திமுக - கம்யூனிஸ்டு இடையே இழுபறி? தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்.!

0 4628
திமுக - கம்யூனிஸ்டு இடையே இழுபறி? தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்?

திமுக தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதிகளை இறுதி செய்வதில் திமுக - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. திருத்துறைப்பூண்டி, பவானி, தளி, திருப்பூர் தெற்கு, ஸ்ரீவில்லிபுதூர், வால்பாறை ஆகிய தொகுதிகளை சிபிஐ கோரியுள்ளது. மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் 3 தொகுதிகள் கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும். ஆகையால் திருத்துறைப்பூண்டி, பவானி, தளி தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்டுக்கு கொடுக்க திமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும், திருப்பூர் தெற்கு தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேட்பதால் இழுபறி ஏற்பட்டுள்ளது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்து பேசினர். பெரம்பூர், மதுரவாயல், திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, பெரியகுளம், சிதம்பரம் ஆகிய 6 தொகுதிகளை ஒதுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை எல்லைக்குள் வரும் மதுரவாயல், பெரம்பூர் தொகுதிகளை ஒதுக்க திமுக மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. கோவை வடக்கு தொகுதியை மதிமுகவுக்கும், சிதரம்பரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், அந்த தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்குவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வேடு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பார்வேர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உசிலம்பட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவுக்கு அரியலூர், சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுராந்தகம், மதுரை தெற்கு, கோவை வடக்கு ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிகளை அடையாளம் காணுவதற்கான இருதரப்பிலான பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெறும் என கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோவில், குன்னம், வானூர், செய்யூர், உளுந்தூர்பேட்டை, பொன்னேரி ஆகிய தொகுதிகளை ஒதுக்குமாறு விசிக கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்குடி, விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பட்டுக்கோட்டை, முதுகுளத்தூர் உதகை, மயிலாப்பூர், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், அறந்தாங்கி, வேதாரண்யம், ஆத்தூர், கலசப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், மதுரை மேற்கு, ஓசூர் ஆகிய தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments