புதுச்சேரி: களைகட்டும் தேர்தல் களம்... களமிறங்கிய வேட்பாளர்கள்!

0 1927
புதுச்சேரி: களைகட்டும் தேர்தல் களம்... களமிறங்கிய வேட்பாளர்கள்!

வேட்புமனுத்தாக்கல் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், புதுச்சேரியில் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. என்ஆர் காங்கிரஸ் கட்சி, பட்டியலை வெளியிடாமலே வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு கூட்டணியும் களம் காண்கின்றன. காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல, மற்றொரு கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. கூட்டணியை இறுதி செய்வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிய இரண்டே நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது தான் வேட்பாளர்கள் பட்டியலை கட்சிகள் வெளியிட்டுள்ளன.

காங்கிரசைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி போட்டியிடவில்லை. முன்னாள் அமைச்சரான ஷாஜஹான் காலாப்பட்டுவிலிருந்து காமராஜ் தொகுதிக்கு மாறியிருக்கிறார். இதேபோல் மற்ற முன்னாள் அமைச்சர்களான கந்தசாமி ஏம்பலத்திலும், கமலக்கண்ணன் திருநள்ளாறு தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். காங்கிரசிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், தேர்தலில் போட்டியிடவில்லை.

இதேபோல் பாஜகவில், மாநிலத்தலைவர் சாமிநாதன் லாஸ்பேட்டை தொகுதியில் களம் காண்கிறார். கட்சியின் மாநில பொதுச்செயலாளரான ஏம்பலம் செல்வம் மணவெளியிலும், காங்கிரசிலிருந்து பாஜகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டுவில் போட்டியிடுகின்றனர்‍.

நியமன எம்எல்ஏக்களான தங்கவிக்கிரமன்,செல்வகணபதி ஆகியோருக்கு இத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஜான்குமார் மற்றும் அவரது மகனான ரிச்சர்ட் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை உருளையன்பேட்டையில் போட்டியிடும் ஒம்சக்தி சேகர் தவிர, மற்ற 4 பேரும் அதே தொகுதிகளில் மீண்டும் களம் காண்கின்றனர்.

என்ஆர் காங்கிரஸைப் பொறுத்தவரை வேட்பாளர்கள் பட்டியல் இதுவரை வெளியிடப்படாத நிலையில், அதன் தலைவர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்‍. இன்று ஏனாம் தொகுதியில் அவர் வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்‍. காங்கிரசிலிருந்து விலகிய லட்சுமிநாராயணன் ராஜ்பவன் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்‍. முன்னாள் அமைச்சர்களும்,தற்போதைய எம்எல்ஏக்கள் சிலரும் இன்று அந்த கட்சியின் சார்பாக வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக,நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்து களம் காண்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments