தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவு... மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்கள்

0 2905

தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், வேட்பாளர்கள் நேற்று அதிகளவில் மனுத்தாக்கல் செய்தனர்.

தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஜஜேகே வேட்பாளர் அருணாதேவி வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சியினருடன் சைக்கிளில் ஊர்வலமாக வந்த அவர், ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ நாயகத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கைகளில் கரும்புகளை ஏந்தி, காமரஜர் சிலைக்கு மாலை அணிவித்து வாகனப் பேரணியாக வந்த திருச்செந்தூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் குளோரியான், கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சாலையில் நடனம் ஆடியபடி கட்சி தொண்டர்களுடன் காரில் ஊர்வலமாக வந்த புதிய மக்கள் தமிழ்தேசம் கட்சியின் வேட்பாளர் மகராஜன், தனது வேட்பு மனுவை தாக்க செய்தார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி வேட்புமனு தாக்கல் செய்தார்.  திமுக கூட்டணி கட்சி தொண்டர்களுடன் பேரணியாக அவர் வந்தார். பின்னர் முன்னாள் பெண் எம்.எல்.ஏக்களுடன் சென்று விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

திருவாரூர், மன்னார்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அரவிந்தன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கட்சி தொண்டர்கள் புடை சூழ, மாட்டு வண்டி, மேள தாள முழக்கங்களுடன் பேரணியாக சென்ற அவர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அழகர்சாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கடலூர், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் விடுதலை கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிந்தனைச் செல்வன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் சென்ற அவர், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி லூய்தசாமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திண்டுக்கல், நிலக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மக்கள் விடுதலை கட்சி வேட்பாளர் முருகவேல் ராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்ற அவர், நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேனி, ஆண்டிப்பட்டி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் நீதிபதி வித்தியாசமான முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தலையில் பூசணிக்காய், கழுத்தில் காய்காறி மாலையுடன் ஊர்வலமாக வந்த அவர், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியத்திடம் தனது வேட்பு மனுவை அளித்தார். தலையில் சுமந்த பூசணிக்காயில் முருகன் துணை சி. நீதிபதி என எழுதியிருந்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்த ஜோதி மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். தலைவர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின் பறை இசையுடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை அளித்தார். 

திருவள்ளூர், பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார். மயிலாட்டம், சிலம்பாட்டம், தாரை தப்பட்டைகளுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த அவர், வருவாய் கோட்ட அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருவண்ணாமலை, செய்யாறு தொகுதியில் அமமுக வேட்பாளர் ம.கி.வரதராஜன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆயிரக்கணக்கான கூட்டணி கட்சி தொண்டர்கள் புடை சூழ மேள தாளத்துடன் நகரின் முக்கிய சாலை வழியாக பேரணி வந்த அவர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராஜிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

திருச்சி மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய தொகுதி திமுக வேட்பாளர்கள் திரளான தொண்டர்களுடன்  ஊர்வலமாகச் சென்று வேட்புமனு அளித்தனர். மண்ணச்சநல்லூர் காந்தி சிலையிலிருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த திமுக வேட்பாளர் கதிரவன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் முசிறி திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் திரளான தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனு கொடுத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாண்டியனுக்கு ஆதரவு அளிப்பதாக கடலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர். தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட 700-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒரு மனதாக அதிமுக வேட்பாளர் பாண்டியனை ஆதரிப்பதாக தெரிவித்தனர். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் சுயேச்சை வேட்பாளர் செல்லுப்பாண்டி என்பவர் கை மற்றும் கழுத்தில் தாலியுடன் நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார். மது குடித்தால் உயிரிழப்பு ஏற்பட்டு தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செய்ததாக வேட்பாளர் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் நேற்று ஒரே நாளில் பல்வேறு முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்து ஜனநாயக பேரவையின் தலைவர் அண்ணாதுரை பலா பழத்துடன் சென்று வேட்புமனுவை வட்டாச்சியரிடம் வழங்கினார். இதே போல் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கமும் வேட்புமனுவை அளித்தார்.

புதுச்சேரியில் வேட்பாளர் ஒருவர் ராகு காலத்தில் பூனையை குறுக்கே ஓடவிட்டு பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார். புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் முருகன் என்பவர், கோட் சூட் அணிந்து, வேட்புமனுத் தாக்கலுக்கு தேவையான பணத்தை பிச்சை எடுத்துக் கொண்டு வருவது போல சிறிய பாத்திரத்தில் ஏந்தி வந்தார். ராகு காலத்தில் பூனையை குறுக்கே ஓடவிட்டு வேட்புமனு தாக்கலுக்கு புறப்பட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments