மக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகள்: பிரதமர் மோடி பேச்சு
நாடு முழுவதும் உள்ள மக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகளையும் விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களுக்குத் தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதற்காக மத்திய அரசால் மக்கள் மருந்தகம் என்னும் பெயரில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மருந்துக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேகாலயத் தலைநகர் சில்லாங்கில் ஏழாயிரத்து ஐந்நூறாவது மக்கள் மருந்தகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக மக்கள் மருந்தகங்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். தொண்டு செய்வதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
சானிட்டரி நாப்கின்களும் கருவுற்ற பெண்களுக்கு ஊட்டமளிக்கும் மருந்துகளும் மக்கள் மருந்தகங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாகத் தெரிவித்தார். ஆயிரத்துக்கு மேற்பட்ட மருந்தகங்கள் பெண்களால் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்கள் மருந்தகங்களில் 75 ஆயுர்வேத மருந்துகளை விற்க முடிவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
Comments