தொகுதிகளை இறுதி செய்ய அதிமுக தீவிரம்.!

0 4202

திமுகவின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடும் சூழலில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தொகுதிப்பங்கீடு தொடர்பாக அதிமுக - த.மா.கா இடையேயான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. அமைச்சர் தங்கமணி வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோர் அடங்கிய அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினரை த.மா.கா நிர்வாகிகள் சந்தித்து பேசினர். 12 தொகுதிகள் கேட்ட தமிழ் மாநில காங்கிரசுக்கு 3 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஈரோடு மேற்கு, வால்பாறை, பாபநாசம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகளை ஒதுக்குமாறு முதலில் பெருந்தலைவர் மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில், சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியை அதிமுக தங்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும், தென் மாவட்டம் அல்லது கொங்கு மண்டலத்தில் மேலும் ஒரு தொகுதியை ஒதுக்குமாறு அதிமுகவிடம் வலியுறுத்தி வருவதாகவும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. பெரம்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுகவிடம் 3 தொகுதிகள் ஒதுக்குமாறு வலியுறுத்தியது. அந்த கட்சிக்கு ஒரு இடம் வழங்க அதிமுக முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பா.ம.க., பா.ஜ.க. போட்டியிடும் இடங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments