கிரண் பேடியை தெரியும்... பத்மினியம்மாவை தெரியுமா? -பின்னணியில் இருந்த இந்திராகாந்தி

0 4781
பத்மினியம்மாவுக்கு சிறந்த போலீசுக்கான விருது வழங்கும் கேரள முன்னாள் முதல்வர் ஏ .கே. அந்தோணி

நாட்டின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி என்பது பலருக்கும் தெரியும். ஆனால், நாட்டின் முதல் பெண் போலீஸ் நிலையம் எதுவென்று கேட்டால் சட்டென்று பதில் வராது. ஏனென்றால், 48 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது.

கேரளாவில் பெண்களுக்கு எல்லாவிதத்திலும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கேரள பெண்கள் பல துறைகளிலும் சாதனை புரிவதும் கோலோச்சுவதும் வழக்கமானதுதான். அந்த வகையில், நாட்டிலேயே முதல் பெண் போலீஸ் நிலையமும் கேரளாவில்தான் தொடங்கப்பட்டது. கடந்த 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி நாட்டிலேயே முதல் பெண் போலீஸ் நிலையம் கோழிக்கோட்டில் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த போலீஸ் நிலையத்தை அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்தார். ஆசியாவிலும் முதல் பெண் போலீஸ் நிலையம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போலீஸ் நிலையத்தில் முதன் முறையாக சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்தான் எம். பத்மினியம்மா. முன்னதாக, திருவனந்தபுரத்தில் ஏ.எஸ்.ஐ- யாக பணியாற்றிய பத்மினியம்மா, நாட்டின் முதல் பெண் போலீஸ் நிலையத்துக்கு சப் - இன்ஸ்பெக்டராக புரமோஷன் கொடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். இவருக்கு கீழ் 3 ஏட்டுகள் உள்ளிட்ட 10 பேர் பணியாற்றினர்.

இந்த போலீஸ் நிலையத்தை பிரதமர் இந்திராகாந்தி திறந்து வைத்த போது, சப்- இன்ஸ்பெக்டர் பத்மினியம்மாவுக்கு ஒரு பேனா ஒன்றை பரிசளித்தார். தற்போது, வரை அந்த பென்னை பொன்னைப் போல பத்மினியம்மா பாதுகாத்து வருகிறார். நாட்டின் முதல் பெண் போலீஸ் நிலையத்தை திறந்து வைத்த போது ஏராளமான மக்கள் கூட்டம் கூடியது. அப்போது, 3 சிறுமிகள் காணாமல் போனார்கள். இதுதான், இந்த போலீஸ் நிலையத்துக்கு கிடைத்த முதல் வழக்கு ஆகும். முதலில் பெண்கள் சேலை அணிந்தே போலீஸாக பணியாற்றியுள்ளனர்.பிறகுதான், பேண்ட் சட்டை யூனிபார்மாக மாறியது.

கேரளாவின் முதல் பெண் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்த பெருமை பெற்ற பத்மினியம்மா இரண்டு ஆண்களுக்கு பிறகு அங்கிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டார். கேரளாவில் பல நகரங்களில் பணியாற்றிய பிறகு, எஸ்.பியாக ஓய்வு பெற்றார். தற்போது, திருவனந்தபுரத்தில் குமாரபுரத்தில் மகள் ,பேரன் பேத்திகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments