வாடகை வாகன ஓட்டுநர்கள் வாக்களிக்கும் வசதி குறித்து பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்துவது குறித்துப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவு பிறப்பிக்கத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாடகை வாகன ஓட்டுநர் சங்கம் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பணிக்காகப் பயன்படுத்தப்படும் வாடகை வாகனங்களின் ஓட்டுநர்களும், இன்றியமையாப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களும் வாக்களிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
பணி காரணமாக 8 லட்சம் ஓட்டுநர்களால் வாக்களிக்க இயலாத நிலை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து நவம்பர் பத்தாம் தேதி அளித்த மனுவைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வாடகை வாகன ஓட்டுநர்களை அடையாளம் கண்டு, அஞ்சல் வாக்களிக்க அனுமதிப்பது சாத்தியமில்லாதது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது குறித்த மனுவைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவு பிறப்பிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.
Comments