கோழிக்கொண்டை ஹேர் ஸ்டைலை நறுக்கிய இன்ஸ்பெக்டர்... ஆயுதப்படைக்கு மாற்றம்!
கோழிக்கொண்டை ஹேர் ஸ்டைலுடன் சுற்றித்திரிந்த சிறுவனை, சலூன் கடைக்கு அழைத்து சென்று முடிதிருத்தம் செய்து அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர் கணேஷ் குமாரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றி எஸ்.பி கங்காதர் உத்தரவிட்டுள்ளார்
கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு புள்ளிங்கோ சிறுவன் ஒருவன் கோழிக்கொண்டை போன்ற ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டு சுற்றித் திரிந்தார்.அதுமட்டுமில்லாமல், காதில் கடுக்கண் போட்டுக் கொண்டு வித்தியாசமாக இருந்துள்ளார்.
இதைக் கண்டு கடுப்பான இன்ஸ்பெக்டர் உடனே சிறுவனை அழைத்து விசாரித்ததில், அவருக்கு15 வயது தான் என்பதும் அவர் கத்தாழை மேடு பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. படிக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு ஹேர் ஸ்டைல் தேவையா? என சிறுவனை கடிந்து கொண்ட இன்ஸ்பெக்டர், கோழிக்கொண்டை சிறுவனை கையோடு சலூன் கடைக்கு அழைத்துச் சென்று முடியை சீராக வெட்டச் சொல்லியிருக்கிறார். சலூன் கடைக்காரரும் சிறுவனின் முடியை ஒழுங்காக வெட்டி அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, 15 வயது சிறுவனின் முகத்தை வீடியோ எடுத்து இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வெளியிட்டதற்காக பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பினர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி எஸ்.பி கங்காதர் விசாரணை நடத்தினார். இதையடுத்து 15 வயது சிறுவனை அழவைத்து , அந்த வீடியோவை சமூக வளைத்தளங்களில் வெளியிட்டதற்காக இன்ஸ்பெக்டர் கணேஷ் குமாரை ஆயுதப்படை பிரிவுக்கு உடனடியாக மாற்றி எஸ்.பி கங்காதர் உத்தரவிட்டுள்ளார். கோழிக்கொண்டை விவகாரம் கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments