சென்னை ஸ்டான்லியில் சில்மிஷ பேராசிரியர்; சிடு சிடுத்த மாணவிகள்..! டிரான்ஸ்பர் தான் பணிஸ்மெண்ட்
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சிக்கு சென்ற அறுவை சிகிச்சை பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவப் பேராசிரியர் மீது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகளின் புகாரால் பேராசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப்பிரிவு பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சந்திரசேகரன்.
அண்ணா நகரை சேர்ந்த டாக்டர் சந்திர சேகரன் மீது அவரிடம் அறுவை சிகிச்சை பயிற்சிக்கு சென்ற மருத்துவ மாணவிகள் 10 பேர் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
பயிற்சிக்கு வரும் பயிற்சி பெண் மருத்துவர்களை தனியாக அழைத்துச்சென்று பயிற்சி தருவதாக கூறி மருத்துவப் பேராசிரியர் சந்திர சேகன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிலர் தனக்கு மட்டும் நடப்பதாக நினைத்திருந்த நிலையில், ஒரு கட்டத்தில் சந்திரசேகரன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் அளவுக்கு சென்றதாகக் கூறப்படுகின்றது.
தங்களுக்கு நடக்கின்ற கொடுமைகளை மனதிற்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருந்த மருத்துவ மாணவிகள், 10 பேர் குழுவாக சென்று டீன் பாலாஜியை சந்தித்து, சந்திரசேகரன் செய்யும் பாலியல் தொல்லைகளைப் பட்டியலிட்டுள்ளனர். ஆனால் பேராசிரியர் சந்திரசேகரன் மருத்துவர் சங்கம் ஒன்றின் செல்வாக்கினால் தன் மீதான புகாரை விசாரிக்க விடாமல் தடுத்துள்ளார்.
இதையடுத்து கடுமையான மன உளைச்சலுக்குள்ளான பாதிக்கப்பட்ட மாணவிகள், சந்திரசேகரன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் மருத்துவ கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரித்ததால் மிரண்டு போன டீன் பாலாஜி, துறை ரீதியான விசாரணை நடத்தி சந்திர சேகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் சந்திரசேகரனை துறை ரீதியான நடவடிக்கையாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்துள்ளனர், ஆனால் சந்திரசேகரனோ செல்வாக்கை பயன்படுத்தி, தனது வீட்டின் அருகே உள்ள அண்ணா நகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றுப்பணிக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகின்றது.
சாதாரண நிலையில் இருக்கும் நபர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நிலையில் காவல், மருத்துவம் போன்ற மகத்தான மக்கள் சேவை பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பெண்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களால் நிகழும் பாலியல் தொல்லைகளுக்கு பணியிட மாற்றம் ஒன்றுதான் தண்டனையா ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
Comments