ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்; மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால்..!
அதிமுக அரசின் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்றும், இது குறித்து திமுக தலைவருடன் ஒரே மேடையில் பேசத் தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே ஊடகம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு வினாக்களுக்குப் பதிலளித்தார். அப்போது, அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்கிற நம்பிக்கையுள்ளதா எனக் கேட்டதற்கு, தனது அரசு முக்கியப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தியதாகவும், நீர் மேலாண்மைத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதாகவும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்தியதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி பத்தாண்டுகளாக உள்ள நிலையில் அதற்கு மக்களிடையே எதிர்ப்பு உள்ளதா எனக் கேட்டதற்கு, எதிர்ப்பு இல்லை என்றும், சுகாதாரம், குடிநீர், நெடுஞ்சாலைத் திட்டங்கள் நிறைவேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம் என மக்களின் எதிர்பார்ப்புகளைத் தமது அரசு நிறைவேற்றியுள்ளதாகவும், உயர்கல்வியில் நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழகம் விளங்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக்கு மக்கள் ஆதரவாக உள்ளதையே நாடாளுமன்றத் தேர்தலின்போது நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலும் காட்டுவதாகக் குறிப்பிட்டார். அதிமுக அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ளதாகவும், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அதிமுக அரசு மீது திமுக கூறும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் இந்தத் தேர்தலில் மையப்பொருளாக இருக்குமா என வினவியதற்கு, திமுகவின் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், அது குறித்து மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசத் தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் ஏழரை விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கியது, இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் திறந்தது, சாலைத் திட்டங்கள் நிறைவேற்றியது, தொழிற்சாலைகள் கல்லூரிகள் திறந்தது, காவிரிச் சிக்கலுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்வு கண்டது ஆகியவை தமது அரசின் சாதனைகள் எனக் குறிப்பிட்டார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது தமது அரசின் சாதனை எனத் தெரிவித்தார்.
Comments