மருத்துவ கழிவுகளால் குப்பை மேடாக மாறி வரும் தீர்த்தவரி கடற்கரை... சுகாதார சீர்கேட்டால் கலங்கும் சுற்றுலாப் பயணிகள்!
மரக்காணம் அருகே உள்ள தீர்த்தவரி கடற்கரை பகுதிகளில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சுற்று வட்டார பகுதி மக்கள் அதிகம் விரும்பி செல்லும் கடற்கரை தீர்த்தவரி கடற்கரை ஆகும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பங்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரையில் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழித்துவிட்டு செல்வார்கள்.
சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகைதரும் தீர்த்தவரி கடற்கரையில் சமீபகாலமாக அதிகளவில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடற்கரையே மருத்துவ கழிவுகள் நிறைந்த குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இங்கு வரும் மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் தீர்த்தவரி கடற்கரையில் புல்வெளிகள் அதிகம் இருப்பதால் மேய்ச்சலுக்காக இந்த பகுதியிலுள்ள மக்கள் தங்கள் கால்நடைகளை இங்கு மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். மருத்துவ கழிவுகள் காரணமாக ஒன்றும் அறியா கால்நடைகளும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. மூட்டை மூட்டையாக கொட்டப்படும் பிளாஸ்டி, கண்ணாடி மருத்துவக்கழிவுகள் எரியூட்டப்படுவதால், சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் யாரால் கொட்டப்படுகிறது என்பது கேள்வி குறியாக உள்ளது. இந்த மருத்துவக் கழிவுகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமானதா அல்லது ஏதேனும் தனியார் கிளினிக் வைத்திருப்பவர்கள் கொட்டி வருகிறார்களா என்பது தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்லும் கடற்கரையில் இவ்வாறு அலட்சியமற்று செயல்படும் மருத்துவ நிர்வாகம் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments