படத்தில் விஜயகாந்த் போலவே நிஜத்தில் சட்ட விரோத செயல்கள் தட்டி கேட்பு ...தே.மு.தி.க தொண்டர் கொலையில் அதிர்ச்சி பின்னணி!

0 4123
கொல்லப்பட்ட ராஜ்குமார், கைதான அன்பரசன்


விஜயகாந்த் போலவே நிஜ வாழ்க்கையில் நில ஆக்கிரமிப்பை எதிர்த்த தே.மு.தி.க தொண்டர் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்தவரால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வந்தவர், ராஜ்குமார் (வயது 38) இவர் தேமுதிக அனகாபுத்தூர் நகர இளைஞரணி துணை தலைவராக இருந்தார். அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே தையல் கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த மார்ச் 1 ஆம் தேதி இரவில் ராஜ்குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வழி கேட்பது போல் ராஜ்குமாரின் வாகனத்தை நிறுத்தினர், ராஜ்குமார் வாகனத்தை நிறுத்தியதும் திடீரென்று மர்ம நபர் ஒருவர் பின்னாலிருந்து ராஜ்குமாரை சரமாரியாக வெட்ட தொடங்கினார். தொடர்ந்து வழி கேட்ட நபரும் ராஜ்குமாரை கத்தியால் குத்தினார். ராஜ்குமாரின் அலறல் சத்தம் கேட்டவுடன் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். தொடர்ந்து, மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த ராஜ்குமாரை மீட்டு ஆட்டோவில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் , வழியிலேயே ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார். தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு பேர் ராஜ்குமாரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் மற்றும் ரஞ்சித் கொலையில் ஈடுபட்டுது தெரிய வந்தது. அனகாபுத்தூர் ஆற்றுப் பகுதியில் பதுங்கியிருந்த இரண்டு பேரையும் சங்கர் நகர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகளை அனகாபுத்தூர் ஆற்றில் இருந்து கண்டெடுத்தனர். இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.image

விசாரணையில் அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவது குறித்து போலீசாரிடம் துப்புக் கொடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை காட்டிக் கொடுத்ததால் ராஜ்குமாரை கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். பின்னர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர் படுத்தி கடந்த 2- ஆம் தேதி சிறையில் அடைத்தனர்.இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த புரட்சி பாரத கட்சி மாநிலத் துணைச் செயலாளர் அன்பரசன் என்பவர் இந்த கொலைக்கு பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . புனித தோமையார் மலை துணை ஆணையர் பிரபாகரன் அவர்களின் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு அன்பரசனை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி அன்பரசன் போலீஸில் சரணடைந்தார்.

விசாரணையில் கடந்த 2015- ஆம் ஆண்டு அனகாபுத்தூர் ஆற்றோரம் உள்ள வீடுகளை நகராட்சி அதிகாரிகள் இடித்தனர், அங்கிருந்தவர்களுக்கு மாற்று இடம் கொடுத்துள்ளனர். ஆற்றோரம் வீடுகள் இடிக்கப்பட்டிருந்த இடத்தில் இரண்டரை கிரவுண்ட் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் கடை ஒன்றை அன்பரசன் கட்டியுள்ளார். இதைப் பார்த்த ராஜ் குமார் அரசு நிலத்தை நீங்கள் ஆக்கிரமிப்பு செய்து கடை வைக்கலாம்... அதை உடனடியாக காலி செய்யுங்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அன்பரசன் ராஜ்குமாரை தீர்த்துக்கட்ட வேண்டும் திட்டம் போட்டுள்ளார். அதே வேளையில், சதீஷ் மற்றும் ரஞ்சித் இருவரின் நண்பர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை போலீசாருக்கு ராஜ்குமார் காட்டிக் கொடுத்துள்ளார். இதனால் , அவர்களும் ராஜ்குமார் மீது கோபத்தில் இருந்ததை அன்பரசன் தெரிந்து கொண்டார். தொடர்ந்து, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்பது போல அவர்களுடன் கூட்டு சேர்ந்து ராஜ்குமாரை கொல்ல திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, சதீஷ் மற்றும் ரஞ்சித்துக்கு 3.5 லட்சம் தருவதாவும் அடையாறு ஓரம் காலி இடத்தில் கடை வைத்து தருவதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். இதையடுத்து, சதீஷ், ரஞ்சித் இருவரும் சேர்ந்து ராஜ்குமாரை கொலை செய்துள்ளது தெரிய வந்தது.

நடிகர் விஜயகாந்த் படத்தில்தான் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்களை தட்டி கேட்பார். நிஜ வாழ்க்கையிலும் அவரைப் போலவே வாழ்ந்து ராஜ்குமார் கொலையானது அனகாப்புதூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments