவாய்புதூர் ஊராட்சிக்கு வாக்குச்சேரிக்க சென்ற வேட்பாளருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, அங்குள்ள மாரியம்மன், காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து, திமுக தேர்தல் திட்டங்களை கூறி தனது தொண்டர்களுடன் ஆதரவு திரட்டினார்.

சமயபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பரஞ்ஜோதி, சமயபுரம் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சமயபுரம் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள இந்திரா காலணி, வ.உ.சி. நகர், சன்னதி வீதி, தேரோடும் வீதி, கடை வீதி, நெசவாளர் காலனி, மகாளிகுடி உள்ளிட்ட பகுதிகளில், வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


சட்டைகளுக்கு இஸ்திரி போட்டு, கடை உரிமையாளரிடம் வி.ஜி ராஜேந்திரன் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி ராஜேந்திரன் பஜார் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் சென்று அங்கிருந்த சட்டைகளுக்கு இஸ்திரி போட்டு, கடை உரிமையாளரிடம் வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மசூதிகளில் தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு துண்டுபிரசுரங்கள் கொடுத்தும் சால்வையணிவித்து வாக்கு சேகரித்தார்.பிரச்சாரத்தின் போது அப்பகுதியில் உள்ள பெண்கள் வேட்பாளருக்கு மலர்தூவி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேளதாளங்களுடன் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி பிரச்சாரம்

கடையநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமுரளி மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக புளியரைப் பகுதியிலுள்ள தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், திறந்தவெளி வாகனத்தில் அவர் வாக்கு சேகரிக்கத் துவங்கினார். இதனையடுத்து தெற்குமேடு, பகவதிபுரம், கோட்டைவாசல், பூலாங்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணமுரளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் திமுக சார்பில் போட்டியிடும் எ.வ.வேலு, மண்டி தெருவில் உள்ள பெரிய மஸ்ஜித்தில் தொழுகை முடிந்துவந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு திரட்டினார். திருவண்ணாமலை தொகுதியில் மூன்றாவது முறையாக களமிறங்கும் எ.வ.வேலு, இஸ்லாமியர்களுக்கு கைக்குலுக்கி, திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்..

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு என அனைத்திலும் தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டுவர பாடுபடுவோம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.  தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர படிப்படியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என கூறினார். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு நாளுக்கு நாள் வெற்றி வாய்ப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். 

திமுக வேட்பாளர் வசந்தம்.க.கார்த்திகேயன் தீவிர வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வசந்தம். க. கார்த்திகேயன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மணலூர்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் சித்தபட்டினம், முருக்கம்பாடி, வடக்குதாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்று அவர் வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து, மணலூர்பேட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள டீக்கடையில் தொண்டர்களுடன் டீக்குடித்தார்.

பெரம்பூர் அதிமுக கூட்டணி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் பிரச்சாரம்

பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் களமிறங்கியுள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர் என்.ஆர். தனபாலன் கொடுங்கையூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.  திறந்தவெளி வாகனத்தில் வீதிவீதியாக சென்று  பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக கூறி வாக்கு திரட்டினார். 

பவானி தொகுதியில் திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் தேர்தல் பிரச்சாரம்

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கே.பி.துரைராஜ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட நெருஞ்சிப்பேட்டை பகுதியில் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அங்கு முகக்கவசம் அணியாமல் நின்றுகொண்டிருந்தவர்களிடம் முகக்கவசம் அணியுங்கள் அல்லது தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார். 

முதலமைச்சருக்கு ஆதரவாக அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கொங்கணாபுரத்தில்  வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் அம்மன் கோயில்களில் அதிமுகவினர் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, வெள்ளாளபுரம், சின்னப்பம்பட்டி, பாச்சாலியூர், முனியம்பட்டி, அக்கரைப்பட்டி பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி முதலமைச்சருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.  

முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட 16-ஆவது வார்டு பகுதியில் ஆதரவாளர்களுடன் சென்ற திமுக வேட்பாளர் சம்பத்குமார் வீடு வீடாக சென்று திமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த த.மா.கா வேட்பாளர் யுவராஜா

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யுவராஜா தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். வீரப்பன்சத்திரம், சக்திரோடு உள்ளிட்ட பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கிய வேட்பாளர், அதிமுகவின் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார். அப்போது, கூட்டணி கட்சியினர் மற்றும் தொண்டர்கள் யுவராஜாவுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

வாகனங்களில் சென்றவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம்

தாம்பரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சிவ இளங்கோ அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தாம்பரத்தை அடுத்த சண்முகம் சாலையில் கட்சி ஆதரவாளர்களுடன் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பகுதிகளில் வாகனங்களில் சென்றவர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி சிவ இளங்கோ வாக்கு சேகரித்தார். 

பாலக்கோடு திமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முருகனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காரிமங்கலம் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்பகுதியில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களை அவர் பட்டியலிட்டார். 

எழும்பூர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் பிரச்சாரம்

எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் களமிறங்கியுள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் புளியந்தோப்பு, பட்டாளம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். புளியந்தோப்பு சிவராவ் சாலையில் மேளதாளம் முழங்க நடந்து சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த ஜான் பாண்டியனுக்கு அப்பகுதி மக்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக வாக்குறுதிகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீரனூர், வேளானந்தல், செல்லங்குப்பம், கோணலூர், பொலக்குணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு திறந்த வேனில் சென்ற திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி திமுகவின் வாக்குறுதிகளை எடுத்துக்கூறியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் வாக்கு சேகரித்தார்.  

குழந்தைகளை தூக்கி கொஞ்சி மக்களின் கவனத்தை ஈர்த்த பெஞ்சமின்

சென்னை மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின் குழந்தைகளை தூக்கி கொஞ்சி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நொளம்பூர், அடையாளம்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற அமைச்சர் பெஞ்சமின் வீடு வீடாக சென்று இரட்டை இலைக்கு ஆதரவு திரட்டினார். அவருக்கு அப்பகுதி மக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது குழந்தைக்கு பெயர் சூட்டிய திமுக வேட்பாளர்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன், சமயபுரம், டோல்கேட் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் பூரண கும்ப மரியாதை செலுத்தினர். பிரச்சாரத்தின்போது தனது 8 மாத குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமென பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதையடுத்து, அக்குழந்தைக்கு தனது மகளின் பெயரான நிவானி என பெயர் சூட்டினார். 

ஆட்சிக்கு வந்தால் தரமான கல்வி, மருத்துவம் இலவசம் - சீமான்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் முதுகுளத்தூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரஹ்மத் நிஷாவை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு கட்சியின் கொள்கைகளை எடுத்துரைத்த சீமான், ஆட்சிக்கு வரும்பட்சத்தில் விவசாயத்தை அரசுப் பணியாக்கி, தரமான கல்வியையும் தரமான மருத்துவத்தையும் இலவசமாக அளிப்போம் என வாக்குறுதி அளித்தார்.

முதியோர் காலில் விழுந்தும், குழந்தையை கொஞ்சியும் வாக்கு சேகரிப்பு

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரபாகர ராஜா, துண்டு பிரசுரங்கள் வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நெசபாக்கம் பகுதியில் கடைகள், குடியிருப்பு பகுதிகளில் மூத்த குடிமக்கள் காலில் விழுந்தும், குழந்தையை கொஞ்சி விளையாடியும் பிரபாகர் ராஜா வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்திற்கு இடையே அங்குள்ள கோயில்களில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். 

சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி வாக்கு சேகரிப்பு

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சைதை துரைசாமி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோட்டூர்புரம் பகுதியில் பொன்னியம்மன் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. 

வாக்குறுதி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்ற தொண்டர்கள் 

விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.லட்சுமணன், தான் செய்த திட்டங்களை கூறி திறந்த வெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காகுப்பம் பகுதியில், பிரசார வாகனத்தில் இருந்தபடி வாக்கு சேரிகரித்த திமுக வேட்பாளர், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் தொகுதியின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து ஆதரவு திரட்டினார். அவருடன் சென்ற தொண்டர்கள், கட்சி கொடிகளையும், தேர்தல் வாக்குறுதி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி, சென்றனர்.

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் வேடமணிந்தவர் பிரச்சாரம் 

சென்னை அடுத்த மாதவரத்தில் அதிமுக வேட்பாளர் மாதவரம் மூர்த்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காவாங்கரை கண்ணப்ப சாமி தெருவில் உள்ள அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பை தொடங்கினார். அப்போது அவருடன் எம்.ஜி.ஆர் வேடமணிந்த ஒருவர் திறந்த வேனில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திண்டுக்கல்லில் திமுக கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பாண்டி

திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் பாண்டி அப்பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராம்நகர், அனுமந்த நகர், மரியநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இப்பிரச்சாரத்தின் போது பெண்கள் ஒன்றுகூடி பறையடித்துத் தப்பாட்ட நடனம் ஆடினர்.

வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். குமாரபாளையம் தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் தங்கமணி, காவேரி நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவு திரட்டினார். அவருடன் அதிமுக நிர்வாகிகளும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர். 

திமுக வேட்பாளர் கே.என்.நேரு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். திருச்சி லிங்கா நகர், கல்பாளையம், உறையூர் பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து பொது மக்கள் வரவேற்றனர்.

வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதிவீதியாக சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். போக்குவரத்துத் துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் போட்டியிடவுள்ள நிலையில், சின்ன கோதூர், பெரிய கோதூர், அரிக்காரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தங்கள் பகுதிகளில் வாக்கு சேகரித்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பட்டாசுகள் வெடித்தும் பொன்னாடை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர்.

வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் அமமுக வேட்பாளர்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் களமிறங்கும்  வேட்பாளர் ராமுத்தேவர் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். தொகுதிக்குட்பட்ட சிமெண்ட்ரோடு, கிழக்கு ஆரோக்ய மாதா தெரு, செளராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக, எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி ராமுத்தேவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு அப்பகுதியை சேர்ந்தோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார் மா.சுப்பிரமணியம்

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எல்லை அம்மன் கோயில் தெரு தலையாரி தெரு கோவிந்தன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. சுப்பிரமணியனுக்கும், பெண்கள் ஆரத்தி எடுத்தும், துண்டு போர்த்தியும் வரவேற்பளித்தனர். 

அதிமுக வேட்பாளர் கே.குப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர் கே.குப்பன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மேளதாளங்கள் முழங்க கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கணக்கர் தெரு, ஸ்டேட் பாங்க் காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வேனில் சென்று அவர் வாக்கு சேகரித்தார்.

வடை சுட்டுக்கொண்டிருந்த பாட்டியை நலம் விசாரித்து வடை சாப்பிட்ட வேட்பாளர்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன், அதிகாலை முதலே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். நுங்கம்பாக்கம், நம் நமச்சிவாயபுரம், கோடம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்ற மருத்துவர் எழிலன், சட்டமன்ற தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கைக்கூப்பி கேட்டுக்கொண்டார். வாக்கு கேட்டுவந்த மருத்துவர் எழிலனிடம், பெண் ஒருவர் குடிநீர் மற்றும் கால்வாய் பிரச்னை இருப்பதாக மனு கொடுத்தார். சாலையோரம் வடை சுட்டுக்கொண்டிருந்த பாட்டியை நலம் விசாரித்த எழிலன், வடையை சாப்பிட்டுவிட்டு உதயசூரியனுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு வாக்குச் சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்குச் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் குஷ்பு பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரித்தார். ஆயிரம்விளக்குத் தொகுதிக்கு உட்பட்ட தியாகராய நகர் தணிகாசலம் சாலை, வெங்கட்நாராயண சாலை, போக் சாலை, தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் குஷ்பு பிரச்சாரம் செய்தார். தாமரைச் சின்னத்தில் தனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

திறந்தவெளி ஆட்டோவில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

சென்னை ராயபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஐ.டிரீம் மூர்த்தி திறந்த வெளி ஆட்டோவில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் பெண்கள் உள்பட ஏராளமான திமுக தொண்டர்களுன் கட்சி கொடியுடன் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தனர்.

வீடு வீடாகச் சென்று முதியவர்களின் ஆசி பெற்று வாக்கு சேகரிப்பு 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா, வீடு வீடாகச் சென்று முதியவர்களின் காலில் விழுந்து வாக்கு சேகரித்தார். காந்திநகரில் உள்ள மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கிய பரிதா, அங்குள்ள ஊதுவர்த்தி தயாரிப்பு நிறுவனத்திற்குச் சென்று பணியாளர்களிடமும் வாக்கு சேகரித்தார். பரிதாவை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பறை இசைக் கலைஞர்களின் இசைக்கு ஏற்ப மூதாட்டி ஒருவர், தன்னை மறந்து நடனாமாடினார்.

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்த திமுக வேட்பாளர் ராஜேஷ்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களை, அத்தொகுதி திமுக வேட்பாளர் ராஜேஷ், தனது சொந்த காரில் ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். கொங்கணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் ஒரே பைக்கில் சென்றபோது லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேர் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சங்ககிரி திமுக வேட்பாளர் ராஜேஷ் அடிபட்டவர்களில் 2 பேரை சொந்த காரிலேயே ஏற்றி வந்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் 

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான பாஸ்கர், இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். பொட்டனம் பகுதிக்குச் சென்ற பாஸ்கர், வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.

குக்கர் சின்னம் பதாகைகளை கையில் ஏந்தி ஆதரவு திரட்டிய தொண்டர்கள்

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் முனுசாமி திறந்த வெளி வாகனத்தில் வீதி வீதியாக தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு தொடங்கிய இப்பிரச்சாரத்தில் தொண்டர்கள் குக்கர் சின்னம் பதிந்த பதாகைகளை கையில் ஏந்தி சென்று ஆதரவு திரட்டினர். ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் டி. குப்புராமு, திமுக சார்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் களம் காண்கின்றனர்.

கோயிலில் சுவாமி  தரிசனம் செய்து பிரச்சாரம் செய்த அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்டம் தொண்டாமுத்துர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோயிலில் சுவாமி தரிசனம் செய்து பிரச்சாரத்தை துவங்கினார். கரடிமடை பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு, செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
தொடர்ந்து தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் சென்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாக்கு சேகரித்தார்.

சேலம் வடக்கு திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டும் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த ராஜேந்திரன், தொகுதிக்குட்பட்ட என் .ஜி. ஓ .காலனி, சின்னகொல்லப்பட்டி, பெரியார் நகர், பெரியகொல்லப்பட்டி, கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளங்கள் முழங்க திறந்த வேனில் சென்று மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

பேருந்தில் ஏறி, பயணிகளிடம் வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான சோமசுந்தரம், வாலாஜாபாத் பகுதிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் வாக்கு சேகரித்தார். தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் இருக்கும் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று வாக்குகளை திரட்டிய அவர் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த பேருந்தில் ஏறி, பயணிகளிடம் அதிமுகவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். மேலும் தெருவோர நடை வியாபாரிகளிடம், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிரந்தர கடை அமைத்து தரப்படும் எனவும் சோமசுந்தரம் உறுதியளித்தார். 

தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிடும் கீதாஜீவன் தீவிர பிரச்சாரம்

தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கீதாஜீவன், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். இரு சக்கர வாகனங்களில் கூட்டணி கட்சியினர் புடைசூழ திறந்தவெளி வாகனத்தில் குறிஞ்சி நகர், ஐயப்பன் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கீதாஜீவன் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின்போது பேசிய கீதாஜீவன், தூத்துக்குடி நகர பகுதிகளில் மழை காலங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார்.

சைக்கிள் ரிக் ஷாவில் அமர்ந்து வாக்கு சேகரித்த அமைச்சர்

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரத்தின் போது இஸ்லாமிய பாடல் ஒன்றுக்கு தாளம் தட்டி அசத்தினார். ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதசைக்கிள் ரிக் ஷாவில் அமர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமாருக்கு, வழிநெடுகிலும் பெண்கள், குழந்தைகள் மலர் தூவி நடனமாடி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்த நபர் ஒருவர் இஸாமிய பாடலை பாடவே, அதற்கேற்ப தாளம் தட்டி அமைச்சர் ஜெயக்குமார் அனைவரையும் உற்சாகபடுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளர்

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மா.ஜெயபால் கோரிப்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோரிப்பாளையம், ஜம்புராபுரம் ஆகிய பகுதிகளுக்கு நடந்து சென்ற வேட்பாளர் மற்றும் தொண்டர்கள் குக்கரை கையில் ஏந்தி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டினர். அப்போது வழி நெடுகிலும் தொண்டர்கள் வேட்பாளர் ஜெயபாலுக்கு சால்வை அணிவித்து, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேல் சட்டை அணியாமல் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல்

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர், கையில் கன்று குட்டி - ஆடு, கழுத்தில் ஸ்பேனர், கரண்டியுடன் ஊர்வலமாக வந்து, நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சீர்மரபினர் நல சங்கம் சார்பில் இத்தொகுதியில் தாவீது ராஜா என்பவர் போட்டியிடுகிறார். ஆதரவாளர்கள் புடை சூழ, மேல் சட்டை அணியாமல் சுயேட்சை வேட்பாளர், வீதியில் ஊர்வலமாக வந்தார். பின்னர், உத்தமபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாவீது ராஜா, தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

ஏம்பலத்தில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமிகாந்தன்

புதுச்சேரியில் ஏம்பலம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் லட்சுமிகாந்தன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இத்தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அவர், பனித்திட்டு கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த லட்சுமி காந்தனுக்கு, அப்பகுதி மக்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

நத்தத்தில் களமிறங்கும் ஐஜேகே வேட்பாளர் சரண்ராஜ் வேட்பு மனுதாக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும், சரண்ராஜ் வேட்பு மனுதாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த சரண்ராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலையிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.

ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளர் அகமது வேட்பு மனுதாக்கல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியில் அமமுக கூட்டணியில் ஏஐஎம்ஐஎம்(AIMIM) கட்சி சார்பில் போட்டியிடும், அகமது வேட்பு மனுதாக்கல் செய்தார். நூருல்லாபேட்டையிலிருந்து கூட்டணி கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் காய்த்ரி சுப்ரமணியத்திடம் வேட்பு மனுவை வழங்கினார். 

பூந்தமல்லியில் மநீம சார்பில் போட்டியிடும் ரேவதி மணிமேகலை

பூந்தமல்லி தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் ரேவதி மணிமேகலை, இன்று வேட்புமனுவினைத் தாக்கல் செய்தார். கட்சி நிர்வாகிகளுடன் தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த அவருடன், அலுவகத்திற்குள் செல்ல ஒரு சிலரே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரீத்தி பார்கவியிடம் தனது வேட்புமனுவினை ரேவதி மணிமேகலை தாக்கல் செய்தார்.

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், கவுண்டச்சி பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். வள்ளிபுரத்தான் பாளையம்,வேப்பம் பாளையம், புதுவலசு, கல்லியங்காட்டு வலசு, கரட்டுப்பாளையம், ஓலப்பாளையம் உள்ளிட்ட  பகுதிகளில்  வீதி வீதியாக சென்று அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம் பரப்புரை மேற்கொண்டார்.

