தனியாக இருக்கும் பெண்களே டார்கெட்... மூதாட்டிகளிடம் நூதன திருட்டில் ஈடுபடும் பெண்மணி!
தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் மூதாட்டிகள் அணிந்திருக்கும் நகைகளை நூதன முறையில் திருடி வந்த பெண்மணியால் வடமதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட வடமதுரை அருகே உள்ளது பொம்மன்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி என்பவரது மனைவி வீரம்மாள். 75 வயது மூதாட்டியான இவர் அயலூரில் உள்ள வண்டி கருப்பணசாமி கோவில் நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். அப்பொழுது இயற்கை உபாதை காரணமாக ஒதுக்குப்புறமான மறைவிடத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கோவிலுக்கு வந்த மர்மப் பெண்மணி ஒருவர் மூதாட்டி வீரம்மாளை பின் தொடர்ந்து வந்து அவர் மீது மயக்க மருந்து தெளித்து உள்ளார். இதில் மயக்கமடைந்த மூதாட்டி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார் .
இந்த நிலையில் மூதாட்டியை காணவில்லை என கோவிலுக்கு வந்த அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அப்பொழுது புதர் மண்டி உள்ள மறைவான இடத்தில்முதாட்டி வீரம்மாள் மயங்கி கிடந்ததை கண்டுள்ளனர். மூதாட்டி மீது தண்ணீர் தெளித்து அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டுள்ளனர். தன்னை பின்தொடர்ந்து வந்த பெண் தன் மீது ஏதோ தெளித்தாள் என்றும், அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அவரது காதில் போட்டிருந்த கம்மல் காணாமல் போனதை கண்டறிந்தனர். இதையடுத்து வீரம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் வடமதுரை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து இந்த பகுதியில் நடைபெறுவதால் காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு, உடனடி விசாரணையில் இறங்கினர். அய்யலூர் அருகே உள்ள வடுகபட்டி சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜ்குமார் என்பவரின் மனைவி மணிமேகலையை சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் மணிமேகலை காவல்துறையினரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் உரிய முறையில் மணிமேகலையிடம் விசாரணை நடத்தியபோது திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழா, கூட்டங்கள் போன்ற இடங்களிலும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் மூதாட்டியிடம் சென்று அவர்களிடம் நன்றாக தெரிந்தவர் பேசுவது போல் பேசி அவர்கள் மீது மயக்க மருந்து தெளித்து அவர்களிடம் இருந்து நகைகளை திருடி வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும் திருடி செல்லும் நகைகளை அய்யலூரில் உள்ள தனியார் நகை அடமான கடையில் அடமானம் வைத்ததும் தெரியவந்தது.
மேலும் வடமதுரை மட்டுமல்லாமல் வேடசந்தூர், திண்டுக்கல், பழனி ஒட்டன்சத்திரம் போன்ற பல்வேறு பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், மூதாட்டிகளிடம் மணிமேகலை கைவரிசை காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் மட்டும் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டாரா? அல்லது வேறு யாருக்கும் இந்த திருட்டில் தொடர்பு உள்ளதா என்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments