ஆசை தீர்ந்ததும் மனம் மாறிய கொஞ்சி அடைக்கான்: வஞ்சம் வைத்து கொலை; உடலை சிமெண்ட் கலவைக்குள் போட்ட கொடூரம்!

0 42370
கைது செய்யப்பட்ட சித்ரா மற்றும் கூலி படையினர்

ஆசை தீர்ந்ததும் மற்றொரு பெண்ணை திருமணம் செய்த மைத்துனரை கூலிப்படை ஏவி கொலை செய்த அண்ணி உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கான். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கேயே சொந்த வீடும் கட்டியுள்ளார். கொஞ்சி அடைக்கான் தன் பெரியம்மா மகனின் குடும்பத்தை ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்து தன் வீட்டில் வசிக்க வைத்துள்ளார். அப்போது, சகோதரரின் மனைவி சித்ராவுக்கும் கொஞ்சி அடைக்கானுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. சகோதரர் கண்டித்தும் கொஞ்சி அடைக்கானும் சித்ராவும் தங்கள் உறவை கைவிடவில்லை. இதனால், சித்ராவின் கணவர் தன் சொந்த ஊருக்கே சென்று விட்டார். சித்ராவும் அவர் குழந்தைகளும் கொஞ்சி அடைக்கானுடன் வசித்தார். இந்த நிலையில், கொஞ்சி அடைக்கானின் பெற்றோர், பழனியம்மாள் என்பவரை கொஞ்சி அடைக்கானுக்கு திருமணம் செய்து வைத்தனர்.image

இவர்களின் திருமணம் 2015 ஆம் ஆண்டு நடந்தது. தன்னுடன் வாழ்ந்து விட்டு, மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததால், சித்ரா கடும் கோபமடைந்தார். மேலும், கொஞ்சி அடைக்கான் கட்டிய ஸ்ரீபெரும்புதூர் வீட்டில் வசிக்கவும் தம்பதியை சித்ரா விடவில்லை. இதனால், காஞ்சிபுரத்தில் செவிலிமேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து கொஞ்சி அடைக்கானும் பழனியம்மாளும் வசித்தனர். இவர்களுக்கு, தனுஷியா என்ற மகளும் உண்டு. இந்த நிலையில், சித்ரா வசித்து வந்த தன் வீட்டை கொஞ்சி அடைக்கான் விற்க முயற்சித்து வந்தார். அண்ணி சித்ராவை காலி செய்யவும் அவரிடம் கொடுத்த பணம் உள்ளிட்டவற்றை கேட்டு கொஞ்சி அடைக்கான் தொந்தரவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தன்னையும் கை விட்டு விட்டு, வீட்டையும் விற்க முயற்சித்ததால் கொஞ்சி அடைக்கானை கொல்ல சித்ரா முடிவு செய்தார்.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற தன் கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று கொஞ்சி அடைக்கானின் பழனியம்மாள் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை மந்த கதியில் நடந்து வந்தது. இதனால், வடக்கு மண்டல ஐ.ஜி சங்கரை சந்தித்து, தன் கணவரை கண்டுபிடித்து தரும்படி பழனியம்மாள் சில நாள்களுக்கு முன் மனு அளித்தார். ஐ.ஜி. சங்கரின் உத்தரவின் பேரில், விசாரணை துரித கதியில் நடந்தது. தொடர்ந்து, சித்ராவிடத்தில் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்ரா வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் கொஞ்சி அடைக்காகை கொலை செய்தது தெரிய வந்தது. இதற்காக, சதி திட்டம் தீட்டி டார்ஜன்குமார் என்பவரை அணுகியுள்ளார்.image

டார்ஜன் குமார் தன் கூட்டாளிகளான விவேக் என்கிற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்ரமணியன், சங்கரநாராயணன் ஆகியோர் மூலமாக கொஞ்சி அடைக்கானை காரில் அழைத்து சென்றுள்ளனர். பின்னர், மண்ணிவாக்கம் மேம்பாலத்தின் கீழே காரில் வைத்து சீட் பெல்ட்டால் கொஞ்சி அடைக்கானின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பிறகு , கொஞ்சி அடைக்கானின் உடலை அமர்ந்தபடி கை கால்களை கட்டி இரும்பு பேரலில் உள்ளே அடைத்து அதற்கு மேல் ஜல்லி கான்கிரீட் போட்டு நிரப்பியுள்ளனர். தொடர்ந்து அந்த பேரலை, சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டு கிராமத்தில் ஒரு கிணற்றில் போட்டு விட்டு சென்று விட்டனர். கொஞ்சி அடைக்கானை கொலை செய்ய கூலிப்படைக்கு சித்ரா ரூ, 5 லட்சம் கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் ஏழுமலை, சித்ரா, ரஞ்சித், டார்ஜன்குமார், விவேக் என்கிற விவேகானந்தன், சதீஷ்குமார், சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணைகாவல் கண்காணிப்பாளர் கார்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் ஆகியோர் முன்னிலையில் போலீசார் மலைப்பட்டு கிராமத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச்சென்று கிணற்றிலிருந்து இரும்பு பேரலை மீட்டனர். கொலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டதால், கான்கிரீட்டுக்குள் எலும்புகள் மட்டுமே கிடைத்ததாக சொல்லப்படுகிறது. அவற்றை பிரேதப் பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான சித்ரா உள்ளிட்ட 7 பேரும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments