அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அதிமுக மீண்டும் உறுதி செய்துள்ளது. வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளையும் அதிமுக வழங்கி உள்ளது. விலையில்லா சோலார் அடுப்பு, வாஷிங்மெசின் உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் அதிமுக உறுதியளித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக, பல்வேறு அசத்தல் அறிவிப்புகளுடன் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கி
உள்ளது. சென்னை - ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இருவரும் இணைந்து வெளியிட்டனர்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை, அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், தேர்தல் அறிக்கைத் தயாரிப்பு குழுவின் பொறுப்பாளருமான பொன்னையன், வாசித்தார்.
அம்மா இல்லம் திட்டம் என்ற பெயரில் வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக காங்கீரிட் வீடு - அம்மா பசுமை வீடு திட்ட மானியம் 3 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படும் - அனைத்து குடும்ப அட்டை உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் - அரிசி கார்டு உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங்மெஷின் - விலையில்லா அரசு கேபிள் இணைப்பு இலவசமாக ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் - சூரிய சக்தி சமையல் அடுப்பு விநியோகிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
மதுபான கடைகள் படிப்படியாக மூடப்படும் - கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்த முடிவு - மீனவர் நலன்காக்க கச்சத்தீவு மீட்கப்படும் - 100 நாள் வேலை திட்ட பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்த நடவடிக்கை - மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிப்பு - மகப்பேறு விடுப்பு ஒராண்டு வரை நீட்டிப்பு - ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என உறுதி அளித்துள்ள அதிமுக, தமிழகத்தில் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை - பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடரும் -என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளையும் அதிமுக வெளியிட்டு உள்ளது.
கல்வி கடன் ரத்து செய்யப்படும் என உறுதி அளித்துள்ள அதிமுக, 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும் - 9, 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு விரிவுபடுத்தப்படும் - கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும்
2 ஜிபி டேட்டா வழங்கப்படும் - UPSC, NEET, IIT -JEE , TNPSC, தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி மையம் உருவாக்கப்படும் என அதிமுக உறுதி அளித்துள்ளது.
இதுதவிர, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40%ஆக உயர்த்தப்படும் - நகர பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை - பட்டதாரி பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தோடு சேர்த்து 60 ஆயிரம் ரூபாய் திருமண உதவித்தொகை -
நிதிச்சேவைகளை பெற, பயன்படுத்த "அம்மா பேங்கிங் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
நெசவாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி - மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 7 ஆயிரத்து 500ஆக உயர்த்தி வழங்கப்படும் - முதியோர் ஒய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக உறுதி அளித்துள்ளது.
வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தெகை இரட்டிப்பாக்கப்படும் - அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் - 18 வயது நிரம்பியோர் அனைவருக்கும் கட்டணமில்லா வாகன பயிற்சி & ஓட்டுநர் உரிமம் - 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் எம்ஜிஆர் பசுமை ஆட்டோ வழங்கப்படும் - அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை - மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் - மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை - காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் - பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும். - மாவட்டந்தோறும் மினி ஐ.டி பார்க் - கரிசல், களிமண் எடுக்க தடையில்லா சான்று அளிக்கப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது..
Comments