' அரசு வேலை தருவதாக கூறி என் வாழ்க்கையை பாழ்படுத்தி விட்டார்!' -ரமேஷ் ஜார்கிகோளியுடன் தனிமையில் இருந்த பெண் வீடியோ வெளியிட்டு கண்ணீர்

0 18449

கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் நேற்றிரவு பரபரப்பு வீடியோ வெளியிட்டார். அதில் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி. இவர் இளம்பெண் ஒருவருடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியானது ஆபாச வீடியோவில் இருக்கும் இளம்பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் ரமேஷ் ஜார்கிகோளி மிரட்டியதாக, பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி என்பவர் புகார் அளித்து இருந்தார். சம்பந்தப்பட்ட பெண் வந்து புகார் அளித்தால் தான் வழக்குப்பதிவு செய்வோம் என்று போலீசார் கூறிவிட்டனர். இதற்கிடையே, ரூ.5 கோடி வாங்கி கொண்டு ரமேஷ் ஜார்கிகோளி மீது தினேஷ் கல்லஹள்ளி புகார் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஜார்கிகோளி மீது கொடுத்த புகாரை திரும்ப பெறுவதாக தினேஷ் கல்லஹள்ளி கூறியிருந்தார். ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு பெங்களூரு சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் சவுமேந்த் முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டது.

விசாரணைக்குழு இளம்பெண்ணின் நண்பர் உள்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர். பெங்களூரு, தும்குரு , பெங்களூரு புறநகர், பீதர், பால்கி ஆகிய பகுதிகளில் சிறப்பு விசாரணை குழு போலீசார் ஆபாச வீடியோ தயாரித்த விவகாரம் தொடர்பாக சோதனை நடத்தினர். அப்போது, கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், பென் டிரைவ்கள், ஹார்ட்டிஸ்க்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தேவனஹள்ளி அருகே விஜயபுரா பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆபாச வீடியோ வெளியாகி 10 நாட்களாகியும் இந்த விவகாரம் தொடர்பாக ரமேஷ் ஜார்கிகோளி போலீசில் புகார் கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், ரமேஷ் ஜார்கிகோளியின் நண்பருமான நாகராஜ் என்பவர், ரமேஷ் ஜார்கிகோளி சார்பில் ஒரு புகார் மனுவை அளித்தார். ரமேஷ் ஜார்கிகோளியின் கையெழுத்திடப்பட்டு இருந்த அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- '' ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பது தெரிய வந்துள்ளது. அரசியல் ரீதியாக என்னை ஒழிக்கவும், மிரட்டி பணம் பறிக்கவும் முயற்சி செய்துள்ளனர். இந்த போலி ஆபாச வீடியோவை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள வீட்டில் வைத்து 3 மாதங்களாக தயாரித்துள்ளனர். இதனால், மனதளவில் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு எதிராக ஏராளமானோர் உள்ளனர்.  போலி வீடியோவை வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. புகாரின்பேரில் சதாசிவநகர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ரமேஷ் ஜார்கிகோளி புகாரளித்த சில மணி நேரத்தில் அவருடன் தனிமையில் இருந்த  இளம்பெண் நேற்றிரவு ஒரு வீடியோவை வெளியிட்டார். சுமார் 34 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் இளம் பெண் கூறியிருப்பதாவது, ''ரமேஷ் ஜார்கிகோளியுடன் நான் இருந்த ஆபாச வீடியோ வெளியானதால்   எனது மானம், மரியாதை போய் விட்டது. இந்த வீடியோ யார் எடுத்தது? யார் வெளியிட்டது? என்பது பற்றி எனக்கு தெரியாது. எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறினார். ஆபாச வீடியோ வெளியானது குறித்து என் வீட்டில் வந்து நிறைய பேர் கேட்கிறார்கள்.எனது தந்தை, தாய் நானும் கூட தற்கொலைக்கு முயன்று விட்டேன். ஆனால், கிராம மக்கள் எங்களை பாதுகாத்து வருகின்றனர். எனக்கு அரசியல் பின்புலம் எதுவும் இல்லை. இந்த வீடியோ வெளியான விவகாரத்தால் எனது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் எனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கேட்டு கொள்கிறேன்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments