தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக களமிறங்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அயனாவரம் 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி தங்கவேலிடம் மு.க.ஸ்டாலின் வேட்பு மனுவை வழங்கினார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, வேட்பு மனு தாக்கலின் போது டி.கே.சேகர்பாபு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் மட்டும் மு.க.ஸ்டாலினுடன் உடனிருந்தனர். முன்னதாக, மேளதாளம், தாரைதப்பட்டை முழங்க மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதன்பிறகு திறந்த வேனில் சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டதோடு, அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
திமுக தலைவராக பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் சந்திக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகும். சட்டமன்ற தேர்தலில் 9-வது முறையாக களம் காணும் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே 4 முறை எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்துள்ளார். 2 முறை ஆயிரம் விளக்கு தொகுதியிலும், 2 முறை கொளத்தூர் தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று திருவாரூர் செல்லும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். மன்னார்குடி, நன்னிலம் ஆகிய தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.
Comments