ஐந்தில் வளையாததை ஐம்பதில் வளைத்த ஆசிரியைகள்; 60 வயதிலும் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்லும் பெண்கள்!

0 1970
மாலை நேர வகுப்பில் கல்வி பயிலும் பெண்கள்

தேனி மாவட்டத்தில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் மூலம் படிக்காத ஏழை பெண்களின் கல்விக்கண்களை திறந்து, அவர்களின் அறிவுச்சுடர் வீசச் செய்துவரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும், படிக்கும் பெண்களின் குறையாத ஆர்வத்தையும் விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கல்வி என்பது மனித வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது கல்லாதவர்களுக்கு மட்டுமே தெரியும். இப்பொழுதெல்லாம் மூன்று வயது ஆன குழந்தைகள் கூட பள்ளிப் பேருந்துகளில் தாங்களாகவே சென்று கல்வி பயின்று வரும் நிலையில், "தம்பி இந்த பஸ் எந்த ஊருக்குப் போகுது கொஞ்சம் பார்த்து சொல்லுப்பா" இந்த பஸ் மதுரைக்குப் போகுமா? இந்த பஸ் தேனிக்கு போகுமா? என்று தாங்கள் பயணம் செய்யும் ஊருக்கு போகும் பேருந்தின் பெயர்ப்பலகையைக் கூட படிக்கத் தெரியாமல் அடுத்தவரின் உதவியைத் தேடும் பெண்களின் குரல் இன்னும் ஏதோ ஒரு பேருந்து நிலையங்களில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டு என்ற பழிச்சொல்லை காலமெல்லாம் சுமந்து வந்த இவர்களை அந்த பழியிலிருந்து நீக்கி எழுதப் படிக்க வைத்து அசத்தி வருகிறது தமிழக அரசின் வயது சாரா கற்போம் எழுதுவோம் திட்டம்.

image

தேனி அருகே அழகாபுரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 40 முதல் 60 வயதைக் கடந்த சுமார் 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது போல ஆடிப்பாடி பாடம் நடத்தி அவர்களின் கல்வி வேட்கையைத் தூண்டி ஐந்து வயதில் கற்காமல் விட்ட கல்வியை 60 வயதில் கற்றுத் தேற வைத்துள்ளது அரசுப்பள்ளி பெண் ஆசிரியைகள் குழு.

முதலில் இப்பகுதி சுற்றுவட்டாரங்களில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி பெண் ஆசிரியயைகள் ஒரு குழுவாக ஒன்றிணைந்தனர். தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப்படிக்கத் தெரியாத அனைத்து பெண்களையும் தேடிப்பிடித்தனர். அவர்களை வயது சாரா கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் தலா 10 பேர் வீதம் 3 குழுக்களாக பிரித்து, மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கல்வி கற்க வைத்து அவர்களின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றி வருகின்றனர். இல்லத்தரசிகளும் தங்களது குடும்ப கடமைகளை முடித்து விட்டு மாலை 4 மணி முதல் 7 மணிவரை தவறாமல் ஆஜராகி ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களில் 10க்கும் மேற்பட்டோர் 60 வயதைக் கடந்த முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

image

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புறங்களில் பெண்கல்வி கேள்விக்குறியாக இருந்தது. வீட்டில் உள்ள குழந்தைகளை பராமரிக்கவும், தோட்டக் கூலிகளாக பணிக்கு செல்லவும், ஆடு,மாடு மேய்க்க மட்டுமே இவர்களை பயன்படுத்திய பெற்றோர் படிக்க வைக்கவில்லை. ஆனால் தமிழக அரசின்  கற்போம் எழுதுவோம் திட்டத்தின் மூலம் 30,40 வருடங்களுக்கு முன்பு தொலைந்து போன தங்களது கல்வியறிவை தற்போது மீட்டுக்கொண்டு வந்துள்ளதாக பெண்கள் பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர்.

தங்கள் பெற்றோர் செய்யத் தவறிய கடமையை தற்போதைய தமிழக அரசு செய்து முடித்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவிக்கின்றனர். இப்பொழுதெல்லாம் முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்களில் இவர்களே கையெழுத்து போட முடிகிறது. வெளியூர் செல்லும் பேருந்துகளின் ஊர் பெயர் பலகையை படித்து பிறர் தயவின்றி தாங்ககவே சென்று வர முடிகிறது. வட்டிக்கு கொடுத்தவர்கள் போடும் கணக்கில் அப்படியே வட்டித்தொகையை கொடுக்காமல் கூட்டல்,கழித்தல் கணக்குப் போட்டு வட்டித்தொகையை இவர்களே சொல்லி வட்டிக்கு கொடுத்தவர்களின் வாயை பிளக்க செய்கிறார்கள் இப்பகுதி வயது முதிர்ந்த பெண்கள்.

பொதுவாக ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்று கேள்வி கேட்கப்படுவதுண்டு. ஆனால் முயற்சி செய்தால் ஐம்பதில் மட்டுமல்ல அறுபது, எழுபதுகளிலும் வளைக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர் இப்பகுதி அரசுப்பள்ளி பெண் ஆசிரியைகள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments