'கிழக்கிந்திய கம்பெனி கொண்டு வந்த சட்டத்தின் கீழ் நம் கோவில்கள் உள்ளன' நடிகர் சந்தானம் கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் பதில்

0 9856
ஜக்கி வாசுதேவிடத்தில் பேட்டி எடுக்கும் நடிகர் சந்தானம்

ஈஷாவால் ஒரு இன்ச் காடு அழிக்கப்பட்டதாக நிரூபித்தால் கூட நாட்டை விட்டு வெளியேறுவதாக நடிகர் சந்தானம் கேட்ட கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் பதிலளித்துள்ளார்.

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தமிழக கோவில்களை அற நிலையத் துறையிடம் இருந்து விடுவிக்க கோரி 'கோவில் அடிமை நிறுத்து ' என்ற இயக்கத்தை உருவாக்கி ஆதரவு திரட்டி வருகிறார். இதற்காக, 8300083000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கும் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது . கோவில்களை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்ற ஜக்கி வாசுதேவின் கோரிக்கைக்கு ஆதரவு கொடுத்த நடிகர் சந்தானம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

அப்போது, ஜக்கி வாசுதேவிடத்தில் சந்தானம் சில கேள்விகளை எழுப்பினார். தேர்தல் நேரத்தில் கோவில்கள் மீட்பு பற்றி பேச வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு தோன்றியது ஏன் என்று சந்தானம் கேட்ட போது, தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தமிழக கோவில்களை அரசிடம் இருந்து விடுவிப்பதே நல்லது என்றார். மேலும், இதுவரை தமிழகத்தில் 11, 999 கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ளது . 1200 கோயில்களில் உள்ள சிலைகள் திருடப்பட்டு விட்டது. சிலை திருட்டுக்கு அர்ச்சகர்களும் பூசாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர் என்றும் ஜக்கி வாசுதேவ் குற்றம் சாட்டினார்.

அந்த காலத்தில் கோவில்களை வைத்தே ஊர்கள் அமைந்தன. ஆனால் இன்று கோவில் இல்லாத ஊர்களாக நமது மாநிலம் மாறிவருகிறது. கிழக்கிந்திய கம்பெனிகள் கொண்டுவந்த சட்டத்தின் கீழ்தான் இன்றுவரை நமது கோயில்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோயில்களை அரசாங்கத்தில் இருந்து விடுவித்து அதற்கான தனி சட்ட வரைவு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் ஜக்கி வாசுதேவ் கூறினார்.

கோவை ஈஷா மையத்தால் காடுகள் அழிக்கப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்வியை சந்தானம் முன் வைத்த போது, சற்று ஆவேசமான ஜக்கி வாசுதேவ், ஈஷாவால் ஒரு இன்ச் காடு ஆக்கிரமிப்பு செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நாட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று பதிலளித்தார்.

மேலும், ஜக்கி வாசுதேவ் கூறுகையில், நாட்டில் 50 சதவிகிதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள்தான் உள்ளனர். இவர்கள், கோவில்களுக்கு சென்று வழிபடுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். கோவில் அடிமை மீட்பு உறுதி அளிப்பவர்களுக்கு தனது வாக்கை செலுத்தப் போவதாக ஜக்கி வாசுதேவ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments