டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்தது ஏன் ? முதலமைச்சர் விளக்கம்..!
தாம் ஒரு விவசாயி என்பதால்தான், விவசாயிகளின் பாதிப்பை உணர்ந்து டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அதிமுக வேட்பாளர் ANR.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
அப்போது, நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை விமர்சித்தார். மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இடம்பெற்றபோது இதனை நிறைவேற்றாதது ஏன் என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.
தி.மு.க. ஆட்சியில் டெல்டாவில் மீத்தேன் எடுக்க தனியாரிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக குற்றம் சாட்டிய முதலமைச்சர், தாம் ஒரு விவசாயி என்பதால்தான் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளைப் பாதுகாத்ததாகக் குறிப்பிட்டார்.
தி.மு.க.வின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கத் தாம் தயார் என்று கூறிய முதலமைச்சர், தமது புகார்களுக்கு ஸ்டாலினால் பதிலளிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
தமது ஆட்சியில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறுவது பச்சைப் பொய் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
முன்னதாக குடவாசலில் அமைச்சர் காமராஜை ஆதரித்தும், வலங்கைமான், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் அந்தந்த தொகுதி வேட்பாளர்களுக்கும் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.
Comments