திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து - மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தால் சிறப்பு தாய்சேய் நலத்திட்டம் என்ற பெயரில், கருவுற்ற பெண்களுக்கு வீடுதேடி மருத்துவ வசதி செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், செய்ய முடியாத, பொத்தாம் பொதுவான பல உறுதி மொழிகளை அதிமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளதாக சாடினார்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் சிறப்பு தாய் - சேய் நலத்திட்டம் என்ற பெயரில் கருவுற்ற பெண்களுக்கு வீடுதேடி மருத்துவ வசதி செய்யப்படும் என்றார். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினர் வாங்கியிருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஸ்டாலின் ஆதரவு திரட்டினார். அப்போது, திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்பட்டு, அரசுப் பணியில் 3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.
Comments