17 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 9139
தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளில் முதல் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 

தாராபுரம் தனித்தொகுதியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் திமுக சார்பில் கயல்விழி செல்வராஜ் களமிறங்குகிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன் களமிறக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலையில் திமுகவின் எ.வ. வேலுவை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் தணிகைவேல் போட்டியிடுகிறார்.

அதேபோன்று, துறைமுகம் தொகுதியிலும் திமுகவின் டி.கே.சேகர் பாபுவை எதிர்த்து, பாஜ.க. சார்பில் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதிக்கு பா.ஜ.க. சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும் போட்டியிடுகின்றனர். எச்.ராஜா காரைக்குடி தொகுதியில் களம் காண்கிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எஸ்.மாங்குடி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மொடக்குறிச்சியில் திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் டாக்டர் சி.கே.சரஸ்வதி போட்டியிடுகிறார்.

அரவக்குறிச்சி தொகுதிக்கு முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையும், நாகர்கோவில் தொகுதிக்கு எம்.ஆர்.காந்தியும், நெல்லை தொகுதிக்கு நயினார் நாகேந்திரனும் பா.ஜ.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டதால், அதிருப்தியடைந்து, எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதிக்கு பாண்டுரங்கன், ராமநாதபுரம் தொகுதிக்கு குப்புராம், குளச்சல் தொகுதியில் ரமேஷும் களம் காண்கின்றனர். திருக்கோவிலூரில் கலிவரதனும், திட்டக்குடியில் பெரியசாமியும், திருவையாறு தொகுதியில் பூண்டி எஸ்.வெங்கடேசனும் பா.ஜ.க. வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

தளி, விளவங்கோடு, உதகை ஆகிய 3 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க. போட்டியிடும் 20 சட்டமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளில் திமுகவுடனும், 5 தொகுதிகளில் காங்கிரசுடனும், ஒரு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டுடனும் மோதுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments