பெண் மூலம் லஞ்சம்..! அம்பலப்பட்டு போன பூவை சார்பதிவாளர்..!
பூந்தமல்லி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பெண் பத்திர எழுத்தர் மூலமாக, சார்பதிவாளர் லஞ்சம் வாங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
4 நாட்கள் அலைக்கழித்த பத்திரத்திற்கு, 40 ஆயிரம் கைமாறியதும் கையெழுத்திட்ட சம்பவம்
சென்னை பூந்தமல்லி சார்பதிவாளரான அன்பழகனைச் சுற்றி நின்று தங்களிடம் 40 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு கையெழுத்திட்டது ஏன் ? என்று வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பி திணறடித்தார்
தான் பணம் ஏதும் வாங்கவில்லை என்று அன்பழகன் மறுத்த நிலையில், அவரிடம் கையெழுத்து பெறுவதற்காக நின்று கொண்டிருந்த பத்திர எழுத்தரான பெண் ஒருவர் தான் பணம் வாங்கியதாகவும், அதற்கும் அன்பழகனுக்கும் தொடர்பில்லை என்று ஒப்புக் கொண்டார்.
4 முறை பத்திரத்தை சமர்பித்த போதும் பத்திரப்பதிவுக்கு கையெழுத்துப் போடாமல் இழுத்தடித்த நிலையில், அன்பழகனுடன் நட்பில் உள்ள அந்த பெண் பத்திர எழுத்தர் மூலமாக அன்பழகனுக்கு 40 ஆயிரம் வழங்கியதும் அவர் பத்திரத்தில் கையெழுத்திட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் நின்று அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார், வழக்கறிஞர் உள்ளிட்ட இருவரையும் விசரணைக்காக அழைத்துச் சென்றனர்.
அன்பழகன் லஞ்சம் கேட்கும் போதே, லஞ்ச ஒழிப்பு போலீசிடம் தகவல் அளித்திருக்கலாமே, அதை விடுத்து வம்பு செய்யக்கூடது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்த நிலையில், தாங்கள் எடுத்த இந்த வீடியோ காட்சிகளை முக நூலில் வெளியிட்டு சார்பதிவாளர் அலுவலக லஞ்சத்தை ஆதாரத்தோடு அமபலப்படுத்தினர்.
இது தொடர்பாக சார்பதிவாளர் அன்பழகனிடம் கேட்டபோது, தான் ஒரு போதும் கையெழுத்து போட லஞ்சம் பெறுவதில்லை என்று மறுத்த அவர், தான் அங்கு பொறுப்பேற்ற பின்னர் எந்த ஒரு சொத்தையும் பதிந்து கொடுப்பதில் காலதாமதப்படுத்தியது இல்லை என்றும், அந்த பெண் எழுத்தருடன் ஏற்கனவே பத்திரம் எழுதியது தொடர்பாக கொடுக்கல், வாங்கல் தொடர்பு வைத்திருந்த வழக்கறிஞர் குடிபோதையில் வந்து தன்னை மிரட்டியதால் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகத் தெரிவித்தார்.
ஒரு கையெழுத்துக்கு ஒரு ரேட் என்று வகை வகையாய் லஞ்சம் வாங்கும் சார்பதிவாளர்கள் மீது காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments