கணவர் சாவுக்கு பழிவாங்க பல கொலைகள்... எம்.எல். ஏ கனவில் இருந்த புதுவை தாதா எழிலரசி கைது!

0 292333
அரசியல்வாதியாக மாறிய தாதா எழிலரசி

புதுவையை கலக்கி வந்த பெண் தாதா எழிலரசி, எம்.எல்.ஏ ஆகும் ஆசையில்  வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த போது கைது செய்யப்பட்டார்.

புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் சாராய வியாபாரியாக இருந்து பின்னர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.ராதாகிருஷ்ணனுக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2-வது மனைவி எழிலரசியுடன் ராதாகிருஷ்ணன் குடும்பம் நடத்தி வந்தார். இதனால், வினோதா ராதாகிருஷ்ணன், எழிலரசியை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த 2013 ஆம் ஆண்டு காரைக்காலில் ராதாகிருஷ்ணனும் எழிலரசியும் இரு சக்கரவாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஒரு கும்பல் வழிமறித்து சராமரியாக வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்து போக எழிலரசி உயிர் பிழைத்துக் கொண்டார்.

தன் கணவர் கொலைக்கு பழிவாங்க அப்போதே எழிலரசி சபதம் போட்டார். பின்னர்,வினோதா காரில் சென்ற போது சீர்காழி அருகே வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராதாகிருஷ்ணனின் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராமு, வைத்தி ஆகியோரும் வெட்டி கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் எழிலரசி இருந்ததாக தெரியவந்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளி வந்த எழிலரசி தன் கணவர் ராதாகிருஷ்ணன் கொலையில் முன்னாள் சபாநாயகர் வி.எம்.சிவக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக கருதினார். கடந்த 2017 ஆம் ஆண்டு நிரவி பகுதியில் தான் கட்டி வந்த திருமண மண்டபத்தை எம்.சி. சிவக்குமார் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரை அரிவாளால் வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொலை செய்தது.

முன்னாள் சபாநாயகர் கொலையிலும் பங்கு உண்டு என்பதால் எழிலரசியை போலீசார் கைது செய்து புதுச்சேரி சிறையில் அடைத்தனர். சுமார் 10 மாதம் சிறையில் இருந்த அவர் கடந்த 8.11.2017 அன்று ஜாமீனில் வெளியில் வந்தார். இதற்கு பிறகும் எழிலரசி சும்மா இருக்கவில்லை. தன் கணவரின் முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவர் ஆனந்தாவை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் மாநாட்டு அறையில் 10க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் எழிலரசி ஆலோசனையில் ஈடுபட்ட கதையும் நடந்தது. அப்போது, போலீஸார் உள்ளே புகுந்து எழிலரசி உள்ளிட்ட அத்தனை ரவுடிகளையும் கொத்தாக அள்ளினர்.

இந்த வழக்கிலிருந்து ஜாமீனில் வெளி வந்த எழிலரசி தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதினார். யாருக்கும் தெரியாத வகையில் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்தார். இதற்கிடையே, இவர் மீது 4 பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தது. 6 மாதங்களாக தனிப்படை போலீஸார் இவரை தேடி வந்த நிலையில், கிடைக்க கேப்பில் பாரதிய ஜனதா கட்சியிலும் எழிலரசி தன்னை இணைத்துக் கொண்டார். இதனிடையே, நிரவி திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய எழிலரசி வந்த போது, அவரை கைது செய்து போலீஸார் அழைத்து சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments