நாங்கள் கொடுப்பது மிட்டாய் என்றால் நீங்கள் கொடுப்பது அல்வாவா?: முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி தனித் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகரன் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை பட்டியலிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்தார்.
பயிர்க்கடன் தள்ளுபடி என கூறிய அதிமுக அரசு அதற்கான நிதியை முழுமையாக ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதை நிறைவேற்றும் என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட திமுக வாக்குறுதிகளை, மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றும் முயற்சி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாக திமுக தலைவர் சுட்டிக்காட்டினார். தாங்கள் கொடுத்தது மிட்டாய் என்றால், இப்போது அதிமுக கொடுப்பது அல்வாவா என்றும் மு.க.ஸ்டாலின் வினவினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் குணசேகரன், திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் KR பெரியகருப்பன், காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் S மாங்குடி, மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி ஆகியோருக்கு ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.
அப்போது, திமுக ஆட்சி அமைந்தால் மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்பட்டு, அரசு பணியில் 3 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று ஸ்டாலின் உறுதி அளித்தார்.
Comments