சென்னையில் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது நோய் கட்டுப்பாட்டு பகுதி
சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒரு தெருவில் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் தற்போதைய நிலவரப்படி 1,373 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆயிரத்து 269 தெருக்களில் ஒருவரும், 74 தெருக்களில் 2 பேரும் 20 தெருக்களில் 10 பேரும், 10 தெருக்களில் 3க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் 150 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 243 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒரு தெருவில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கபட்டாலும் வீட்டில் தகரம் அடிக்கப்படாது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். மேலும் அந்த தெருவில் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை தியாகராய நகரில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், முகக்கவசம் அணியாமல் உலாவந்த 20க்கும் மேற்பட்டோரிடம் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் தலா 200 ரூபாய் அபராதம் விதித்தார். முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணிடம், பணம் இல்லாததால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தன் சொந்த பணத்தை அப்பெண்ணுக்கு கொடுத்து அபராதம் செலுத்த உதவினார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக இதுவரை 13 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்திருப்பது தமிழகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணி என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Comments