போளூர் திமுக வேட்பாளர் பெண்களுக்கான கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் திமுக சார்பாக மீண்டும் போட்டியிடும் கே.வி.சேகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍.இந்திரவனம், அப்பேடு, உலகம்பட்டு, கொத்தந்தவாடி, உள்ளிட்ட கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு அவர் ஆதரவு திரட்டினார்‍. சேத்துப்பட்டை நகராட்சியாக்கவும், பெண்களுக்கென அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதிமொழி அளித்து மக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்‍.

மாதவரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எஸ்.சுதர்சனத்தை கேக் வெட்டியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்

சென்னை மாதவரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ்.சுதர்சனம் மாத்தூர், மஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது கேக் வெட்டியும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

இஸ்லாமியர்களிடம் மாம்பழத்தை கொடுத்து ஆதரவு திரட்டிய பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளர்

பூந்தமல்லி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜமன்னார், துண்டு பிரசுரம் இல்லாததால் இஸ்லாமியர்களிடம் மாம்பழத்தை கொடுத்து வாக்கு சேகரித்தார். பூந்தமல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மசூதிகளில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இஸ்லாமியர்களிடம், தனது சின்னமான மாம்பழத்தை கொடுத்து ஆதரவு திரட்டினார்.

திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று அமைச்சர் சிவி.சண்முகம் தேர்தல் பிரச்சாரம்

விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சிவி.சண்முகம், திறந்தவெளி வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். விழுப்புரம்  தொகுதிக்கு உட்பட்ட ஊர்களில் ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரித்தார்.

துறையூர் தொகுதி திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஸ்டாலின் குமார் தீவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துறையூர் அருகே உள்ள சித்தரப்பட்டியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்ற அவர், இஸ்லாமிய மக்களிடம் ஆதரவு திரட்டியதுடன், அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை மீண்டும் திமுக கோட்டையாகும் - எம்.எல்.ஏ சேகர்பாபு

சென்னை மீண்டும் திமுக கோட்டையாகும் என எழும்பூர் தேர்தல் பணிமனையை திறந்த வைத்த எம்.எல்.ஏ சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளையில் எழும்பூர் தொகுதிக்கான தேர்தல் பணிமனையை திமுக மாவட்ட செயலாளரும் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா காலத்தில் முதலில் களத்திற்கு வந்தவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான் எனவும் தெரிவித்தார்.

வேளச்சேரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீர்த்தனா வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்

சென்னை வேளச்சேரியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கீர்த்தனா வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. இந்திராநகரில் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த அவர், மாற்று அரசியலுக்கு வித்திட, விவசாயத்திட்டங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும் என கூறி ஆதரவு திரட்டினார்.

பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களிடையே கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி வாக்கு சேகரிப்பு 

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். கெங்கவல்லி பேரூராட்சிக்குட்பட்ட பள்ளிவாசல் பகுதியில் தொழுகையின்போது இஸ்லாமிய மக்களிடையே திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பள்ளிவாசல் பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவுவதால் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

பரமக்குடி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும், குலவையிட்டும் சிறப்பான வரவேற்பு 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட நைனார் கோவில் ஒன்றியத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த சதன் பிரபாகருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும், குலவையிட்டும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

செய்யூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வி.சி.க. வேட்பாளர் பனையூர் பாபு அறிமுக கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தனி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பனையூர் பாபு அறிமுக கூட்டம் நடைபெற்றது. செய்யூர் தொகுதிக்குட்பட்ட சூனாம்பேட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்று பனையூர் பாபுவுக்கு சால்வை அணிவித்தனர்.

ஓட்டலில் உணவு பரிமாறி ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். அன்பழகன் வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ். அன்பழகன், ஓட்டலில் உணவு பரிமாறி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குண்ணத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கிய அவர், புதுபாளையத்தில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வாக்கு சேகரித்ததுடன், தானும் உணவு உண்டார். தொடர்ந்து, கண்ணமங்கலம் மசூதியில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களுக்கு சால்வை அணிவித்து, ஆதரவு திரட்டினார்.

