தி.மு.க. தேர்தல் அறிக்கை இரண்டாம் கதாநாயகன்...!

0 4481
சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுக்க அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி, ரேசன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், பெற்றுக்கொண்டார். இதன் பின்னர் பேசிய ஸ்டாலின் , திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு முதல் கதாநாயகன். இரண்டாவது கதாநாயகன் தேர்தல் அறிக்கை என்றார்.

ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் உள்ளன. அதில், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும், முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை கேட்கும் முகாம்கள் நடத்தப்படும். பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும்

கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்படும்.பெட் ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும். மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்.
நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்.

இந்து ஆலயங்கள் புனரமைப்பு, குடமுழுக்கு பணிக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மசூதி, தேவாலயங்களை சீரமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். ஏழை மக்கள் பசி தீர முதல் கட்டமாக 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும். தமிழக ஆறுகள் அனைத்தும் மாசு அடையாமல் காக்க தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்படும்.

 சிறுகுறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்கிட 10 ஆயிரம் ரூபாய் மானியம், மகளிருக்கு பேறுகால உதவித் தொகை 24 ஆயிரமாக உயர்த்தப்படும். நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் தீர்மானம்.

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும். அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலை வாய்ப்புகள் தமிழருக்கே வழங்க சட்டம் கொண்டு வரப்படும்.

சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி மருத்துவ வசதி வரும். புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும். கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அமைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்.

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
2 ஆயிரம் கோடி ரூபாயில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர் செய்ய பொருளாதார உயர் மட்டக் குழு அமைக்கப்படும்.

வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

அரசு பள்ளி, கல்லூரி மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கப்படும். புகழ்பெற்ற இந்துக் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும். தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம்.

சிறுகுறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments