குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம்: முதலமைச்சர் அறிவிப்பு
மகளிருக்கான திட்டமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஏற்கனவே அதிமுக தயாரித்துள்ள தேர்தல் அறிக்கையில் இருந்து கசிந்த தகவலை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். அதிமுக - அமமுக இணைப்பு என்பது இல்லவே இல்லை என்று முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற தொண்டர்கள், நிர்வாகிகள் திரும்ப வந்தால் ஏற்போம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும் என்றும், 12 ஆம் தேதிக்குள் அதிமுக வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியாகும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Comments