234 தொகுதிகளிலும் அயராது தேர்தல் பணியாற்ற திமுகவினருக்கு ஐ.பெரியசாமி அழைப்பு

234 தொகுதிகளிலும், கலைஞரும், மு.க.ஸ்டாலினும் போட்டியிடுவதாக நினைத்து, திமுக தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்ற வேண்டும் என, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கேட்டுக்கொண்டுள்ளார். பழனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாருக்கான தேர்தல் பணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் இதனை கூறினார். கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திறந்தவெளி ஆட்டோவில் நின்றவாறு மநீம வேட்பாளர் சினேகா மோகன் தாஸ் வாக்கு சேகரிப்பு

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சினேகா மோகன் தாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொகுதிக்குட்பட்ட ஜோன்ஸ் சாலையில்  பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி ஆட்டோவில் நின்றவாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பணம் வாங்கிவிட்டு வாக்களித்தால் மாற்றத்தை கொண்டு வர முடியாது எனவும், சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். 

வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தருண் பிரச்சாரம் 

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தருண், கொண்டலாம்பட்டியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொண்டார். சந்தைப்பேட்டை மற்றும் அதையொட்டிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று கைத்தறி தொழிலாளர்களை சந்தித்து தனக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். கைத்தறி தொழில் மேலும் சிறக்க உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றும், வீரபாண்டி தொகுதியில் ஜவுளிப் பூங்கா அமைத்து தரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

அரக்கோணத்தில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்குச் சேகரிப்பு

அரக்கோணத்தில் மீண்டும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரவி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்‍. தணிகைபோளூர், வாணியம்பேட்டை, பாலகிருஷ்ணாபுரம், கிருஷ்ணாபுரம்  உள்ளிட்ட பகுதிகளில்  வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்,வாகனத்தில் சென்றும் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். மீண்டும் வாய்ப்பு வழங்கினால் இத்தொகுதியில் ரிங் ரோடு பணிகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்து வாக்கு சேகரித்தார்‍.

ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு தீவிர வாக்குச்சேகரிப்பு

சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும், நடிகை குஷ்பு, வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். தேனாம்பேட்டை பகுதியில் உள்ள திரு.வி.க குடியிருப்பு, நக்கீரன் நகர், எம்.கே.ராதா நகர், கிரியப்பா சாலை, எம்ஜிஆர் சிலை உள்ளிட்ட பகுதிகளில், வாகனத்தில் சென்றும், குறுகலான பகுதிகளில் நடந்து சென்றும், குஷ்பு வாக்குச்சேகரித்தார்.

ஆத்தூர்: பாமக வேட்பாளர் திலகபாமா வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா, வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்‍.
சின்னாளபட்டியின் பல்வேறு இடங்களில் வாகனத்தில் அவர் பரப்புரை மேற்கொண்டார்‍. பிரச்சார வாகனத்திற்கு உரிய வாகன அனுமதி பெறவில்லை எனக்கூறி அவரது வாகனத்தை பறிமுதல் செய்த தேர்தல் அதிகாரிகள், அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அனுமதியின்றி பிரச்சாரம் செய்தததாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தலில் அதிமுகவிற்கு மனித உரிமை காக்கும் கட்சி ஆதரவு - நடிகர் கார்த்திக்

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் முக்குலத்தோரை சேர்க்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும் தலைவருமான நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார். சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவிற்கு தங்கள் கட்சி ஆதரவளிப்பதாக கூறிய அவர், இரு தினங்களில் வெளியாகும் தங்களது தேர்தல் அறிக்கையை கூட்டணி கட்சி என்ற முறையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் கூறினார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளர் கசாலி தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கசாலி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிந்தாதரிப்பேட்டை பகுதி முழுவதும் உள்ள வீதிகளில் திறந்த வெளி வாகனத்தில் மக்களை பார்த்து கையசைத்தபடி வாக்குகளை சேகரித்தார்.

திமுக வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பென்னாகரம் பேருந்து நிலையம் முன்பு, பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் கொண்டு வரக்கூடிய மக்களுக்கான திட்டங்களையும், கலைஞர் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையம் எடுத்துக்கூறி, திமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூர் தொகுதியில் வி.ஜி.ராஜேந்திரனுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனுக்கு ஆதரவாக அந்த கட்சியின் நிர்வாகிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை சந்தையையொட்டி பேரம்பாக்கத்தில்  கடை விரித்திருந்த வியாபாரிகளிடம் துண்டுபிரசுரங்களை விநியோகித்து, உதயசூரியன் சின்னத்திற்கு அவர்கள் ஆதரவு திரட்டினர்‍. சந்தைக்கு வந்திருந்த பொதுமக்களிடம்,வி.ஜி.ராஜேந்திரன் செய்த நலத்திட்டங்களை சொல்லி அவர்கள் வாக்கு சேகரித்தனர்.

விசைத்தறி தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து அமைச்சர் தங்கமணி தேர்தல் பிரச்சாரம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் தங்கமணி, விசைத்தறி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் அதிமுக தேர்தல் அறிக்கையை எடுத்துகூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தார். இலவசமாக வாசிங்மிஷன் வழங்கப்படும்,வீடு இல்லாதவர்களுக்கு வீடு உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பு திட்டங்களை எடுத்துக் கூறினார்.

விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜி.பாண்டுரங்கன் வீடு வீடாக சென்றும்,வாகனத்தில் சென்றும் தீவிர வாக்குசேகரிப்பு

விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் ஜி. பாண்டுரங்கன்இன்று பிரச்சாரத்தை தொடங்கினார்.
வீடு வீடாக சென்றும்,வாகனத்தில் சென்றும் அவர் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அதிமுக-பாஜக கட்சிகளின்சாதனைகளை கூறி, அவர் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍.

அரசு பேருந்துகளுக்கு இனி பெண்கள் தான் முதலாளி - திமுக வேட்பாளர் ரகுபதி

திமுக ஆட்சி அமைந்த உடன், அரசு பேருந்துகளுக்கு பெண்கள் தான் முதலாளி என்றும், நகர பேருந்துகளில் காசின்றி, இலவசமாக அவர்கள் பயணிக்கும் நாள் நெருங்கி வந்துவிட்டது என்றும், திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரான ரகுபதி தெரிவித்துள்ளார். இறுதிநாளில் வேட்புமனுத்தாக்கல் செய்த அவர், கோவில்பட்டி ஆதனூர்  உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். 

பள்ளிவாசல் மற்றும்  தேவாலயங்களுக்கு சென்று எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் சம்பத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சம்பத்குமார், பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எடப்பாடியில் உள்ள பள்ளிவாசலில் இஸ்லாமிய மக்களை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், தொடர்ந்து, வெள்ளாண்டி வலசு பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு சென்று கிறிஸ்துவ மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன் தீவிர வாக்கு சேகரிப்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளர் ஆவுடையப்பன், வெள்ளங்குழி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெள்ளங்குழி கிராமப்பகுதி முழுவதும் வீதி வீதியாக திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

பொன்னேரி தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரித் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன் கிராமம் கிராமமாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்‍. சேகண்ணியம், தேவம்பட்டு,கள்ளூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று அவர் பரப்புரைமேற்கொண்டார்‍. துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் ,பொதுமக்களின் காலில் விழுந்தும் அவர் இரட்டை இலைச் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்‍.

புளியந்தோப்பு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சியான தமமுக தலைவர் ஜான் பாண்டியன் பிரசாரம்

சென்னை எழும்பூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் வாக்கு சேகரித்தார். புளியந்தோப்பு பகுதிக்குட்பட்ட கே.பி.பூங்கா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சனை, பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுவதாக உறுதி அளித்தார்.

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments