தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு - ஆலோசனை

0 1866
தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு - ஆலோசனை

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு கடையநல்லூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற 2 தொகுதிகள் எவை என்பது இன்று மாலைக்குள் தெரியும் என்று காதர்மொய்தீன் தெரிவித்துள்ளார். அதே போன்று இன்று மாலை அல்லது நாளைக்குள் எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது இறுதியாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. 

திமுக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர்மொய்தீன் தலைமையிலான குழுவினருடன் திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தரப்பில் 8 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை வழங்கி, 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர்மொய்தீன், தாங்கள் கேட்டதில் கடையநல்லூர் தொகுதியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம், பாபநாசம் ஆகிய தொகுதிகளில் எந்த 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்று மாலை தெரியும் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி, பவானி, தளி, திருப்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வால்பாறை உள்ளிட்ட 12 தொகுதிகளின் பட்டியலை கொடுத்து, அதில் 6 தொகுதிகளை ஒதுக்க இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை வைத்தது.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் சுப்பராயன், பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். இன்று மாலை அல்லது நாளைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments