அட இப்படியும் ஒரு வாக்குச்சாவடியா... பெண்களுக்கு புடிச்ச கலருல.. மகளிர் மட்டும்!

0 3370

திருவள்ளூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதியான பூவிருந்தவல்லியில், வரும் தேர்தலில் பெண்கள் மட்டுமே வாக்களிக்கக்கூடிய பிரத்யேக 'பிங்க்' வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரம் நெருங்க நெருங்க தமிழகம் களைகட்டி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் பிராச்சார வேலைகளில் முனைப்பு காட்டிவருகின்றன.

பிராச்சாரம், அறிக்கைகள், கூட்டணி பேச்சுவார்த்தை , வேட்பாளர் பட்டியல் என தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்டங்கள் தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக பூவிருந்தவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில், பெண்களுக்கென பிரத்யேக 'பிங்க்' வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக் கட்டடம் பிங்க் நிறத்தில் வண்ணம் தீட்டப்பட்டு, பலூன்கள் தொங்கவிடப்பட்டு புதுப்பொலிவுடன் ஜொலிக்கிறது.

தொகுதி தலைமைத் தேர்தல் அலுவலர் ப்ரீத்தி பார்கவி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இந்த பிரத்யேக வாக்குச்சாவடியை திறந்து வைத்தார். வாக்குச்சாவடியில், எப்படி வாக்களிப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் பெண்களுக்கு அளிக்கப்பட்டது. மேலும் நோட்டு புத்தகங்கள், பேனா, விழிப்புணர்வு பதாகைகள் என அனைத்துப் பொருள்களும் பிங்க் நிறத்திலிருந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. பூவிருந்தவல்லி தொகுதிப் பெண்கள் பலர், வாக்குச்சாவடிக்கு ஆர்வத்துடன் வந்தனர்.

இது குறித்துத் தேர்தல் அலுவலர் ப்ரீத்தி பார்கவி ,சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதற்காக வாக்காளர்களையும் தயார்படுத்தி வருகிறோம். 100% வாக்களிப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறோம். மகளிர் தினத்தை முன்னிட்டு பூவிருந்தவல்லியில், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் மட்டுமே ஓட்டளிக்ககூடிய பிரத்யேக வாக்குச்சாவடியை அமைத்திருக்கிறோம். பெண்களைப் போற்றும் வகையில் இந்த வாக்குச்சாவடியை பிங்க் பூத்தாக அறிவித்திருக்கிறோம் என்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பூவிருந்தவல்லி தொகுதியில் பெண் வாக்காளர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது. இந்த முறை அதிகளவில் பெண் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகத்தான் இந்த 'பிங்க் பூத்' அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments